அன்பை விதையுங்கள்! ஆனந்தத்தை அறுவடை செய்யுங்கள்!!
நம்முடைய பிரிவு மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் என்ற நிலை ஏற்படுமானால், நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று அர்த்தம்.


‘உனக்கு விஷயம் தெரியுமா! முன்னாள் உயர் அதிகாரி மிஸ்டர் வேம்பு ஆஸ்பத்திரில அட்மிட் ஆகியிருக்காறாம்', என்றார் ஒரு நிறுவனத்தின் பணியாளர்.
‘அப்படியா! என்னாச்சு அவருக்கு?' என்று விசாரித்தார் மற்றொரு பணியாளர்.
‘அவருக்கு குடல்ல கேன்சராம்! இனி தேறாதுன்னு பேசிக்கிறாங்க. கொஞ்சநஞ்ச ஆட்டமாடா ஆடினான்!'
‘அப்படியெல்லாம் சொல்லாதே! நீ சொல்றது உண்மையா? யார் உனக்கு சொன்னது?'
‘விஷயம் காத்து வாக்குல காதில விழுந்தது. கேட்க ஆளில்லைங்கற நினைப்பில ஆட்டம் போட்டான். இப்ப என்னாச்சு! கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்காம். ரொம்ப நாள் ஓடாதுன்னு பேசிக்கிறாங்க'.
‘அது சரி. அவருக்கு கேன்சர் வந்தது உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்னா, உனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?'
‘எனக்கு மகிழ்ச்சியெல்லாம் இல்லை. ஆனா நான் வருத்தப்படலை'.
பேச்சு தொடர்ந்தது. நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இரண்டு.
ஒன்று, மிஸ்டர் வேம்பு என்ற நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரிக்கு உடல் நலமில்லை. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக, மிஸ்டர் வேம்பு பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பாக பணியாற்றியிருக்கிறார். கண்டிப்பு கொஞ்சம் எல்லை மீறி பணியாளர்களின் தனிப்பட்ட எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார்.
ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பல விஷயங்களில் உயரதிகாரி - பணியாளர் உறவு மிகவும் முக்கியமானது. ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கணும். பாடுகிற மாட்டை பாடித்தான் கறக்கணும் என்ற பழமொழியை கேள்விப்பட்டிருக்கிறோம். ‘அது ஆடுகிற மாடாக இருந்தாலும் சரி, பாடுகிற மாடாக இருந்தாலும் சரி, அடித்து உதைத்தால் கறந்துவிடலாம்', என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கையிருக்கும் ஒருவர் நிறுவனத்தின் உயரதிகாரியாக இருந்தால், நிறுவனத்திற்கு மட்டுமல்ல, பணியாளர்களுக்கும் அது கெட்டகாலம்தான். அப்படிப்பட்ட அதிகாரிதான் மிஸ்டர் வேம்பு. யாராக இருந்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக கேள்விகளை கேட்டு மடக்குவார். பேச்சில் எப்போதும் நக்கலும், நையாண்டியும் கலந்திருக்கும். யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பார். எல்லோர் முன்னிலையிலும் அடுத்தவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வார். அதிகாரம் அவர் கையிலிருப்பதால், ‘எதற்க்கு வம்பு', என்று யாரும் அவரை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான நிறுவன வாழ்க்கை சுழற்சியில் இப்படி ஒரு அதிகாரியை தாண்டியே நிறுவனம் பயணிக்கிறது.
இந்த விஷயத்தை தொடரும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.
ஒரு நாடு. அந்த நாட்டு அரசர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோரிடமும் அன்பாக இருக்கும். ஒரு நாள் அது இறந்து போனது. அரசன் முதல் மக்கள் வரை எல்லோரும் அந்த நாய்க்காக கண்ணீர் விட்டனர்.
‘இந்த நாய் மிகவும் விசுவாசமாகவும், அன்போடும் இருந்தது. இதன் உடலை குப்பையில் வீச வேண்டாம். நமது தோட்டத்தில் இருக்கும் மாமரத்தின் கீழ் புதையுங்கள். இறந்த பின்னரும் உரமாக பயன்படட்டும்', என்று சொன்னார் அரசர்.
