தமிழே உயர்வுக்கு காரணம்!
வாழ்க்கையைச் சவாலாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு என்றும் வாழ்க்கை சுமையாகத் தெரியாது.


வாழ்க்கையைச் சவாலாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு என்றும் வாழ்க்கை சுமையாகத் தெரியாது. பக்குவமான வாழ்க்கை நெறிகளை மாணவப் பருவத்தில் கற்று கொண்டு செயல்பட்டால் எந்தத் துறையிலும் எப்போது சாதிக்கலாம்.
சென்னையில் கல்வி முடித்த பிறகு, அரசு வானொலி, தொலைக்காட்சியில் செய்திக் குழு தலைவராகப் பணியாற்றி, பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் அரசு செய்தியாளராகவும், தூர்தர்ஷன் செய்திக் குழு தலைவராகவும், பத்திரிகை தகவல் அலுவலகத்தில் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார் கே. கணேசன். தற்போது இந்தியப் பத்திரிகைகள் பதிவாளர் பொறுப்பு வகித்து வருகிறார். தனது வாழ்க்கையின் உயர்வுக்குத் தமிழ் மொழி தான் காரணம் என்று ஆணித்தரமாகப் பேசும் அவர் "தினமணி' இதழுக்கு அளித்த பேட்டி.
தினமணி: நீங்கள் கற்ற வாழ்க்கைத் தமிழ் குறித்து...?
கணேசன்: லயோலா கல்லூரியில் நான் பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பை முடித்தேன். நான் படித்த பொருளாதாரம் பட்ட மேற்படிப்பு எல்லாம் வாழ்க்கை நடத்துவதற்குத்தான் பொருளாதார ஆதரவு அளித்தன.
ஆனால் வாழும் நெறியைக் கற்றுக் கொடுத்தது எனது தமிழ்மொழிதான். தமிழ் ஆசிரியர்கள். தமிழ் இலக்கியத்துடன் தொடர்பு கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்குக் கற்றுத் தந்தனர். தமிழ் ஆசிரியர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
எதிர்கால வாழக்கையை இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழும் பாங்கைக் கற்று கொடுத்தார்கள். அதைத்தான் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன். எனது உயர்வுக்கு அதுவே காரணம்.
தினமணி: இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெறுவது லட்சியமாக இருந்ததா?
கணேசன்: கல்லூரியில் சேரும் வரை இலக்கு எதுவம் இல்லாமல் இருந்தேன். பட்டப் படிப்பு முடித்தவுடன் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் முதல் முறையே தேர்வாகிவிட்டேன். தேர்வு முடிந்த உடன் தகவல் ஓளிபரப்புத் துறை அமைச்சகத்தில் பணி கிடைத்தது.
எனக்கு பேச்சு, எழுத்து மீது மாணவ பருவத்தில் இருந்தே ஆர்வம் இருந்தது. அதனால், அகில இந்திய ரேடியோ, தூர்தர்ஷன், கள விளம்பரத் துறை, சென்சார் போர்டு ஆகியவற்றில் பணியாற்றினேன்.
தினமணி: பணியாற்றியதில் மறக்க முடியாதது?
கணேசன்: இந்திய ஆட்சி பணியில் தேர்வாகியுடன் மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தான் கள விளம்பரத்துறையின் பணி. எனது பயிற்சியை முடிந்தவுடன் நான் சந்தித்தது அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான். காலைப் பொழுதில் அவரது இல்லத்தில் எங்களை அழைத்துப் பேசினார்.
முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடன் தென்னாப்பிரிக்கா சென்றேன். அங்கு மஹாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்ட பீட்டர் மேரீஸ் பெர்க் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டோம்.
அது இன்னும் நீங்கா நினைவாக உள்ளது. தென்னாப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவை அகில இந்திய வானொலி செய்திப் பிரிவுக்காகப் பேட்டி கண்டேன்.
அதன் பின்னர் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டேன். அதற்கு நான் தென்னாப்பிரிக்கா பயணம் உறுதுணையாக இருந்தது.
செய்தியாளர் என்ற முறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோருடன் பயணம் சென்றிருக்கிறேன்.
அதைப் போல் இலங்கைக்கு இந்திய அமைதிப் படை ஆற்றிய பணிகளை அறிவதற்காக தூர்தர்ஷன் சார்பில் இலங்கையின் யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளேன்.
தினமணி: பணிகளில் நிறைவைத் தந்தது எது?
கணேசன்: கள விளம்பரத் துறை துறையில் கிராமங்களில் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அப்போது, மத்திய அரசின் பிரசார வாகனத்தைப் பார்த்த உடன் மக்கள் சென்றுவிடுவார்கள். ஆகையால், வெறும் பிரசாரம் மட்டும் செய்யாமல் மக்கள் மத்தியில் ஒருவனாகக் கலந்து அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்தோம். அது பலன் தந்தது.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அயோடின் உப்பு பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது ஒரு உப்பு பாக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசமாக அளித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். 1999 -2004 ஆண்டுகள் வரை மேற்கொண்ட பணி மன நிறைவை அளித்தது.
தினமணி: தற்போது உள்ள இந்தியப் பத்திரிகைகள் பதிவாளர் பணி குறித்து..?
கணேசன்: இந்தியாவில் சுமார் 86 ஆயிரம் நாளிதழ், வார இதழ்கள் ஆகிய அச்சடிக்கப்பட்டு வெளியாகும் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் உள்ளன. இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் பத்திரிகையின் வளர்ச்சி ஆரோக்கியமாகத்தான் உள்ளது. இதற்கு பொருளாதார நடவடிக்கைகள், உலக மயமாக்கம் ஆகியவையும் காரணம். சிறிய, நடுத்தர பத்திரிகைகளின் பதிவும் அதிகரித்து வருகிறது.
புதிதாக இணையதள தொலைக்காட்சிகள், தொலைக்காட்சிகள் வந்தாலும் பத்திரிகைகள் ஆரம்பிப்பதற்காக பதிவு கோரி, தினந்தோறும் விண்ணப்பங்கள் வருகின்றன. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி செய்தி ஊடகங்களால் பத்திரிகைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
வட்டாரப் பத்திரிகைகளின் வளர்ச்சி நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மனுக்கள் புதிய தலைப்பு கோரி விண்ணப்பிக்கப்படுகின்றன. அதில் சுமார் 5 ஆயிரம் வரை உரிமம் பெறுகின்றன.
தினமணி: இந்திய பத்திரிகை பதிவின் வருங்கால திட்டங்கள்?
கணேசன்: மாவட்ட நீதிபதிக்கு அளிக்கப்படும் விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு, தபால் மூலம் எங்களுக்கு அனுப்பப்படுகிறது. 12-வது ஐந்தாண்டு திட்டத்தின்படி, இந்தக் கடிதப் போக்குவரத்து முறையில் சில மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் உள்ளனர். அவர்களை மின்னணுவில் இணைக்க புது முயற்சிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...