நிலாவுக்கு மனிதன் போனது நிஜமா? பொய்யா? 2021 லாவது தீருமா சர்ச்சை?!

தனது மூன் லேண்டிங் விவகாரம் உண்மை தான் என்பதை நிரூபிக்க நாசா தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் போராட்டம் சலித்து பிறகு அமைதியாகி விட்ட நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் மீண்டும்
நிலாவுக்கு மனிதன் போனது நிஜமா? பொய்யா? 2021 லாவது தீருமா சர்ச்சை?!

எல்லோருக்குமே தெரியும் நிலவில் கால் பதித்த முதல் மனிதன் என்ற பெருமைக்குரிய நபர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது. 1969, ஜூலை 21 அன்று நிகழ்த்தப்பட்ட அந்தப் பயணத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து அப்பல்லோ 11 ல் பயணித்தவர்கள் மேலும் இருவர். அவர்களுள் ஒருவர் எட்வின் ஆல்ட்ரின் மற்றொருவர் மைக்கேல் காலின்ஸ். வாஸ்தவத்தில் மைக்கேல் காலின்ஸ் விண்கலத்தை இயக்கும் பொறுப்பில் உள்ளே அமர்ந்திருக்க நிலவில் கால் பதித்த பெருமை மற்ற இருவருக்கும் கிடைத்தது. இருவரிலும் நிலவில் மனித வாடையே இல்லாத காலத்தில் முதன்முறை நிலவில் கால் பதித்த இல்லையில்லை தனது ஷூ தடத்தைப் பதித்தவர் என்ற பெருமை நீல் ஆம்ஸ்ட்ராங்கைச் சென்றடைந்தது.

அடுத்ததாக அதே ஆண்டில் 1969, நவம்பரில் அதாவது முதல்முறை நிலவிற்குச் சென்று கால் பதித்த அடுத்த நான்கே மாதங்களில் மீண்டும் ஒருமுறை நாசா, நிலவுக்கு தனது விஞ்ஞானிகளை அனுப்பிச் சோதித்தது. இம்முறை அப்பல்லோ 12 விண்கலத்தில் பயணித்து நிலவிற்குச் சென்றவர்கள் கான்ராட் மற்றும் பீன் எனும் இரு விஞ்ஞானிகள். இவர்கள் நவம்பர் 19 & 20 என இரு நாட்கள் நிலவில் தங்கி சோதனைகளை மேற்கொண்டதாகத் தகவல்.

அமெரிக்கர்களின் நிலவுப் பயண ஆசை அத்துடன் முடிவடைந்து விடவில்லை. சில முயற்சிகள் தோல்வியில் முடிய மீண்டும் 8 ஆவது முயற்சி வெற்றியில் முடிந்தது. ஆம், மூன்றாம் முறையாக நிலவுக்கு இரு மனிதர்களை ஏற்றிக் கொண்டு அப்பல்லோ 14 விண்கலம் சீறிப்பாய்ந்தது. இம்முறை விண்கலத்தில் சென்றவர்கள் ஆலன் ஷெப்பர்டு மற்றும் எட்கர் மிட்சல். 1971 ஆம் வருடம் சரியாக ஃபிப்ரவரி 5 ஆம் நாள் நிலவில் தரையிறங்கியது விண்கலம். விஞ்ஞானிகளில் ஒருவரான ஆலன் ஷெப்பர்டு ஒரு கோல்ப் ப்ரியர் என்பதால் ஃபேஷனுக்கு இரண்டு கோல்ப் பந்துகளை நிலவில் விசிறி அடித்து விட்டு வந்தார்.

தொடர்ந்து நான்காம் முறையாக 1971, ஜூலை 31 ஆம் நாள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆராயும் முகமாக அப்பல்லோ 15 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பயணித்த விஞ்ஞானிகள் டேவிட் ஸ்காட், ஜேம்ஸ் இர்வின். முந்தைய பயணங்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் பயணமே நீண்ட பயணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்முறை சென்ற விண்கலம் நிலவில் மூன்று நாட்கள் முழுதாகத் தங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டது.

