விவகாரமான வழக்கில் வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்! தெரிந்தால் பாராட்டுவீர்களா? தூற்றுவீர்களா?

சேவியரின் செயலை பாலியல் இச்சை என்று வித்யாசப்படுத்தத் தேவை இல்லை. அதையும் சராசரி மனித வாழ்வின் அன்றாடக் கடமைகளான மூன்று வேளை உணவு, தினசரி இருவேளைக் குளியல் போன்று அணுகலாம்.
விவகாரமான வழக்கில் வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்! தெரிந்தால் பாராட்டுவீர்களா? தூற்றுவீர்களா?

மாமன்னர் பாண்டு தன் மனைவிகளில் ஒருவரான மாத்ரி தேவியுடன் கூடும் போது உறவின் உச்சத்தில் இதயம் கட்டுப்பாட்டை இழக்க அந்த நிலையிலேயே மாண்டார் என்கிறது மகாபாரதக் கதை. ஃப்ரான்ஸில் நடந்த ஒரு  சம்பவம் இதை இப்போது நமக்கு நினைவூட்டிச் செல்கிறது. சேவியர் எனும் ஃப்ரெஞ்சு இளைஞர் தமது வேலை நிமித்தமாக லாய்ரிட் எனுமிடத்திற்குச் செல்கிறார். அங்கு, அவர் தனக்கு கம்பெனி கொடுக்க வாடகைப் பெண்ணொருத்தியை அமர்த்திக் கொள்கிறார். அவளுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபடுகையில் துரதிர்ஷ்டவசமாகத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சடுதியில் இறந்து விடுகிறார். இது நடந்தது 2013 ஆம் ஆண்டில். வேலை நிமித்தம் அயலூருக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த திடீர் மரணம் என்ற வகையில் இந்தச் சம்பவம் காவல்துறையின் கவனத்துக்குச் சென்று வழக்குப் பதியப்படுகிறது. இறக்கும் போது சேவியர் பணியிலிருந்தது TSO  எனும் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனத்தில்.

இந்த வழக்கில் இந்தாண்டு மே மாதம் தீர்ப்பு வெளிவந்திருந்த நிலையில் அந்தத் தீர்ப்பின் நகலானது லிங்டு இன் தளத்தில் சாரா பாலுயட் எனும் வழக்கறிஞரால் பகிரப்பட்டிருக்கிறது. அதில் கண்டிருக்கும் தீர்ப்பின் படி, வேலை நிமித்தமாகச் சென்ற போது அங்கே முற்றிலும் ஒரு புதிய பெண்ணுடன் தனது பாலியல் தேவைக்காக சேவியர் உறவில் ஈடுபடும் போது அவருக்கு மரணம் நேர்ந்திருந்தாலும் கூட இந்த மரணத்தை 'work place death' என்று தான் அடையாளப்படுத்த முடியும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் பணி நேரத்தில் சேவியர் இறந்ததால் அதற்குண்டான சட்டப்பூர்வமான இழப்பீட்டை சம்மந்தப்பட்ட நிறுவனம் சேவியரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

சேவியர் பணி புரிந்த நிறுவனமானது, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தங்களுக்கான நியாயங்களை முன் வைத்து இந்த வழக்கில் மேலும் வாதாட முனைந்தது. எப்படியென்றால்;

சேவியர் வேலை நிமித்தம் வெளியூர் சென்ற போது யாரோ ஒரு புதிய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டு மாரடைப்பில் இறப்பதென்பது முற்றிலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தது. இதற்கு நிறுவனம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? இதில், உண்மையைச் சொல்ல வேண்டுமெனில்.. சேவியர், பாலியல் இச்சைக்காக ஒரு பெண்ணைத் தேடிச் சென்றதால் அவர் நிறுவனம் சார்பாக எந்த வேலைக்காக அங்கே சென்றாரோ அந்த வேலையை முடிக்காமல் அதை இழுத்தடித்திருக்கிறார். அவரால் எங்களது வேலை உரிய நேரத்தில் முடியாமல் தடைபட்டிருக்கிறது. என்று தான் நியாயமாகக் கருதவேண்டும். என சேவியர் பணி புரிந்த நிறுவனமானது நீதிமன்றத்தில் தங்கள் பக்க நியாயத்தை முன் வைத்தது.

ஆயினும், நீதிமன்றம் நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சேவியரின் செயலை பாலியல் இச்சை என்று வித்யாசப்படுத்தத் தேவை இல்லை. அதையும் சராசரி மனித வாழ்வின் அன்றாடக் கடமைகளான மூன்று வேளை உணவு, தினசரி இருவேளைக் குளியல் போன்று அணுகலாம். எப்படி இருந்தாலும் சேவியர் இறந்தது அவரது அதிகாரப்பூர்வமான பணிப் பயணத்தின் போது தான் என்பதால் அவரது மரணத்துக்கு உண்டான இழப்பீட்டை அவரது குடும்பத்தாருக்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் வழங்கியே ஆக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்தச் செய்தி இந்தியர்களான நமக்கு சற்று அதிர்ச்சியை அளிக்கலாம்.

ஆனால், யோசித்துப் பாருங்கள். இங்கேயும் தான் வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் அவர்கள் திருமணம் ஆனவர்களோ, அல்லது ஆகதவர்களோ எப்படிப் பட்டவர்களாக இருந்த போதும் அவர்களுக்கு விருப்பம் என்றால் அவர்களது தனிப்பட்ட வாழ்வை சுருங்கச் சொல்வதென்றால் பாலியல் சுதந்திர வாழ்வை அவர்களிஷ்டப்படி வாழலாம் என்று தான் சமீபத்தில் வெளிவந்த சில தீர்ப்புகள் சொல்லிச் சென்றன. தனி நபர் வாழ்வில் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அள்ளி வழங்கும் இத்தகைய தீர்ப்புகளின் நோக்கம் மக்களை மனம் போன போக்கில் வாழச் செய்து குட்டிச்சுவர் ஆக்குவது அல்ல. குறைந்த பட்சம் தனி மனித சுதந்திரத்தை, மனநலனைப் பாதுகாப்பதே நோக்கம். இந்தத் தெளிவு பலருக்கு இருப்பதில்லை.

இந்திய மனநிலைக்கு, வேலை நிமித்தம் வெளியூர் சென்ற இடத்தில் ஊர் பெயர் தெரியாத பெண்ணொருத்தியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அதைக் கள்ள உறவாகத்தான் கருதுவார்கள். அந்த அடிப்படையில் இப்படிப்பட்ட வழக்குக்கு நம்மூரில் நீதிபதிகள் என்ன விதமாகத் தீர்ப்பு வழங்கக் கூடும் என்று யோசித்துப் பாருங்கள். 

ஃபிரெஞ்சு நீதிமன்றம், சேவியரின் நிறுவனத்துக்கு அளித்த பதில் நியாயமானதா/அநியாயமானதா?

வாசகர்களான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பேசக்கூடாத விஷயம் என்று சிலவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய நிலையில் நமது சமூகம் இன்றில்லை.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிகிறது. பாரிஸில் நடந்த சம்பவம் நாளை நம் நாட்டிலும் நடக்காது என்று சொல்வதற்கில்லை.

இப்படி ஒரு வழக்கு நம் நாட்டில் நீதிமன்றப் படியேறினால், வழங்கப்படும் தீர்ப்பு என்னவாக இருக்க வேண்டும்? அல்லது இருக்கக் கூடும்?

வாசகர்களே கொஞ்ச நேரம் நீங்களே நீதிபதிகளாகி தீர்ப்புச் சொல்ல முயற்சி செய்து பாருங்களேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com