பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த 9 வயதுச் சிறுமியின் வாழ்நாள் துயர் தீரும் நாள்... எந்நாளோ?!

இதோ இன்றும் கூட தங்களது மகளின் ஜீவ மரணப் போராட்டதில் அவளது உயிர் காக்க பாகிஸ்தான் அரசு ஏதாவது உதவி செய்யுமா?! என்ற ஏக்கம் கலந்த கோரிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த 9 வயதுச் சிறுமியின் வாழ்நாள் துயர் தீரும் நாள்... எந்நாளோ?!

அஃப்சீன் ஹும்பர்...

பாகிஸ்தானைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி.

9 வயதுச் சிறுமிகள் என்னவெல்லாம் செய்வார்கள்?!

வால் முளைக்காத குட்டிக் குரங்குகளாய், பறக்கும் தும்பிகளாய் அவர்களது இனம் புரியா குதூகலத்துக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களே போதும். சிட்டுக்குருவிகள் போல ஓரிடத்தில் நில்லாது பறந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அஃப்சீனின் புகைப்படத்தைப் பாருங்கள், பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவளுக்கு, இயல்பான பிற பெண் குழந்தைகளைப் போன்ற கழுத்து இல்லை. அவளது தலை அவள் பிறந்த 8 ஆம் மாதத்தில் இருந்து தொடர்ந்து 180 டிகிரி சாய்வான நிலையில் தொங்கிப் போய் தான் இருக்கிறது.

பிறக்கையில் அஃப்சீன் மற்றெல்லாப் பெண்குழந்தைகளையும் போலத்தான் பிறந்தாள். இயல்பான துறு, துறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை 8 ஆம் மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு வெளியே தனது சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் கீழே விழுந்து அவளுக்கு கழுத்தில் பலமான அடி பட்டிருக்கிறது. அதோடு சரி. அதன் பின் அஃப்சீனின் கழுத்து தலையில் நிற்கவே இல்லை. இந்தப் புகைப்படத்தில் இருப்பதைப் போன்ற நிலை தான் கடந்த 8 வருடங்களாகத் தொடர்கிறது.

குழந்தையாக இருக்கும் போது ஆரம்பத்தில் அஃப்சீனின் குறைபாட்டை அவளது பெற்றோரால் இனம் காண முடியவில்லை. குழந்தை கழுத்து வலியால் அழுவதாகக் கருதி உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டியிருக்கின்றனர். உள்ளூரின் சிறிய மருத்துவமனை அது, அங்கு அஃப்சீனின் புது விதமான தசைக்குறைபாடு நோய்க்கு பெரிதாக சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை. அங்கிருந்த மருத்துவர் அஃப்சீனை நகரத்திலிருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்துப் பார்ப்பதே பலனளிக்கக் கூடும் என அவளது பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது ஆலோசனை எல்லாம் சரி தான். ஆனால் பெரிய மருத்துவமனை சென்று சிகிச்சை பெற அவர்களிடம் போதுமான பொருளாதார வசதி இருக்க வேண்டுமே?! 

அஃப்சீனின் தந்தை அல்லா ஜுரியோ, தாயார் ஜமீலன் இருவருமே 50 வயதைக் கடந்தவர்கள், அவர்களுக்கு அஃப்சீனைத் தவிர்த்து மேலும் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே அவர்கள் தங்களது மூத்த மகனின் வருமானத்தை நம்பியே இருக்கிறார்கள். இந்நிலையில் மகளுக்கான சிகிச்சைக்கு பணத்துக்கு எங்கே போவார்கள்? 

இந்நிலையில், அஃப்சீனின் வித்யாசமான உடல்நலக் குறைபாட்டால், அவளது தோற்றம் வழக்கமான சிறுமிகளைப் போல இல்லாமல் தலை தொங்கிப் போயிருப்பதைக் காரணமாக வைத்து அக்கம் பக்கத்திலிருக்கும் அவள் வயதொத்த பிற சிறுமிகளும் கூட அவளோடு விளையாட விரும்புவதில்லை. காரணம் அச்சம். இப்படித் தொடரும் வாழ்க்கையில் சிறுமி அஃப்சீனால் தனியாகத் தனது வேலைகள் எதையும் செய்து கொள்ள முடியாது. அவளது எல்லா வேலைகளுக்குமே அம்மா அல்லது உடன் பிறந்தோரது உதவி அவளுக்குத் தேவைப்படுகிறது. இதனால் மனமுடைந்து தனிமைப்பட்டுப் போன அந்தச் சிறுமி இப்போதெல்லாம் தனது உடன்பிறந்தவர்களில் இளையோருடன் தவிர வேறு எவருடனும் விளையாடுவதே இல்லை. சொல்லப்போனால் தனது நாளின் முக்கால்வாசி நேரமும் அவள் வீட்டின் மூலையில் சோகமாக உட்கார்ந்திருப்பதே அதிகமாகி வருகிறது. தற்போது 9 வயதாகும் அவளுக்கு, அவள் வளர, வளர அவளது தசைக்குறைபாட்டு நோயும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. தினமும் தாங்கவியலாத கழுத்து வலியால் நொந்து போய் அவதிப்படுகிறாள்.

மைத்தியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அஃப்சீனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திலீப் குமார் குறிப்பிட்டவாறு, அஃப்சீனுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு காரணம் ஒழுங்கற்ற முதுகெலும்பு அல்லது தசைநார் கோளாறாக இருக்கலாம். அதைக்கூட மருத்துவர்கள் அவளை தீவிர மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்திக் கண்டறிவதே முழுமையான பலன் தரக்கூடும். எனவே நான் அவளை கராச்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயர்தரமான உயிர்காக்கும் சிகிச்சை பெறச் சொல்லி பரிந்துரைத்தேன். ஆனால், சிகிச்சைக்குத் தேவையான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லாத காரணத்தால் அஃப்சீனின் நிலை மேலும் மேலும் கவலைக்கிடமாகிக் கொண்டிருக்கிறது. என்றார்.

தங்களது 9 வயது மகளுக்கு வந்திருக்கும் இந்த வித்யாசமான தசைக்குறைபாட்டு பாதிப்பை போக்கி அவளை இயல்பான பிற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாடித் திரிய வைக்கும் ஆர்வமும், ஆதங்கமும் அஃப்சீனின் பெற்றோருக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தும் கூட வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அவர்களால் என்ன செய்து விட முடியும்.

இதோ இன்றும் கூட தங்களது மகளின் ஜீவ மரணப் போராட்டதில் அவளது உயிர் காக்க பாகிஸ்தான் அரசு ஏதாவது உதவி செய்யுமா?! என்ற ஏக்கம் கலந்த கோரிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அஃப்சீனின் துயரம் தீரும் நாள் எந்நாளோ?!
 

Concept & Image Courtesy:  Zee news.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com