அடுத்ததாக அப்பல்லோ 16 விண்கலம் 1972, ஏப்ரல் 16 ஆம் நாள் தொடர்ந்து 11 நாட்கள் திவீர முயற்சியின் பின் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

இம்முறையும் மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜான் யங் மற்றும் சார்லஸ் டியூக் எனும் இரு நபர் விஞ்ஞானிகள் குழுவானது விண்கலம் நிலவின் மேற்பரப்பில்க் இருந்த மூன்று 

நாட்களுக்குள் மூன்று முறை நிலவில் கால்பதித்து மீண்டதாகத் தகவல்.

அப்பல்லோ 17 இது தான் நிலவிற்கு மனிதர்களைத் தாங்கிச் சென்ற கடைசி விண்கலம் எனலாம். 1972 டிசம்பர் 5 ஆம் நாள் நிலவைச் சென்றடைந்த இந்த விண்கலம் டிசம்பர் 7 வரை அங்கேயே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விட்டு பூமிக்குத் திரும்பியது.

ஆக மொத்தம் இதுவரை 6 முறைகள் நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய பெருமையை அமெரிக்கா தன்னகத்தே கொண்டிருக்கிறது.

ஆயினும் அமெரிக்காவின் இந்தப் பெருமையை மற்ற நாடுகள் அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ளுமா என்ன? அவர்களில் பலர் அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதே பொய்யான தகவல், 

திட்டமிட்டு உண்டாக்கப்பட்ட மாயாஜாலம் என்றும் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதைச் சும்மா சொல்லவில்லை தகுந்த ஆதாரங்கள் எனவும் சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

அந்த ஆதாரங்களைப் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம். உலகில் முதன்முதலாக சந்திரனைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் சோவியத் யூனியன் குடியரசைச் சேர்ந்தவர்களே! 1930 ஆம் ஆண்டுவாக்கிலேயே அவர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளைத் தொடங்கி விட்டார்கள். இதுவரை நிலவுக்கு 20 க்கும் மேற்பட்ட ஆளில்லா விண்கலங்களை அனுப்பியிருக்கிறார்கள் ரஷ்யர்கள். 1957 ஆம் ஆண்டு வெற்றிகரமாக லைக்கா என்ற நாயை சோவியத் விண்கலம் மூலமாக விண்வெளிக்கு அனுப்பினர். இந்த வெற்றியைப் பார்த்து அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளுமே வியந்தன.

‘லைக்கா’ வெற்றிகரமாக விண்வெளியைச் சுற்றி விட்டுத் திரும்பிய பின் சோவியத்தைச் சேர்ந்த 3 விண்வெளி விஞ்ஞானிகளை நிலவுக்கு அனுப்பியது சோவியத் அரசு. ஆனால், அந்தோ பரிதாபம் அந்த விண்கலம் பாதியில் வெடித்துச் சிதறியதால் அதிர்ந்து ஏமாற்றமடைந்த சோவியத் யூனியன் அதன் பின்னர் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியையும் கைவிட்டது.

ரஷ்யாவின் முயற்சி இப்படித் தோல்வியில் முடிய, விண்வெளி விஞ்ஞானத்தில் தாங்கள் ரஷ்யர்களைக் காட்டிலும் மேதாவிகள் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஆவலில் அமெரிக்கா மனிதனை நிலவில் கால் பதிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியது. அப்படித் தொடங்கியது தான் மேலே குறிப்பிடப்பட்ட அப்பல்லோ 11 முதல் 17 வரையிலான முயற்சிகள். 1969 ஜூலை 21 ல் தொடங்கி 1972 டிசம்பர் 7 வரையிலாக மொத்தம் 6 முறை நிலவுக்கு மனிதர்களை ஏந்திச் சென்று அமெரிக்க விண்வெளிக்கலங்கள் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

இதெல்லாம் வரலாறு... ஆனால் இந்த வரலாற்றை பொய் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

அமெரிக்கா மனிதனை நிலவில் கால் பதிக்கச் செய்ததாக வெளியிட்ட புகைப்பட ஆதாரங்கள் அனைத்தும் பொய். அவையனைத்தும் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் துணை கொண்டு உண்டாக்கப்பட்ட பொய்யான ஆதாரங்கள் என்கின்றன உலக நாடுகளில் சில; எதற்கிந்த ஐயம்? என்றால்; அதற்கும் பொருத்தமான சில கேள்விகளை முன்வைக்கின்றன அவை;

அந்தக் கேள்விகள் என்னென்னவென்றால்?

இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் சர்வ வல்லமை கொண்ட நாடுகளாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் வளர்ச்சி கொள்ளத் தொடங்கின. இச்சூழலில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே யார் பெரியண்ணன் என்ற சண்டை நேரடியாக மூளாத போதும் விளையாட்டு, பொருளாதாரம், விண்வெளி ஆய்வுகள் உள்ளிட்ட சாதனைகளில் யார் பெரியவர் என்ற மறைமுகச் சண்டைகள் அவ்வப்போது மூண்டு கொண்டு தான் இருந்தன. இவற்றில் மிக முக்கியமான சண்டையாகக் கருதப்பட்டது, எந்த நாடு முதன்முதலாக விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது எனும் எதிர்பார்ப்பே! இந்தப் போட்டியில் அமெரிக்காவை ரஷ்யா வென்றது. 1961 ஆம் ஆண்டு ரஷ்யா யூரி காகரின் எனும் விண்வெளி விஞ்ஞானியை முதன்முறையாக வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது. இவரே விண்வெளியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமைக்கு உரியவரானார். ரஷ்யாவின் இந்த சாதனை அமெரிக்காவை தூங்க விடாமல் செய்தது. பொறாமையில் வெந்தது அமெரிக்கா, அதன் விளைவு, அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா நிச்சயமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்பதே அந்த அறிவிப்பு.. அறிவிப்பை கென்னடி வெளியிட்டாலும் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டது அவருக்கும் முன்பு அமெரிக்க அதிபராக இருந்தவரான ஐசனோவரின் ஆட்சிக்காலத்திலிருந்தே! அப்போதே மனிதனை நிலவுக்கு அனுப்பவும், நிலவில் அமெரிக்கா சார்பாக ஒரு அடிப்படை ராணுவத் தளவாடம் அமைக்கவும் ஐசனோவர் கனவு 
கண்டார். ஆனால், அந்தக் கனவுகள் நிறைவேற்றப்படுவதற்கான தொழில்நுட்பவசதிகள் அன்றில்லாமல் போன காரணத்தால் திட்டம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கென்னடி அமெரிக்க அதிபரானதும் முழு வீச்சில் விண்வெளி ஆய்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த முயற்சிகளில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் அப்போது போட்டி கடினமாகவே இருந்தது. விண்வெளிக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் முயற்சியை இரண்டு நாடுகளுமே வெற்றிகரமாக நிறைவேற்றின. அதைத் தொடர்ந்து  நிலவுக்கு மனிதர்களை அனுப்பவிருப்பதாக கென்னடி அறிவித்ததும் பின் அதை நிஜமாக்கியதும். இந்த விஷயம் வெற்றிகரமாகப் பலிதமான போது இது உலக அதிசயமாகவும் விண்வெளி ஆய்வுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய சாதனையாகவும் பேசப்பட்டது. சர்வதேச அளவில் நிலவில் முதலில் கால் பதித்த வெற்றிகரமான நாடு எனும் பட்டம் அமெரிக்காவுக்கு கிடைத்தது. ஆயினும் அவையெல்லாம் சில காலம் மட்டுமே; மனிதன் நிலவில் கால் பதித்ததற்கு ஆதாரமாக அப்பல்லோ 11 விண்வெளிப்பயணத்தின் போதான புகைப்பட ஆதாரங்களைப் பற்றி தற்போது பெருமளவிலான சர்ச்சைகள் நிலவுகின்றன.

அந்த சர்ச்சைகளில் முதலாவதாகக் குறிப்பிடப்படுவது அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவுக்கு இடையில் அப்போது நிலவி வந்த பனிப்போர். அதில் ரஷ்யாவை முறியடிப்பதற்காக திட்டமிட்டு போலியாக உருவாக்கப்பட்ட சாதனை தான் நிலவில் மனிதன் கால் பதித்த விவகாரம் என்கிறார்கள் சிலர்.

