33 கைதிகளின் கண்களை, பீகார் போலீசார் ஊசிகளையும், அமிலத்தையும் பயன்படுத்தி குருடாக்கிய கொடுமை! விசாரணை கைதிகளை மீட்டவர் இவர்தான்!

1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  ஒருநாள் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெறும் புஷ்பா கபிலா ஹில்கோரனி
33 கைதிகளின் கண்களை, பீகார் போலீசார் ஊசிகளையும், அமிலத்தையும் பயன்படுத்தி குருடாக்கிய கொடுமை! விசாரணை கைதிகளை மீட்டவர் இவர்தான்!
Published on
Updated on
3 min read

1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  ஒருநாள் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெறும் புஷ்பா கபிலா ஹில்கோரனி  என்பவரை பற்றிய  கட்டுரையொன்றை, நேஷனல் போலீஸ் கமிஷன் உறுப்பினரான  கே.எப்.  ருஸ்தும்ஜி என்பவர் எழுதியிருந்தார். அக்கட்டுரையில் ஆறு பெண்கள் உள்பட 18 கைதிகள் பாட்னா மற்றும் முசாபர்புர் சிறைகளில் விசாரணைக்காக நீண்ட காலமாக அடைத்து வைத்திருப்பதோடு, அவர்களுக்கு விசாரணை  முடிந்து எப்போது தண்டனை கிடைக்குமென்று தெரியாதென்றும்,  சிறையில் அந்த கைதிகள் சோர்வுற்று இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையறிந்த கபிலாவும், அவரது கணவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான நிர்மல் ஹிங்கோரனியும், விசாரணை கைதிகளின் பிரதிநிதிகளாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்தனர்.  ஆனால் இந்திய சட்டப்படி  கைதிகள் அல்லது  அவர்களது உறவினர்கள்  மட்டுமே மனுதாக்கல் செய்ய முடியும்  என்பதால்  கபிலாவும்  அவரது கணவரும்  வேறு வகையில் அந்த கைதிகளுக்கு  உதவ நினைத்தனர். கைதிகள் சார்பில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். இரு வாரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் கபிலா ஆஜராகி வாதம் செய்ததைத் தொடர்ந்து, உடனடியாக அந்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யும்படி, பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் பீகார் கைதிகள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் சிறைகளில் இருந்த சுமார் 40 ஆயிரம் விசாரணை கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு  ஆறு பெண் கைதிகளில் ஒருவரான உசைனரா காடூன் என்பவர் பெயரில்  உசைனரா வழக்கு என பிரபலமானது. அது மட்டுமின்றி இந்தியாவிலேயே  முதன்முதலாக  போடப்பட்ட  பொது நல வழக்கு என்பதால் "பொது நல வழக்குகளின்  தாய்'  என கபிலா கௌரவிக்கப்பட்டார்.

அன்றைய  நிலையில் பொது நலவழக்கு  தாக்கல்  செய்வது  அத்தனை சுலபமல்ல.  உச்சநீதிமன்ற   பதிவாளர்  சட்டப்படி இந்த வழக்கை பதிவு செய்ய முடியாது என எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்த எதிர்ப்பை காரணமாக வைத்தே நீதிமன்றத்தில் கபிலா விவாதித்து வெற்றிப் பெற்றதை இந்த நாட்டின்  மிக நுட்பமான வழக்காக நீதிபதிகள் இதை கருதினர். இதைத் தொடர்ந்து எமர்ஜென்சி  காலத்தில்  பலர் விசாரணை  ஏதுமின்றி  கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது, இதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி தெரியாதவர்கள்  சார்பில்  அவர்கள் உரிமைக்காக, கபிலா ஆஜராகி  பலரை விடுதலை  செய்ய உதவினார்.

கபிலாவின்  வாழ்க்கையில் இடம்பெற்ற மற்றொரு  முக்கியமான  வழக்கு ஒன்றும்  உண்டு.  பாகல்பூரில் சந்தேகத்திற்குரிய  33  கைதிகளின் கண்களை, பீகார்  போலீசார்  ஊசிகளையும், அமிலத்தையும் பயன்படுத்தி குருடாக்கிய கொடுமையை,  பீகார் வழக்குரைஞர் ஒருவர் கபிலாவுக்கு கடிதமெழுதி இருந்தார்.  உடனடியாக  அவர்கள் சார்பில்  ஆஜரான கபிலா,  உச்சநீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட  கைதிகள்  அனைவருக்கும் மருத்துவ  உதவி வழங்கவும், வாழ்நாள் முழுக்க  ஓய்வூதியம்  மற்றும்  இழப்பீடு  வழங்கவும்  ஏற்பாடு செய்தார்.

