ஆனால், அத்தனை இழப்பின் பின்னும் எனது வெற்றியின் மீது நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவிக்க என் அம்மா இருக்கிறார் என்ற நம்பிக்கையே என்னை மேலும், மேலும் இத்துறையில் இதுநாள் வரையிலும் ஊக்குவித்துக் கொண்டே இருந்தது. இன்று, நான் எனது அம்மாவை மட்டுமே இழக்கவில்லை, எனக்கான ஒரு நம்பிக்கையான காத்திருப்பையும் தொலைத்து விட்டேன். அவரது ஆன்மா சாந்தி அடைவதற்கு இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
2001-ஆம் ஆண்டு தமிழக அரசிடம் இந்த திட்டத்தை சமர்ப்பித்தோம். சமர்ப்பித்த இரண்டு நாட்களில் தலைமைச்செயலாக கதவுகள் திறந்தன. அந்த அளவு சிறப்பாக ஆரம்பித்த எங்கள் பயணம் 16 ஆண்டுகளை நெருங்கிய நிலையில் இன்றும் கூட அதன் துவக்க நிலையிலே தான் இருக்கிறது. இது வரையிலும், அதில் எந்த முன்னேற்றமோ அல்லது அரசின் முன்னெடுப்புகளோ இல்லை. ஒரு திட்டம் எத்தனை நல்ல திட்டமாக இருந்தாலும் சரி, அதைச் செயல்படுத்தும் முறையில் இந்த நாடு கடைபிடிக்கும் மந்தப்போக்கைக் கண்டு என்னைப் போன்ற தன்னலம் கருதா தொழில்நுட்ப வல்லுநர்களின் மனம் படுகாயமுற்றிருக்கிறது. ஆனாலும், இவ்விஷயத்தில் எனக்கு இருந்த பொறுமை எனது குழுவில் இருக்கும் நண்பர்களைப் பல முறை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது..
எனது இந்த பொறுமைக்கான பலம், என் தாயார்! அவர் நலமாக இருப்பார். எங்கள் வெற்றியை கண்டு பெருமிதம் கொள்வார். மன நிறைவு அடைவார் என்கிற நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கை இன்று தகர்ந்துவிட்டது.
ஒரு மகனாக என் தாய்க்கு இனி நான் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று தான். விரைந்து செயல்பட்டு அவர் செய்த தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் ,
அதற்கான முதற்கட்ட முயற்சி தான் இந்த பிரஸ் மீட்.
நான், இந்த அரசாங்கத்திடம், குறிப்பாக... மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் முன் வைக்கும் கோரிக்கைகள் இவைதான்:
இளைஞர்களே வாருங்கள்... நாட்டை முன்னேற்றுங்கள்! என்று கோரிக்கை வைக்கின்றீர்கள், அதனால் ஈர்க்கப்பட்டு, நாட்டிற்கு சேவை செய்ய வரும் எங்களை போன்றோரின் உழைப்பை, திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் இந்த நாடு இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை. தற்போதைய அமைப்பை சீர் செய்யாமல் இளைஞர்களை நாட்டிற்குப் பணிபுரிய அழைக்காதீர்கள். என் தாய்க்கு, எங்கள் குடும்பத்திற்கு நேர்ந்த இந்த அநீதி, அவலம் வேறு எவர்க்கும் ஏற்படக்கூடாது.
இந்தியாவின் இன்றைய முக்கியப்பிரச்னைகளில் முக்கியமானது விவசாயம். அதற்கு தீர்வை உருவாக்கி, செயல்படுத்தி, முப்பதுக்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் மதிப்பீடு வாங்கி மாநில, மத்திய அரசிடம் திட்டத்தை சமர்ப்பித்தும் அரசு மவுனம் காப்பது, விவசாயப்பிரச்னைக்கு பேச்சளவில் காண்பிக்கப்படும் வேகம், செயல் அளவில் இல்லையோ! என ஐயங்கொள்ளச் செய்கிறது.
எங்களது இந்த கருத்திற்கு முரண்பட்டு, விவாதிக்க விரும்புவோர் எங்கள் கிராமத்திற்கு வாருங்கள்! விவசாயிகளுடனும், கிராம மக்களுடனும் காத்திருக்கின்றோம்.