பேசக் கூடாதா? பேசணுமா?

பேசுவதற்கு முன் யோசி; யோசிப்பதையெல்லாம் பேசிவிடாதே' என்பார்கள். ஏனெனில் வாழ்வில் இறைவன் நமக்கு அளித்த மிகப்பெரிய பரிசு பேச்சு
பேசக் கூடாதா? பேசணுமா?
Published on
Updated on
2 min read

"பேசுவதற்கு முன் யோசி; யோசிப்பதையெல்லாம் பேசிவிடாதே' என்பார்கள். ஏனெனில் வாழ்வில் இறைவன் நமக்கு அளித்த மிகப்பெரிய பரிசு பேச்சு. இந்த பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. பேச்சைக் கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர்களும் உள்ளனர். இழந்தவர்களும் உள்ளனர். ஒரு நல்ல பேச்சாற்றலுக்கு போரையும் நிறுத்தக்கூடிய வல்லமை உண்டு.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். நாம் சந்திக்கும் அனைவரிடமும் நமக்கு நல்லுறவு ஏற்பட வேண்டுமெனில், அவர்களுடன் நினைவுக்கூரத்தக்க உரையாடல்கள் அமைவது அவசியமாகும்.

எனவே நாம் சந்திக்கும் ஒருவருடன் நமது பேச்சும், உரையாடலும் எப்படி இருக்க வேண்டும்? நமது உரையாடலை நிறைவானதாகவும், நினைவுக்கூரத்தக்கதாகவும் மாற்றுவது எவ்வாறு?

எள்ளி நகையாடுதல் கூடாது: நம்முடன் எவ்வளவு நெருங்கி பழகியவராக இருந்தாலும், பொது இடத்தில் உரையாடும்போது, அவர்களது மனம் புண்படும்படி நகையாடுதல்  கூடாது. அச்செயல் அவர்களைத் தாழ்மைப்படுத்தாது. பேசிய நம்மையே தாழ்மைப்படுத்தும்.

அசெளகர்யமான செய்திகளை எடுத்துச் செல்லும்போது: எந்தவொரு அசெளகர்யமான கெட்ட செய்தியை கூறும் முன்பும், அதைக் கேட்பவர்களின் மனநிலையை ஆராய்ந்து அதற்கேற்றாற் போல சொல்ல வேண்டும்.

உதாரணமாக, பேருந்தைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாக ஓடி வரும் ஒருவரிடம் உங்களது பேருந்து 10 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட்டது என சிரித்துக்கொண்டே கூறினால், அந்த நபர் பேருந்தை விட்ட விரக்தியில் நம்மீது கோபம் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அதே நபரிடம் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து இப்போது தான் சென்றது என வருந்தும்தொனியில் கூறினால், அடுத்த பேருந்தில் சென்று கொள்ளலாம் என்று அவர் நமக்கு ஆறுதல் சொல்வார். எனவே நமது பேச்சு ஒருவரை காயப்படுத்தாதவாறு இருப்பது அவசியம்.

அசெளகர்யமான கேள்விகளை எதிர்கொள்ளும் போது: தவிர்க்க விரும்பும் சில விஷயங்களை நமது நண்பர்கள் சிலர் நம்மிடம் பேச முயற்சிப்பார்கள். உதாரணமாக, சில நாள்களுக்கு முன்பு விவாகரத்தான நபரிடம் சென்று ஏன் பிரிந்தீர்கள்? என்று சிலர் கேள்வி எழுப்புவர். அதற்கான காரணத்தை எல்லாரிடமும் சொல்லும் மனநிலையில் அவர் இல்லாமல் இருப்பார். அத்தகைய நிகழ்வுகளில், எதிர்படும் நபர் எத்தனை முறை கேட்டாலும், சலிக்காமல் ஒரே தொனியில் நாங்கள் பிரிந்து விட்டோம் எனக் கூறினால் அதற்கு பின் அவர்கள் அந்த கேள்வியை இனி எப்போதும் கேட்க மாட்டார்கள்.

பிரபலங்களைச் சந்திக்கும்போது: நமக்கு பிடித்த பிரபலங்களை பார்ப்பது முன்பு போல அவ்வளவு அரிதில்லை. ஏதேனும் ஒரு பொது இடத்தில் அவர்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புண்டு. அவ்வாறு அவர்களை எதிர்பாராமல் சந்திக்க நேரிடும்போது, அவர்களுடன் பேச நம்மையும் மீறி அவா ஏற்படும். அப்போது அந்த இடத்தின் சூழல், நாம் வந்துள்ள நோக்கத்தின் தன்மை என அனைத்தையும் சிந்தித்து பின் செயல்பட வேண்டும்.

ஓர் உணவகத்தில் அப்படியொரு பிரபலத்தை சந்திக்க நேரிட்டால், அவர்களும் நம்மைப்போல அவர்களது நண்பர்களுடன் உணவருந்த வந்துள்ளனர் என்பதை உணர வேண்டும். அவர்களுக்கான தனிமையை நாம் கெடுக்கும்வகையில் இருக்காமல், அவர்கள் நம்மை நேராக சந்திக்க நேரிட்டால் ஒரு சிறிய புன்னகையை வரவேற்பாக அளிக்க வேண்டும்.

பிரபலத்துடன் வந்திருப்பவருக்கும் தக்க மரியாதை அளிக்க வேண்டும். நாம் அவர்களை மதிப்பிடுவது போன்று பேச முயலாமல், தங்களது படைப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றுகூறி அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பிரபலத்திடம்  உங்களது படைப்பு நன்றாக இருந்தது என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் உங்களது தனித்துவமான பேச்சு உங்களை அவர்களது நினைவில் நிறுத்தும்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது: காலையில் செய்தித்தாள், பால் போடுபவர்களிடம் நாம் சொல்லும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை நமக்கு மிகப்பெரும் ஆதரவாகவும், அன்பாகவும் இருந்த ஒருவரிடத்தில் சொன்னால் அது எவ்வகையில் பொருந்தும்?

விமானத்தில் இருந்து இறங்கும்போது பைலட்டிடம் எங்களை பத்திரமாக கொண்டு சேர்த்ததற்கு நன்றி எனத் தெரிவித்தால், மனமகிழ்வுற்ற அவர் மறுவார்த்தையாக எங்களுடன் பயணித்ததற்கு நன்றி எனத் தெரிவிப்பார்.

இவ்வாறு நாம் கூறும் நன்றி கூட நம்முடன் உரையாடியவர்களுக்கு நம்மை நினைவுகூறத்தக்கதாக மாற்ற வேண்டும். அத்தகைய உரையாடலே நமக்கு மனநிறைவைத் தரும். அத்தகைய உரையாடலை எல்லாரிடமும் கொண்டு, நமது பேச்சால் உலகில் உள்ள அனைவர் மனதையும் வெல்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com