அடுத்ததாகச் சொல்லப்படுவது பூமியைச் சுற்றியுள்ளதாகக் கருதப்படும் வான் ஆலென் பெல்ட். பூமியின் மேற்பகுதியில் 500 கிலோமீட்டரில் தொடங்கி 36,000 கிலோமீட்டர் வரை பரவியிருக்கும் ஒரு வளையத்தின் பெயரே வான் ஆலென் பெல்ட். இன்னர் பெல்ட் மற்றும் அவுட்டர் பெல்ட் என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட இதில் நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிலான கதிரியக்கம் கசிந்து கொண்டிருக்கிறது. பூமியின் மின்காந்தப் புலத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பெல்ட் தான் பூமிக்கு ஏற்படவிருந்த, இனி ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களிலிருந்து பூமியைக் காப்பாற்றி வருவதாகத் தகவல். இந்த பெல்ட்டைத் தாண்டி விண்வெளி சார்ந்த பொருட்கள் எப்படி பூமியை அணுக முடியாதோ அதே போல பூமியின் மேற்பரப்பில் இருந்தும் இந்த வான் ஆலென் பெல்ட்டைத் தாண்டி எந்த பொருளும் பூமிக்கு வெளியே செல்லவும் வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

ஒருவேளை மனிதர்கள் இந்த வான் ஆலென் பெல்ட்டைத் தாண்டிச் சென்றிருந்தால் அவர்கள் அந்தப்பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான ரேடியேஷனில் சிக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது மூன் லேண்டிங் அதாவது நிலாவில் மனிதன் காலடி பதித்திருப்பது என்பது நம்ப முடியாத விஷயமாகவே கருதப்படுகிறது.

மனிதன் நிலவில் கால் பதித்தது பொய் என்று மெய்பிக்கச் சொல்லப்படும் மற்றொரு ஆதாரம், அமெரிக்காவின் நிலவுப் பயணம் என்பது ஸ்டான்லி குப்ரிக் எனும் இயக்குனரை வைத்து ஹாலிவுட் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் குற்றச்சாட்டு. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதால் தான் அந்த விடியோவில் மனிதனின் முதல் நிலவுப் பயணத்தின் போது வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட தட்டுப்படவில்லை போலும் என்று குற்றம் சுமத்துவர்கள் பலர் உண்டு. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதற்கெனவே தனியாக ஒரு மென்பொருளை உருவாக்கி மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மை போன்றதான தோற்றத்தை உருவாக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

அடுத்த காரணம் நிலவில் வெளிச்சம் பெறுவதற்கான ஒரே சோர்ஸ் சூரியன் மட்டுமே எனும்போது நிலவில் இருக்கும் பொருட்களின் நிழல் ஒரே திசையில் மட்டுமே விழக்கூடும். ஆனால், அமெரிக்கா சமர்பித்த மூன் லேண்டிங் விடியோவில் இடம்பெறும் பொருட்கள் அனைத்தின் நிழலுமே ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வித்யாசமான கோணத்தில் விழுந்திருந்தன. விமர்சகர்கள் அமெரிக்காவின் மூன் லேண்டிங் பித்தலாட்டத்தை சுட்டிக்காட்ட நிழல்களின் திசை மாற்றத்தையும் ஒரு காரணமாக முன்வைக்கின்றனர்.

அடுத்ததாக காற்றே இல்லாத நிலவில் அமெரிக்காவின் கொடி அசைவது எங்கணம் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது.