இறந்து போன அரண்மனை நாய் அலங்கரிக்கப்பட்டது. மாலை, மரியாதையோடு ஊர்வலமாக புறப்பட்டது. தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அரசன் புறப்பட்டான். வழியில் திடீரென்று தெரு நாய் ஒன்று ரதத்தின் சக்கரத்தில் மாட்டி உயிரிழந்தது. அரசன் வருத்தமடைந்தான். இறந்து போன நாயைப் பார்த்து மக்களும் பரிதாபப்பட்டனர். ரதத்தில் அடிபட்டு இறந்த தெரு நாயையும் அரண்மனை தோட்டத்தில் புதைக்க ஆணையிட்டான் அரசன். அங்கிருந்து புறப்பட்டான்.
அப்போது மக்கள் அரசனிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.
‘அரசே! ஒரு வெறிபிடித்த நாய் வருவோர், போவோரையெல்லாம் கடித்து குதறுகிறது. அந்த நாயிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்', என்று மக்கள் முறையிட்டனர்.
காவலர்களை அழைத்து நாயை கொல்ல உத்தரவிட்டான் அரசன். காவலர்கள் கையில் பெரிய உருட்டுக் கட்டையுடன் நாயைத் தேடி புறப்பட்டனர். வழியில் தென்பட்டது வெறி நாய். உருட்டுக் கட்டையால் ஓங்கி அடித்தார்கள். நாய் கீழே விழுந்தது. மூக்கிலும், வாயிலும் ரத்தம் வழிந்தது. உயிருக்கு போராடியது. காவலர்கள் வெறி நாயையும் அரண்மனை தோட்டத்திற்கு எடுத்து வந்து மரத்தடியில் போட்டார்கள்.
அரண்மனை நாய் மாலை மரியாதையுடன் பட்டுத் துணியில் கிடத்தப்பட்டிருந்தது. பக்கத்தில் தெரு நாய். அதன் பக்கத்தில் வெறி நாய் வாயில் ரத்தம் வழிய உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த அனைவரும் வெறி நாயின் இறப்புக்காக காத்திருந்தனர். மக்களோடு அரசனும் மரத்தடியில் காத்திருந்தான்.
‘இது எப்ப சாகிறது. எப்ப நாம மத்த வேளையை பார்க்கிறது. கட்டையால இன்னும் நாலு அடி போடுடா. அவனவனுக்கு வீட்டில வேலை இருக்கில்ல', என்றார் ஒரு பெரியவர்.
‘ஆமாம்! ஓங்கி நாலு அடி வையுங்கப்பா! ஆயிரம் வேலையிருக்கு. போயி பொழப்பை பார்க்கணும்', என்றான் மற்றொருவன்.
இதைக் கேட்ட அரசன் அதிர்ச்சியடைந்தான்.
‘இறப்பை எதிர் நோக்கியிருக்கும் ஒரு உயிருக்காக யாரும் அழாவிட்டாலும் பரவாயில்லை, பரிதாப உணர்வுகூட அவர்களுக்கு ஏற்படவில்லையே! மக்கள் அவ்வளவு கொடூரமானவர்களாக மாறிவிட்டார்களா?' என்று கேட்டான் அரசன்.

அருகில் இருந்த சாது பேசினார்.
‘அரசே! ஒருவரின் அன்பைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு புரியவைக்கிறது. அரண்மனை நாய் எல்லோரிடமும் அன்போடு பழகியது. அதன் பிரிவை நினைத்து அனைவரும் வருத்தப்படுகிறார்கள். இது அந்த நாய் அரண்மனையில் வசித்தது என்பதற்காக கிடைத்த மரியாதை அல்ல. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்தியதற்காக கிடைத்த மரியாதை. இந்த மரியாதை தெரு நாய்க்கு கிடைக்கவில்லை. ஆனால் அனுதாபம் கிடைத்தது. தெரு நாய் எல்லோரிடமும் பாசமுடன் இருந்ததா என்பதைப் பற்றி தெரியவில்லை. ஆனால், அது யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. அதனால், அது இறந்தவுடன் அதன் மீது மக்களுக்கு பரிதாபமும், அனுதாபமும் ஏற்பட்டது. ஆனால், வெறி நாயின் நிலை அப்படியில்லை. அதற்கு மரியாதையோ, பரிதாபமோ, அனுதாபமோ கிடைக்கவில்லை. காரணம், வாழ்ந்த காலத்தில் எல்லோருக்கும் கெடுதலை மட்டுமே செய்திருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் வெறுப்பை சம்பாதித்தது. இதனால், இன்று மக்கள் அதன் இறப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். மக்கள் கொடூரர்களாக ஆகிவிட்டார்கள் என்பதல்ல இதன் அர்த்தம். அராஜகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்கள் என்பதே அதன் பொருள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
இந்தக் கதை நாம்மைச் சுற்றி வலம்வரும் பல அராஜக அதிகாரிகளுக்கும், எதிர்கால அதிகாரியாக தன்னை வளர்த்துக் கொள்ள துடிக்கும் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புவோம்.