கென்யா  நைரோபியில்  கல்வியாளராகவும், சமூக  சிந்தனையாளராகவும் வளர்ந்த கபிலா,  1947-ஆம் ஆண்டு லண்டனுக்குச்  சென்று படித்த முதல் இந்திய பெண்மணி  என்ற சிறப்பையும்  பெற்றார்.  இவரது  தாத்தாதான் இவரை லண்டனுக்கு அனுப்பி படிக்க ஆர்வமூட்டினாராம். தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து  போராடிய  மகாத்மா  காந்தி, இந்தியாவில்  சுதந்திர போராட்டத்தை  துவங்கி,  சுதந்திரம்  பெற்று தந்ததைத் தொடர்ந்து,  கபிலாவுக்கு தாய் நாட்டின் மீது ஆர்வம்  அதிகரித்தது. ஏற்கெனவே  அடிக்கடி  இந்தியாவுக்கு வந்து ஜமியாமிலியா இஸ்லாமிய கல்லூரியில் விரிவுரையாளராக  பாடம் நடத்தி வந்த  கபிலா,  1950-ஆம் ஆண்டு நிரந்தரமாக  டெல்லியில் குடியேறியதோடு,  1961 -ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில்  வழக்குரைஞராகவும் பயிற்சி பெறத்  தொடங்கினார்.

ஆரம்பத்திலிருந்தே வாழ்நாள் முழுக்க மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்பது இவரது கொள்கையாக இருந்ததால், ஜமியாவில் பணியாற்றிய போது பெண்கள்  விடுதி வார்டனாக  இருந்த காலத்தில், மாலை நேரத்தில் பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்று வர அனுமதித்திருந்தார். பின்னாளில் மத்திய சுகாதாரத்துறை ஆலோசனை  குழுவில் உறுப்பினராக இருந்தபோது கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை அறிய தடை விதிக்கும்  மசோதவை  கொண்டுவர  மிகவும் உதவியாக இருந்தார்.

இவர்  ஆஜரான  பல வழக்குகள்  இந்திய  நீதிமன்ற  வரலாற்றில் இடம் பெறதக்கவையாக இருந்தன.  வரதட்சணை  கொடுமைக்கு  ஆளான 11 பெண்கள் சார்பில்  இவர் ஆஜரானபோது, பெண்களுக்கு  எதிரான வன்கொடுமைகளை விசாரிக்க  சிறப்பு  காவல்துறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2000-ஆம்  ஆண்டில்  பீகார்  மாநில வாரியங்களில் பணியாற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு பத்தாண்டுகளாக  சம்பளம் வழங்காததால்  தீக்குளித்தல், பட்டினி  சாவு போன்றவைகளால் ஊழியர்கள்  பாதிக்கப்பட்டிருப்பதை  அறிந்த கபிலா, உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த  பொது நல வழக்கு  காரணமாக உடனடியாக மாநில அரசு கோடிக்கணக்கான  ரூபாயை  இடைக்கால நிவாரணத் தொகையாக  வழங்க உத்தரவிட்டது.

பெண்கள்  உரிமைக்காக  குடும்ப நல  நீதிமன்றங்களை அமைக்க வேண்டுமென்று,  அப்போதைய  பிரதமர்  இந்திரா காந்தியை  சந்தித்த  கபிலா, அது தொடர்பான   பல்வேறு  ஆதாரங்களையும்,  ஆவணங்களையும் கொடுத்து அவரது கவனத்தை  தன் பக்கம்  திருப்பி  குடும்ப  நல நீதி மன்றங்களை அமைக்கும்  வரை தீவிரமாக  உழைத்தார்.

வழக்குரைஞர்  நிர்மல்  ஹிங்கோரனியை  திருமணம்  செய்து கொண்ட கபிலாவுக்கு  மூன்று குழந்தைகள்,  மூத்தமகன் அமன் மற்றும்  பிரியா, ஸ்வேதா என இருமகள்கள். இவர்களில்  அமன் மற்றும்  ஸ்வேதா  ஆகிய இருவரும்  வழக்குரைஞர்கள், 2013-ஆம் ஆண்டு  டிசம்பர்  4 -ஆம் தேதியன்று உடல் நலமின்றி  படுக்கையில்  இருந்தபோது கூட,  டெல்லி   சட்டசபைக்கு நடந்த தேர்தலில்  வாக்களிக்க  வேண்டுமென்று  சக்கர நாற்காலியில்  அமர்ந்து வாக்குசாவடிக்குச்  சென்று ஆம் அத்மி கட்சிக்கு  வாக்களித்து  விட்டு வீடு திரும்பினார்.  பெரும்பான்மை  பலத்தைப் பெற்ற  அக்கட்சி  ஆட்சி அமைப்பதற்கு முன் தினம் டிசம்பர்  30-ஆம் தேதியன்று கபிலா மரணமடைந்தார்.

இவரது மறைவையொட்டி, 35  ஆண்டுகளாக உச்சநீதி மன்றத்தில் கபிலாவும், அவரது கணவரும் பணியாற்றி வந்த சேம்பர் 40-ஆம்  எண்  அறையில் நினைவஞ்சலி  கூட்டம் நடந்தபோது, கபிலாவும்  அவரது கணவரும் இணைந்து நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட  பொது நல வழக்குகளின் நகல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 'பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளுக்காக நாங்கள் போராடி வந்தாலும்,  இன்றும்  ஆயிரக்கணக்கான  விசாரணை கைதிகள், ஆண்டுகணக்கில் இந்திய சிறைகளில் அடைப்படிருப்பது கொடுமையானதாகும்' என்கிறார்  96 வயதாகும்  கபிலாவின் கணவர்  நிர்மல் ஹிங்கோரனி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com