பெற்றோரை வளர்க்கும் சிறுமி அனிதா! குவியும் உதவிகளும் பாராட்டுகளும்!

சிறுமி வாழும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சிறுமியின் தந்தை சந்திரசேகருக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் தற்போது இலவசமாக வழங்கத் தொடங்கி இருக்கிறார்.
பெற்றோரை வளர்க்கும் சிறுமி அனிதா! குவியும் உதவிகளும் பாராட்டுகளும்!

தேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி அனிதாவின் தந்தை விபத்தில் அடிபட்டு நடமாட்டமின்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். தாயோ மனநலம் குன்றியவர். இந்நிலையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி அனிதா தன் பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டு குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டு பள்ளிக்கும் செல்வதற்கு மிகுந்த சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். இவரைப் பற்றிய செய்தி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியானது. சிறுமி அனிதா குறித்த செய்தியை அறிந்த தமிழக துணை முதல்வர் ஓ பி எஸ் உடனடியாக மாணவி அனிதாவுக்கு 25,000 ரூபாய் பொருளாதார உதவி செய்ததோடு மாணவி தன் பெற்றோரோடு வசிப்பதற்குத் தோதாக வசிப்பிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனிதா வசிக்கும் வீட்டை நவீனக் கழிப்பறையுடன் கூடிய புதிய வீடாக மாற்ற உறுதியளித்திருக்கிறார்கள். அதற்கான பணிகளும் உடனடியாகத் துவக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அனிதா குறித்த செய்தியைக் கண்ட ஜெர்மனி, மஸ்கட், கனடா, அபிதாபி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களின் மூலமாகவும் அவருக்கான நிதியுதவிகள் தற்போது குவிந்து வருவதாகச் சேனல் தரப்பில் கூறப்படுகிறது.

வித்யா ஆனந்த், தொண்டு நிறுவன நிர்வாகி...

அனிதா குறித்த செய்தி அறிந்து அவரைக் காண வந்த வித்யா ஆனந்த் எனும் தொண்டு நிறுவன நிர்வாகி, அனிதாவைப் பற்றிய செய்தியை நாங்கள் தொலைக்காட்சியில் கண்டோம். ஒரு 13 வயதுச் சிறுமி, தன்னையும் கவனித்துக் கொண்டு, விபத்தில் பாதிப்படைந்த தந்தையையும், மனநலம் குன்றிய அன்னையையும் பராமரித்துக் கொண்டு பள்ளிக்கும் சென்று படிப்பதற்கான ஆர்வத்துடன் இருக்கிறாள் என்ற செய்தியைக் கண்டதும் அவளுக்கு எங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் இப்போது இங்கு வந்திருக்கிறோம். அனிதாவுக்குத் தேவையான உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், உள்ளிட்டவற்றை தற்போது கொண்டு வந்திருக்கிறொம். அவரது கல்விச் செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில் இருக்கிறோம் நாங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுமி வாழும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சிறுமியின் தந்தை சந்திரசேகருக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் தற்போது இலவசமாக வழங்கத் தொடங்கி இருக்கிறார்.

தன் நிலையை தொலைக்காட்சி வாயிலாக அறிந்த பல்வேறு தரப்பினரும் தனக்கு உதவ முன் வந்துள்ளதாக சிறுமி அனிதா கூறுகிறார். அரசு சார்பில் மாதாமாதாம் கூட்டுறவு பண்டக சாலையில் எக்ஸ்ட்ரா அரிசி போடச் சொல்லி இருக்கிறார்கள். மாதம் 3000 ரூபாய் நிதி உதவி அளிப்பதற்கும் அரசு முடிவு செய்துள்ளது அது மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் கஷ்டத்தை உணர்ந்து உதவ முன் வந்திருப்பதற்கு சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி சேனலுக்கு தான் நன்றிக் க்டன் பண்ணிருப்பதாகக் கூறுகிறார் அனிதார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com