அடுத்த காரணம் மூன் லேண்டிங் புகைப்படங்களில் தென்படக்கூடிய கூட்டல் குறிகள். நிலவுக்குச் செலுத்தப்பட்ட அப்பல்லோ 11 விண்கலத்தில் நிகழ்வுகளைப் புகைப்படங்கள் எடுக்க ஹேஸல்பால் 500 இ எல் டைப் கேமராக்களைப் பயன்படுத்தி இருந்தனர். இந்த வகைக் கேமராக்களைப் பயன்படுத்திப் புகைப்படங்கள் எடுக்கும் போது அவற்றில் கூட்டல் குறிகள் பதிவாகும். அவை எப்போதுமே புகைப்படத்தில் இருக்கும் ஆப்ஜெக்டுகளின் முன்புறம் தான் பதிவாக வேண்டும். ஆனால், அப்பல்லோ 11 விண்கலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவை புகைப்படத்தில் இருக்கும் பொருட்களின் பின்புறமாகப் பதிவாகியிருந்தன. இம்மாதிரி நிகழவேண்டுமானால் குறிப்பிட்ட அந்த ஆப்ஜெக்டுகள் ஓவர் இம்போஸ் ஆகி இருந்தால் மட்டுமே இப்படி நிகழ வாய்ப்புகள் உண்டு ஆனால் நிலவில் அப்படி நிகழ சாத்தியமே இல்லாத போது இது எப்படி நிகழ்ந்ததென்ற குழப்பமும் ஆராய்ச்சியாளர்களிடையே இன்று வரை நீடிக்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் பெருகிப் பெருகி ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் மூன் லேண்டிங் விவகாரமே பொய் எனும்படியான விஷமப் பிரச்சாரம் வலுவடைந்தது.

இத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் நாசாவுக்கு இல்லையே. அவர்கள் மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு பொருத்தமான பதில்களை 
அளிக்கவும் தவறவில்லை.

மூன் லேண்டிங் போலியானது என்ற வாதத்துக்கு அமெரிக்கா அளித்த பதில்கள்...

அந்தக்கால கட்டத்தில் நிலவுக்கு முதன்முதலாக மனிதர்களை அனுப்பும் விஷயத்தில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் இருந்து வந்த போதும் அமெரிக்காவின் மூன்லேண்டிங் சாதனையை ரஷ்யாவும் ஒப்புக் கொண்டது நிஜம். ஏனெனில் நிலவில் இருந்து வெளியான லைவ் சிக்னல் ரிலேவை ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் ரிசீவ் செய்து பதிவு செய்து வந்தது. ரஷ்யா மட்டுமல்ல, இங்கிலாந்து கூட அப்போது அந்த சிக்னல்களைப் பதிவு செய்ததாகத் தகவல் உண்டு. எனவே இந்த விஷயத்தில் போலித்தன்மை ஏதேனும் இருந்தால் அதை முதலில் வெளியில் போட்டு உடைக்க விரும்பும் நாடாக ரஷ்யாவே இருந்திருக்கக் கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அமெரிக்காவின் மூன்லேண்டிங் உண்மை தான் என்று நாசா சாதித்தது.

அடுத்ததாக வான் ஆலென் பெல்ட் குறித்த சந்தேகம் , வான் ஆலென் பெல்ட்டில் மிதமிஞ்சிய ரேடியேஷன் இருப்பது உண்மை தான். ஆனால், அந்த ரேடியேஷன் னியூக்ளியர் பவர் பிளாண்டுகளிலும், ஆட்டம் பாம்ப்களிலும் வெளிப்படுகிற எக்ஸ் ரேக்கள் போன்ற ரேடியேஷன் எல்லாம் இல்லை. அங்கிருப்பது சூரியனில் இருந்து வெளிப்படுகிற அதிக சக்தி கொண்ட அணுக்கருக்களே. அதாவது அணுத்துகள்களான புரோட்டான்ஸ் மற்றும் எலெக்ட்ரான்ஸ் தான் இந்த ரேடியேஷனுக்கான முக்கிய காரணம். இந்த ரேடியேஷனில் இருந்து விண்கலத்தைக் காப்பாற்ற அதன் மீது ஒரு மெல்லிய அலுமினியம் சீல்டை உருவாக்குவதன் மூலமாக புரோட்டான்களிடமிருந்தும் பாலி எத்திலீன் ஷீட் பயன்படுத்துவதின் மூலமா எலெக்ட்ரான்ஸ் கிட்ட இருந்தும் தப்ப முடியும் என்று நாசா கண்டறிந்தது. அத்துடன் வான் ஆலென் பெல்ட்டில் பல வலிமை குன்றிய இடங்கள் இருந்ததையும், அவற்றி வழியே மிக வேகமாகச் செல்வதின் மூலமாக வான் ஆலென் பெல்ட்டை எளிதாகக் கடக்க முடியும் என்றும் நாசா தெரிவித்தது.

