நீர், மண், காற்று ஆகிய உயிர் வாழத் தேவையான ஆதாரங்கள் நம் பூமியில் மட்டுமே உள்ளன. மனிதனின் நாகரீக வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் இவற்றின் பயனை பன்மடங்காக்கி மானுடம் பயனுறச் செய்ததுள்ளன. நம் பூமியின் அளவு எப்படி ஒரு எல்லைக்கு உட்பட்டதோ, அதேபோல் அதில் உள்ள எல்லா வளங்களும் ஒரு எல்லைக்கு உட்பட்டதே. தற்பொழுது உலகின் ஜனத்தொகை 7.7 பில்லியனாக பெருகியுள்ளது (1 பில்லியன்= 100 கோடி). ஆனால், அதற்கு ஈடாக பூமியின் அளவோ, அதன் வளங்களோ பெருகாது என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக, நம் பூமியின் மிகச்சிறந்த வளமான நீர் வளத்தை நாம் திறம்பட மேலாண்மை செய்வது மண் வளத்திற்கும் மானுட வளத்திற்கும் இன்றியமையாத தேவை என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது!
வரவேற்க முடியா மரபு :
மனிதர்களான நாம் பொதுவாக நமது குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி, நகை, பணம், நிலம், வீடு என்ற சொத்துக்களை சேர்ப்பதே வழக்கம். அதில் நம் வாழ்நாள் முழுவதும் முடிந்து விடுவது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த சொத்துக்களை அனுபவிக்க நல்ல ஆரோக்கியத்தோடு பூமியில் வாழும் தகுதியையும் அவர்களுக்கு கொடுப்பது இக்கணத்தில் “எமர்ஜென்சி” தேவை. தற்பொழுது உயிர் வாழ தேவையான ஆதாரங்களாகிய நீர், நிலம், காற்று மற்றும் அந்நிலத்தில் விளைந்துவரும் உணவு ஆகியவை மாசடைந்தும், மலிந்தும் வருகின்றன. வருங்கால சந்ததியினருக்கு நாம் நீர்வளம் இல்லா நிலத்தையும், நுகர்வதற்கு ஏற்பில்லாத காற்றையும், உணவு விளைவிக்க முடியாத அளவுக்கு நஞ்சு கலந்த மண்ணையும், எவ்வுயிரும் வாழத் தகுதியில்லா வெப்பமடைந்த பூமியையும் விட்டுச் செல்லாமலிருப்பது அவசியம்.