நில்லுங்கள்! சற்று இவர்களையும் கவனியுங்கள்!

'குழந்தை தொழில்முறைக்கு எதிரான உலக தினம்’ இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
நில்லுங்கள்! சற்று இவர்களையும் கவனியுங்கள்!

'குழந்தை தொழில்முறைக்கு எதிரான உலக தினம்’ இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை பருவத்தில் நாம் செலவிட்ட குதூகலமான நாட்களையும், குறும்பும், விளையாட்டும் நிறைந்த நினைவுகளையும், தருணங்களையும் சுவாரஸ்யத்தோடு எண்ணிப் பார்த்து நாம் கொண்டாடுகிறபோது, நினைத்துப் பார்ப்பதற்கு 'குழந்தை பருவம்’ என்பதே இல்லாத அல்லது அதைத் தொலைத்துவிட்ட குழந்தைகள் ஏராளமாக இருக்கின்றனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சீருடை அணிந்து, புத்தகப் பைகளை எடுத்துக் கொண்டு கல்வி கற்க பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக, செங்கல் தயாரிக்கவும், போர்வை, விரிப்புகளை நெய்யவும், ரத்தினக் கற்களை பாலிஷ் செய்யவும், பீடி சுற்றவும், பட்டாசுகள் மத்தாப்புகளில் வெடி மருந்து தூள்களை திணிக்கவும் மற்றும் இது போன்ற பல கடினமான வேலைகளை செய்வதற்காக கட்டாயத்தின் பேரில் இக்குழந்தைகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கொத்தடிமை தொழில்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற பல தொழில் நிறுவனங்களில் மற்றும் தொழிற்சாலைகளில் இந்த அப்பாவி குழந்தைகளும் பலர் இருக்கின்றனர்.

7 வயது சிறுவனாக இருந்தபோது மத்திய இந்தியாவில் ஒரு பலகார கடையில் வேலை செய்வதற்காக அர்ஜூன் அனுப்பப்பட்டான். இப்போது அவனுக்கு 16 வயதாகிறது. அந்த பலகாரக் கடை முதலாளியிடம் இவனது மாமா வாங்கிய 1000 ரூபாய் கடனிற்குப் பதிலாக ஒரு புரோக்கர் மூலம் அங்கு வேலை செய்ய இந்த பச்சிளம் பாலகன் அனுப்பப்பட்டான். அந்த பலகார தொழிலகத்தில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான நாட்களுக்கு வேலை செய்வதன் மூலம் அவனது மாமா வாங்கிய கடனை முழுவதுமாக அடைத்தவுடன் சம்பளம் தரப்படுமென அர்ஜூனுக்கு உறுதிமொழி தரப்பட்டிருந்தது. அங்கு 9 ஆண்டுகள் கடினமாக உழைத்தபிறகு, அதற்குப் பதிலாக சிறிது உணவைத் தவிர ஊதியமாக அவனுக்கு எதுவும் தரப்படவில்லை; ஆனால், அவனது குழந்தை பருவம் என்ற அற்புதமான தருணத்தையே இக்காலகட்டத்தில் இழந்தது தான் மிச்சம்.