அடுத்த குற்றச்சாட்டு இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கால் உருவாக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படம் தான் அமெரிக்காவின் மூன் லேண்டிங் சாதனை எனும் சர்ச்சை. அந்தக்காலத்தில் இன்றைய நாட்களைப் போன்ற அறிவியல் தொழில்நுட்ப வசதிகளைப் பெற வேண்டுமானால் அது மிக மிகக் காஸ்ட்லியானதொரு செயல்பாடாக இருந்தது. அப்படி செலவு செய்யக்கூடிய தொகையில் மீண்டும் சில விண்வெளிப்பயணங்களைத் திட்டமிட்டுச் செயலாற்ற முடியும் எனும் போது அமெரிக்கா ஏன் வேலையற்ற் வேலையாக அத்தனை பொருட்செலவில் ஒரு ஃபேக் மூன் லேண்டிங் விடியோவை வெளியிட வேண்டும்? எங்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அதெல்லாம் வீணான குற்றச்சாட்டு என்று இதைப் புறம் தள்ளுகிறது நாசா.

நான்காவது குற்றச்சாட்டாக சிலர் முன் வைப்பது. மூன் லேண்டிங்கின் போது ஆர்ம்ஸ்ட்ராங் அமெரிக்கக் கொடியை நிலவில் ஊன்றும் போது, காற்றே சுத்தமாக இல்லாத நிலவில் அமெரிக்கக் கொடி எப்படி அசைய முடியும்? என்பது, அதற்கான நாசாவின் பதில், நிலவில் காற்று இல்லை என்பது நிஜம் தான். ஆனால் அமெரிக்கக் கொடி அசைந்ததற்கான காரணம் கொடியை தரையில் நட முயலும் போது ஏற்படக்கூடிய எதிர்விசையினால் மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது. இதைப் பலரும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் கூட இவ்விஷயத்தில் நாசாவின் பதில் இது தான்.

ஐந்தாவது குற்றச்சாட்டு நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரியும் கூட்டல் குறிகள். இந்தக் கேள்விக்கு நாசா இதுவரை பொருத்தமான பதில் எதையும் வெளியிடவில்லை என்பதாகத் தகவல்.

ஆறாவது குற்றச்சாட்டு வெளிச்சம் பெற சூரியனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டிருக்கும் நிலவில் அமெரிக்க வீரர் நடந்து வரும் போது அவரது நிழலும் சரி, அங்கிருந்த பிற பொருட்களின் நிழலும் சரி ஒரே நேர்கோட்டில் விழ வேண்டும் என்பது தான் நியதி. ஆனால், அங்கே நிழல்கள் பல திசைகளில் பல கோணங்களில் விழுந்திருந்தன. இதற்கென்ன காரணம் என்ற கேள்விக்கு நிலவின் நில அமைப்பு என்ற பதிலைத் தந்திருந்தது நாசா.

இப்படி தனது மூன் லேண்டிங் விவகாரம் உண்மை தான் என்பதை நிரூபிக்க நாசா தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் போராட்டம் சலித்து பிறகு அமைதியாகி விட்ட நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்கா நிலவுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத் தக்க முன்னேற்றம் தான்.

தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்ட இந்தக் காலத்தில் உலகை அத்தனை சீக்கிரம் ஏமாற்றி விட முடியாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அமெரிக்காவின் முந்தைய நிலவுப் பயணங்கள் அனைத்தும் உண்மை தான் என்பதற்கான ஆதாரமும் இம்முறை தெளிவடைந்து விடுமில்லையா? அதனால் தான் உலக நாடுகள் ட்ரம்பின் இந்த அறிவிப்பின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு அது எப்போதடா நிகழும் என்று காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com