இடைத்தேர்தல் அறிவிப்பு: கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிகழுமா?

இடைத்தேர்தல் அறிவிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், இடைத்தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்று பேசப்படுகிறது.
இடைத்தேர்தல் அறிவிப்பு: கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிகழுமா?


கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அதே நேரத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

2018 சட்டப்பேரவைத் தேர்தல்:

கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக அதிகப்படியான(104) இடங்களை கைப்பற்றியது. ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்கள் பாஜகவிடம் இல்லாத சூழ்நிலையில், காங்கிரஸ்(79) - மதச்சார்பற்ற ஜனதா தளம்(37) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. 

இந்தத் தேர்தலில் மஜத-வுக்கு 'பம்பர் பரிசு' அடித்தது போல மிகவும் குறைவான இடங்களை கைப்பற்றினாலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க கைகோர்த்ததால், குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார்.

குமாரசாமி முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே, காங்கிரஸ் - மஜத இடையே சில குழப்பங்கள் நிலவி வந்தன. காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்வராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. அதே நேரத்தில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் பேசப்பட்டது. 

காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் ராஜினாமா:

இதன்பின்னர் கடந்த ஜூலை மாதம் கர்நாடக அரசியலில் பல திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர்  மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். 

பின்னர் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா. கடந்த ஜூலை 26ம் தேதி எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

மேலும், ஜூலை 31ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கால அவகாசம் அளித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 29ம் தேதி முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை உறுதி செய்தார் எடியூரப்பா.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் கடிதத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த சபாநாயகர் ரமேஷ் குமார், பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதுடன், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி, 17 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து, 17 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. 

இடைத்தேர்தல் அறிவிப்பு:

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலையும் அறிவித்துள்ளது.

அதன்படி, கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 17 தொகுதிகளில் மஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய இரு தொகுதிகளில் 2018 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்குகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 

முன்னதாக, சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து  எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னதாக, இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியதை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எனினும், விரைவில்  இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா?

எம்.எல்.ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு எதிராகவும்  எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் மனு அளிக்கலாம். இந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து தேர்தல் நிறுத்தி வைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்:

ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் கூட நிகழலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவின் பலம் 105+1(சுயேச்சை) உள்ளது. காங்கிரஸ்- 66, மஜத -34, பகுஜன் சமாஜ் -1 என எதிர்க்கட்சிகள் 101 இடங்களை கைவசம் வைத்துள்ளன. இந்த நிலையில், 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சட்டப்பேரவையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.  

காங்கிரஸ் - மஜத தனித்தனியே போட்டி: 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் தீவிர பரப்புரையில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். எனவே, அக்கட்சியின் மூத்தத் தலைவர்களான சித்த ராமையா, பரமேஸ்வரா ஆகியோர் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

குமாரசாமி ஆட்சியின் போது, தான் முதல்வராக வர வேண்டும் என்று சித்த ராமையா மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பேசப்படும் நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிகப்படியான இடங்களை பெற காங்கிரஸ் முயற்சிக்கும். மேலும், 15 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளதாக மஜத கட்சியின் தலைவரான தேவகவுடா அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் தனித்தனியே போட்டியிடுகிறது. இதனால் தேர்தலில் மும்முனைப்பு போட்டி நிலவும். காங்கிரஸ் மற்றும் மஜத 11 இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது. 

பாஜகவின் ஆட்சி நீடிக்குமா?

பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த 15 தொகுதிகளில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், காலியான தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸ் மற்றும் மஜதவின் வசம் இருந்த தொகுதிகள் என்பதால் பாஜகவுக்கு இது சற்று சவாலாகவே இருக்கும். மேலும், தேர்தல் நடைபெறும் 6 தொகுதிகள் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்கும் 'ஒக்காலிகா' சமூகத்தினர் அதிகம் இருக்கும் பகுதியாகும்.

அதே நேரத்தில்  பாஜக ஒவ்வொரு தேர்தலுக்கும் தனி வியூகம் வகுத்து வகுத்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பதற்காக ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலோடு கர்நாடக இடைத்தேர்தலிலும் பாஜக தீவிர கவனம் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி இடைத்தேர்தலிலும் தொடரலாம். 

இறுதியாக, கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து சட்டப்பேரவையில் மாற்றம் ஏற்படும் என்பதால் கர்நாடக இடைத்தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com