தான் எத்தகைய அடிமைத்தனத்தில் விற்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் உணரத் தொடங்கியபோது ஒரு நாள் அவனுக்கு சேர வேண்டிய சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற அவனது அனைத்து நம்பிக்கைகளும் சுக்குநூறாக தகர்ந்து போயின. அதிகாலை 4:30 மணிக்கு வேலையை தொடங்குவதற்காக தட்டி எழுப்பப்படும் அர்ஜூன், இரவில் ஏறக்குறைய நள்ளிரவு நேரம் வரை, உடலுக்கும், மனதிற்கும் சிறிதும் ஓய்வு கூட இல்லாமல் அங்கு உழைக்க வேண்டியிருந்தது. கிழிக்கப்பட்ட அட்டை பெட்டியின் மீது படுத்துறங்க வேண்டிய நிர்ப்பந்தம்; இரவில் கடும் குளிரிலிருந்து தன்னையே தற்காத்துக் கொள்ள அவனுக்கு வேறு எதுவும் தரப்படவில்லை. தொழிலகத்திற்கு பின்னால் இருக்கிற திறந்த வெளியே அவனுக்கு கழிப்பறையாக இருந்தது. அவர்கள் பேசுகின்ற மொழி அவனுக்கு முழுமையாக புரியவில்லை என்றாலும் கூட பிற சக ஊழியர்களோடு கலந்துரையாடுவதும் அவனுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. அவனது மனத்தில் அச்சத்தை ஆழமாக புகுத்தி, அடிபணிந்து வேலை செய்வதற்காக மோசமான, கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்யப்படுவதோடு அடியும், உதையும் கூடுதலாக அவனுக்கு தரப்படுவது வாடிக்கையான நிகழ்வுதான். இந்த கொத்தடிமையில் சிக்க வைக்கப்படுவதற்கு முன்னதாக அவனது சொந்த கிராமத்தில் அங்கன்வாடி பள்ளியில் படித்தபோது மனதும், வயிறும் நிறைய உண்டு மகிழ்ந்த கடந்த கால தருணங்களை நோக்கி அவனது சிந்தனைகள் பின்னோக்கி சென்றன. இப்போது, அவனுக்கு அறிவு தரும் கல்வியும் கிடைக்கவில்லை. பள்ளியில் அனுபவித்து சாப்பிட்ட உணவுகளும் இங்கு கிடைக்கவில்லை.

2017-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையால் அந்த கொத்தடிமை சிறையிலிருந்து விடுவிக்கப்படும் வரை அர்ஜூனின் வேதனையும் கஷ்டங்களும் ஒரு தொடர்கதையாகவே நிகழ்ந்தன.

அர்ஜூன் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தை கொத்தடிமை தொழிலாளர்கள் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறிய தொழிலங்களிலும், பணியமைவிடங்களிலும், கடைகளிலும் வழக்கமாகவே இத்தகைய வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இன்றைய நாளிலும்கூட கொத்தடிமை தொழில்முறை என்பது பரவலாக பின்பற்றப்பட்டுவருவது கடும் வேதனை அளிக்கக்கூடிய நிஜமாகும்.

இத்தகைய குழந்தைகளும், சிறார்களும் கொத்தடிமைதனத்தில் மூன்று வழிமுறைகளில் சிக்கி அவதியுறுகின்றனர். அனேக தருணங்களில், இவர்கள், ஏற்கனவே கொத்தடிமையில் சிக்கியிருக்கிற அல்லது ஒரு நபருக்கு திரும்பச் செலுத்த வேண்டிய கடன் சுமையைக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சில நேரங்களில் ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து குழந்தைகள் அவர்களது கடன் சுமையை தங்கள் தலைமேல் சுமந்து கொத்தடிமைகளாக மாறுகின்றனர். மூன்றாவது வகையினத்தைச் சேர்ந்த குழந்தைகளோ அவர்களது பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வாங்கிய முன்பணத்திற்குப் பதிலாக வேலை செய்வதற்காக தனிப்பட்ட முறையில் அடமானம் வைக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.

