

மார்கெட்டிங் உத்யோகத்தில் இருக்கும் சீனுவுக்கு இந்த வருடம் அதிர்ஷ்ட வருடமாக அமைந்து விட்டது. கடந்த வருடங்களில் மாங்கு, மாங்கென்று மாடாய் உழைத்தாலும் ஊக்கத்தொகை என்ற பெயரில் வெறும் 10,000, 20,000 ஐத் தாண்டி நயா பைசாவைக் கண்ணில் காட்டாத நிறுவனம். வருட இறுதியில் எந்தக் கடவுள் வந்து கனவில் உத்தரவிட்டாரோ தெரியவில்லை. வரி பிடித்தம் போக முழுதாக 2 1/2 லட்சத்தை சீனுவின் கணக்கில் ஏற்றி இருந்தார்கள். சீனுவுக்கு தட்டாமலை சுற்றாக் குறை! உபரியாக வந்த அந்தப் பணத்தை என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டான். பல ஐடியாக்கள் மூளையில் மின்னி மறைந்தாலும், கடைசியில் பல மாதங்களாக மனைவியின் ஏக்கமாக இருந்த ‘நமக்கே நமக்கென்று ஒரு கார்’ எனும் கனவை நினைவாக்கி விடுவது என்று முடிவு செய்தான்.
முடிவு செய்த போது தெரியவில்லை அதில் எத்தனை சிக்கல்கள் எல்லாம் வரப்போகின்றன என்று;
முதலில் கார் வாங்குவது என்றால் என்ன கார் வாங்குவது?
தன் பாட்டில் தனக்குப் பிடித்த காரை புக் செய்து விட்டால் பிறகு அது மனைவிக்குப் பிடிக்கா விட்டால் என்ன செய்வது?
உடனே தனது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு எந்த காரை பதிவு செய்யலாம் என்று சீனு யோசிக்க ஆரம்பித்தான்.
மாமாக்கள், சித்தப்பாக்களிடம் கலந்து பேசியதில், அம்மா, அப்பா, உற்றார் மற்றும் குடும்பத்துடனான தொலைதூரப்பயணத்துக்கும் உகந்ததாக இன்னோவா, செவர்லே டவேரா, மஹிந்த்ரா ஸ்கார்பியோ, டொயோட்டா குவாலிஸ் என்று சிலவற்றைப் பரிந்துரைத்தார்கள். அதெல்லாம் கதைக்காகது.
சீனுவுக்கோ பெரிய கார் வாங்குவதில் விருப்பம் இல்லை. ஏனெனில் அவனது வீட்டின் போர்டிகோவில் சிறிய காரை பார்க் செய்வதே கொஞ்சம் கஷ்டமான காரியம். சமீபத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட ஆணையின்படி கார் பார்கிங் இல்லாதவர்கள் கார் வைத்துக் கொள்ள உரிமை இல்லை எனும் பிரம்மாஸ்திரம் வேறு சீனுவைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. வாங்கப் போகிற கார் அவனது பட்கெட்டுக்குள் அடங்குகிறதோ இல்லையோ, முதலில் சீனுவின் வீட்டு போர்டிகோவுக்குள் அடங்க வேண்டுமே! போதாக்குறைக்கு மனைவிக்கும், மகளுக்கும் கார் ஸ்டைலிஷ் ஆகவும் இருக்க வேண்டும். அதே சமயம் சீனுவின் பட்ஜெட்டுக்குள்ளும் அடங்க வேண்டும். அப்படிப்பட்ட கார் எது?
‘பேசாம மாருதி ஸ்விஃப்ட் வாங்கு மச்சி’ மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு இதான் சரியான சாய்ஸ்!
'ஃபீல்டுக்கு எப்பவும் உனக்கு டூ வீலர் தான் பெஸ்ட், குடும்பமா சும்மா சிட்டிக்கு உள்ள போக வரத்தானே உனக்கு கார் தேவை. அப்போ மாருதி ஆல்டோ வாங்கு. சீப் & பெஸ்ட்.'
‘வொய் டோண்ட் யூ ட்ரை ஹூண்டாய் கிராண்ட் 10, ஹூண்டாய் ஐ 10?’
‘ஹேய்... நிஸான் மைக்ரா கூட ஸ்டைலாத்தான் இருக்கு சகோ!’
‘பாஸ் பேசாம மாருதி வேகனார் வாங்கிடுங்க.’ மனக்கண்ணில் சீனுவின் 8 வயது மகள் ‘ஐயே எனக்கு வேண்டாப்பா, அது சோப் டப்பாவாக்கும்! என்று பழிப்புக் காட்டினாள்.
மனைவியின் பாட்டி கூட 'ஏன்டாப்பா... என்ன இருந்தாலும் எங்கப்பா வச்சிருந்த இம்பாலா மாதிரி வருமா? என்று சைடு வாக்கில் போட்டுத் தாக்க; ஏம் பாட்டி உங்கப்பா மாட்டு வண்டின்னா வெச்சுருந்தார்.' என்று உறவுகள் கலாய்க்க;
எல்லோரிடமும் கேட்டுக் கலந்த பின் கடைசியாகத் தான் சீனு, பத்மாவிடம் வந்தான். சாட்ஷாத் அவனது தர்ம பத்தினியே தான்.
அவள் அவனை குமட்டில் இடித்து, தலையில் நங்கென்று ஒரு குட்டி குட்டி விட்டு அவன் அலற, அலற கையைப் பிடித்து முறுக்கி
'மண்டூகப் புருஷா... நாம கார் வாங்கறதை ஊரெல்லாம் தண்டோரா போடனுமா உனக்கு? அதான் கூகுளாண்டவர் இருக்காரே. அவராண்ட போய் இன்னது வேணும்னு பொட்டிய ஒரு தட்டு தட்டினா, பதில் வந்து கொட்டப் போறது.'
பத்மா பொட்டியைத் தட்டி கொட்டிய பதில்களில் 2017 பெஸ்ட் செல்லிங் கார்கள் இது தான்.
கார் வாங்க நினைக்கும் மகானுபாவர்களே உங்களுக்கும் கூட இது உதவலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.