சுவற்றில் சிகப்பு பந்தை வீசியெறிந்தவனிடம் திரும்ப சிகப்பு பந்து மட்டுமே வரும். இதைப் புரிந்து கொண்டவர்கள் பணியிடத்தில் நல்ல உறவை வளர்த்துக் கொள்வார்கள். எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அதிகாரமும், கோபமும் நமக்கு நிரந்தரம் என்று நினைக்கும் பல அதிகாரிகளின் நிலை இப்படித்தான் அனுதாபமில்லாமல் முடிந்து போகும். இதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
அப்படியென்றால், பணியிடத் தவறுகளை அதிகாரி கண்டிக்கக்கூடாதா? நிச்சயமாக கண்டிக்கலாம். நடவடிக்கையும் எடுக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் பணியாளர் பாதிக்கப்படக்கூடாது. அதிகாரி போகிற போக்கில் செய்யும் பல நல்ல விஷயங்கள் பணியாளர் நினைவில் நிற்பதில்லை. மாறாக, மிகச் சிறிய தனிப்பட்ட முறையிலான கெடுதல்கள் பாதிக்கப்பட்டவரின் மூளையின் ஓரத்தில் நிரந்தர இருக்கையை போட்டு அமர்ந்து கொள்கிறது.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களை திருத்துவது நம் வேலையல்ல. அவர்களின் அழிவிற்காக காத்துக் கொண்டிருப்பதும் நமது வேலையல்ல. நமக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அவர்களை கையாள்வது அவசியம். அடுத்தவர் வேண்டுமென்றே தவறு செய்திருந்தாலும், அவரின் அழிவு நமக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மகிச்சியை கொடுப்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அது நமது மனத்தில் புதைந்து கிடக்கும் வெறுப்பின் வெளிப்பாடே. இது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.
ஆடிய அட்டமெல்லாம் முடிந்து, உடல் ஒடுங்கி மேற்கூரையின் விரிசல்களை நொடிக்கொரு தடவை எண்ணிக் கொண்டிருப்பவரை ‘ஜெயித்துவிட்டோம்' என்று யாரும் மார்தட்டிக்கொள்வதில்லை. ஆகையால், அடுத்தவர்கள் செய்யும் பெரிய கெடுதல்களைக்கூட மறக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம்.

யார் யாரால் வீழ்த்தப்பட வேண்டும், யார் மூலம் வெற்றி ஈட்டப்படவேண்டும் என்பதை காலமே நிர்ணயிக்கிறது. இதில் மூக்கை நுழைக்கும் நபர்கள் எல்லோருமே காலத்தின் கருவிகள். இந்து மதத்தின் அடிப்படையான இந்தக் கருத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அடுத்தவரின் வீழ்ச்சி மகிழ்ச்சியை கொடுக்காது. மாறாக மன முதிர்ச்சியையே கொடுக்கும்.
பணியாற்றிய இடத்திலிருந்து விடைபெற்றுச் சொல்லும் போது சுகமான நினைவுகளோடு பயணத்தை தொடங்க வேண்டும். எப்போது திண்ணை காலியாகும் என்று மற்றவர்கள் நினைக்காத வகையில் நான் பணியாற்றியிருந்தால், நாம் ஒரு வெற்றியாளர்தான்.
நம்முடைய பிரிவு மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் என்ற நிலை ஏற்படுமானால், நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று அர்த்தம். ஆகையால், அன்பை விதையுங்கள். ஆனந்தத்தை அறுவடை செய்யுங்கள். முடியவில்லையென்றால், அனுதாபத்தையாவது அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம். அப்படியில்லாமல், வெறுப்பை மட்டுமே அறுவடை செய்யும் நிலை ஏற்படுமானால், நாம் தோற்றுப் போய்விட்டோம் என்று அர்த்தம்.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...