தாகமே தண்ணீரை மதிப்புள்ளதாக்குகிறது! ஒரு அனுபவப் பகிர்வு!

‘கொத்தடிமைகள்’ என்ற வார்த்தையை நான் வரலாற்றுப் புத்தகத்தில் படித்து இருக்கிறேனே தவிர அவர்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான நேரடி அனுபவமும் இல்லை.
தாகமே தண்ணீரை மதிப்புள்ளதாக்குகிறது! ஒரு அனுபவப் பகிர்வு!

‘கொத்தடிமைகள்’ என்ற வார்த்தையை நான் வரலாற்றுப் புத்தகத்தில் படித்து இருக்கிறேனே தவிர அவர்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான நேரடி அனுபவமும் இல்லை. ஆனால் இன்று அவர்கள் படும் துயரங்களைப் பற்றிப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளும் போது நல்லவேளை நான் அவர்களாகப் பிறக்கவில்லை என்று பெருமூச்சு விடுகிறேன்.

விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்குக் காகிதப் பைகள் மற்றும் கோப்புகளைத் தயாரிக்கத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பணியாளர் என்னைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த நிறுவனமும் மற்ற நிறுவனங்களை போலவே ஏதோ ஒரு நோக்கத்துடன் செயல்படுவதாகவே எண்ணினேன். இருப்பினும் எனது பயிற்சிகளின் மூலம் பயன் பெறுபவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறவள் நான். ஆதலால்தான் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் தொழில் ஆர்வத்தை அறிய விரும்பினேன். ஏனெனில் தாகமே தண்ணீரை மதிப்புள்ளதாக்குகிறது. அவர்களை சந்தித்த போது வாழ்க்கையின் மீதான புரிதலே எனக்கு மாறிவிட்டது. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை கதைகளைக் கேட்ட போது அவர்களை வெறும் காகிதப் பைகள் உற்பத்தியாளர்களாக மட்டுமில்லாமல் ஒரு தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்று எனது நோக்கத்தை மாற்றிக் கொண்டேன். அவர்களுடன் தங்கிய 21 நாட்களில் அவர்களிடம் நான் கற்றது வாழ்க்கையின் ஆதாரமாக விடா முயற்சியையும் உழைப்பையுமே நம்புகிறவர்கள் என்று.

முதலில் அவர்களுக்குத் தொழில் முனைவோர் என்றால் என்ன உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை விளக்கி எனது பயிற்சியை ஆரம்பித்தேன். ஒரு படி மேலே சென்று அவர்களை அச்சுறுத்தும் விதமாக தொழில் செய்வதில் உள்ள நெளிவு சுளிவுகளைச் சுட்டிக்காட்டி சிலரைப் பயிற்சியிலிருந்து விலக வைக்கலாம் என முயன்று தோற்றுப் போனேன். பயிற்சியிலிருந்து ஒருவரும் விலகிச் செல்லாதது ஆச்சரியமளித்தது. அதே உற்சாகத்துடன் அவர்களை உற்பத்தி நடக்கும் இடங்களுக்கு அழைத்து சென்று, மூலப்பொருட்களை எங்கு வாங்குவது முதல் அதை எப்படி சந்தை பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது வரை நேரடி பயிற்சி அளித்தேன். ஆனாலும் அவர்களின் வெகுளியான முகங்களை பார்த்து நான் ஏதோ வேண்டாததை அவளுக்குச் சொல்லித் தருகிறேன் எனத் தோன்றியது. பிறகு அவருடன் உரையாடிய போது தான் அவர்களுக்குள் இருந்த தனித் திறமைகளையும் ஆர்வத்தையும் கண்டு வியப்படைந்தேன். அனைவருமே என் பயிற்சியை ஊன்றி கவனித்திருந்தது எனக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் இருந்தது.

அடுத்த கட்டமாக அவர்களுக்குக் காகிதப் பைகளை உருவாக்குவது எப்படி என பயிற்சி அளித்தேன். சில மணி நேரத்திலேயே கற்றுக் கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டு பைகளை தயாரித்தனர். அவர்கள் உருவாக்கிய காகிதப் பைகளை உடனடியாக ஒரு தொண்டு நிறுவனம் வாங்க முன் வந்ததுமே அனைவரும் உற்சாகம் அடைந்தனர். இது அவர்கள் உருவாக்கிய பைகள் என்ற கருணைக்காக அல்ல உண்மையாகவே அவை விற்பனைக்கு உகந்தவையாக இருப்பதினால்தான் வாங்கினர். மேலும் உடனடியாக 500 காகிதப் பைகளையும் 1500 கோப்புகளையும் தயாரித்துத் தர ஆர்டர்கள் வந்தன. இதற்கு வெறும் 20 நாட்களே வழங்கப்பட்ட நிலையில் அனைவருமே ஒரு மனக்கலகத்தில் இருந்தனர். உங்களால் இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்று நான் ஊக்கப்படுத்திய போது, என் மீது நம்பிக்கை வைத்து சவாலை ஏற்றுக் கொண்டனர்.

முன்னேற்பாடாக என் 650 காகிதப் பைகள் மற்றும் 1650 கோப்புகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கி தயார் படுத்தினோம். அதற்குள்ளாக மழை ஒருபுறம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் மறுபுறம் எனப் பல தடங்கல்கள் ஏற்பட்டன.. ஆனாலும் அவற்றை எல்லாம் கடந்து ஏழே நாட்களில் அந்த ஆர்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அந்நாட்களில் அந்தத் தெருவே ஒரு பெரிய தொழிற்சாலை போலக் காட்சியளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சில அரசு அதிகாரிகளும் அதனைப் பார்த்து வியப்படைந்தனர்.

தற்போது பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து காகிதப் பைகள் மற்றும் கோப்புகள் தயாரிக்க ஆர்டர்கள் வருவதால் தங்களின் சொந்தக் காலில் நின்று தொழிலை உற்சாகத்துடன் நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com