வாங்கிய இந்த முன்பணத் தொகையானது சில நூறு ரூபாய்களில் தொடங்கி 7-8 ஆயிரம் ரூபாய்கள் வரை இருக்கக் கூடும். இந்த குழந்தைகள் மிகக் கொடுமையான உடல்சார்ந்த, உணர்வுரீதியிலான மற்றும் பாலியல் ரீதியலான வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் அக்கறை காட்ட யாரும் இல்லாத சூழ்நிலைக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, இந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த வளர்ச்சியானது, இளவயதிலேயே நசுக்கப்படுகிறது. வளர்ந்தபிறகு, எதற்கும் பொருந்தாத நபர்களாக சமுதாயத்திற்கும் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் போன்ற அமைப்புகளது மதிப்பீடுகளின்படி உலகளவில் 5.7 மில்லியன் குழந்தை கொத்தடிமை தொழிலாளர்கள் இருக்கின்றனர். 'குழந்தை தொழிலாளர்’ என்ற சொற்றொடரை நம்மில் பலர் கேட்டிருக்கக்கூடும். ஆனால், 'குழந்தை கொத்தடிமை தொழிலாளர்" என்ற அவலம் குறித்து பலரும் இன்னும் அறியாமலேயே இருக்கின்றனர்.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட, தமிழ்நாடு மாநில அரசின் புள்ளியியல் விவரங்களின்படி 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 734 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்: திருவள்ளுர் (450), கோயம்புத்தூர் நகரம் (152), சென்னை (54), வேலூர் (50) மற்றும் நாமக்கல் (28). மதுரை மாவட்டத்தில் ஐந்து குழந்தை கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஊடகம் உட்பட பொதுமக்களால் பரவலாக கருதப்படுவதற்கும் மிக மிக அதிகமாக இந்த பிரச்னையின் வீரியமும், அளவும் மிகப் பெரிதாக இருக்கிறது. இந்த பிரச்னை வெளிப்படையாகத் தெரியாத தன்மையை கொண்டிருப்பது மட்டுமன்றி, இது குறித்த தரவுகளை வெளியில் தெரியவிடாமல் மறைப்பதற்கும் சில நபர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முதல் தகவல் அறிக்கை வழியாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டுமே அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிபரக் கணக்குகளில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான குழந்தை கொத்தடிமை தொழிலாளர்கள் தலித்துகளாகவோ அல்லது ஆதிவாசி பழங்குடியினராகவோ இருக்கின்றனர். சாதி அமைப்பு முறையால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரம்பரியமான அடிமைத்தளைக்கும் கூடுதலாக இயற்கை பேரிடர்களாலும் மற்றும் அமைப்பு ரீதியான குறைபாடுகள், தவறுகளின் காரணமாக இவர்கள் மேலும் கடும் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். விளிம்பு நிலைக்கு வெளியே இருக்கின்ற இவர்களது நிலையானது, அரசின் நலவாழ்வு திட்டங்கள் இவர்களை சென்றடைவதிலிருந்து இவர்களை தடுத்து வைத்திருக்கிறது. திறனும், அதிகாரமும் கொண்டிராத இவர்களது நிலைமையை, தங்களது பேராசை மற்றும் இலாபமீட்டும் பசியை தீர்ப்பதற்கு மலிவான தொழிலாளர்களை உருவாக்குவதற்காக நீதி, நியாயத்திற்கு அஞ்சாத, சக மனிதர்கள் மேல் குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் மீது அக்கறையில்லாத நபர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

குழந்தை கொத்தடிமை தொழிலாளர்முறை பலரும் அறியுமாறு கண்ணுக்கு புலப்படாத நிலைமை இருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று அதன் சட்டவிரோதமான தன்மையாகும். இந்த குற்றங்களை நிகழ்த்துபவர்கள் உரிய ஆதார சான்றுகளோடு பிடிக்கப்படுவதில்லை மற்றும் நீதி அமைப்பின் முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்படுவதும் இல்லை. இக்குழந்தைகள் அவர்களது சுதந்திரத்தையும், குழந்தை பருவத்தையும் தொடர்ந்து தொலைத்து நிற்கின்ற போது இந்த பேராசை பிடித்த பெரிய மனிதர்களோ அவர்களது குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் சுதந்திர மனிதர்களாக செல்வாக்கோடு உலவி வரும் நிலை தான் காணப்படுகிறது. செய்யும் குற்றத்திற்கு தண்டனை கிடைக்காது என்ற இந்த எதார்த்த நிலையும் மற்றும் கலாச்சாரமும் தான் இந்த குற்றத்தை தொடர்ந்து செய்யுமாறு இக்குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது. இது, மாற்றப்பட்டாக வேண்டும். நமது மாநிலத்திலேயே நமது வாழ்விடங்களுக்கு அருகேயே இந்த கொடுமை குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்வதும் அதற்கான தீர்வுகளை கண்டறிய முற்படுவதுமே இந்த கொடுமையை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com