தீபாவளியாகக் கொண்டாடப்படும் என்கவுன்டர்கள்! பத்தே நாட்களில் முடிந்த வழக்கு!!

தெலங்கானாவில் பெண் மருத்துவரை திட்டமிட்டுக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று, உடலை எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட
தீபாவளியாகக் கொண்டாடப்படும் என்கவுன்டர்கள்! பத்தே நாட்களில் முடிந்த வழக்கு!!

தெலங்கானாவில் பெண் மருத்துவரை திட்டமிட்டுக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று, உடலை எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இது..

குற்றம்சாட்டப்பட்டவர்களை சுட்டுக் கொன்ற இடத்தில், பொதுமக்கள் - பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத பொதுமக்கள், மலர்களைத் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், தெலங்கானாவின் சில பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். போலீஸாருக்கு இனிப்பு வழங்கியும், பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

நரகாசுரனை வதம் செய்த நாளையே நாம் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம் என்றால், மண்ணில் வாழ துளியும் அருகதையற்ற இந்த குற்றவாளிகளை, போலீஸார், வேறு வழியில்லாமல், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ள இந்த நாளையும் நாம் கொண்டாடலாம்தானே?!

பத்தே நாட்களில் வழக்கை முடித்த போலீஸார்!
தெலங்கானாவில் பாலியல் கொடூர சம்பவம் நடந்து பத்தே நாட்களில் வழக்கையே முடித்துவிட்டனர் போலீஸார். இனி அவர்கள் சில சட்ட விவகாரங்களை சந்திக்க நேரிடும் என்றாலும், மக்கள் விரும்பும் ஒரு தீர்வை போலீஸார் அளித்துள்ளனர் என்றே சொல்லலாம்.

நவம்பர் 27: தெலங்கானாவில் 26 வயது கால்நடை பெண் மருத்துவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் மாயமானார்.

நவம்பர் 28: மாயமான பெண் மருத்துவரின் உடல் எரிந்த நிலையில், ஷத்நகர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

நவம்பர் 29: இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 20 வயது முதல் 24 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் திட்டமிட்டு, அப்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நவம்பர் 30: தேசிய அளவில் இந்த சம்பவம் கவனத்தை பெற்றது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.

டிசம்பர் 2 : நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் எதிரொலிக்கிறது. 

டிசம்பர் 4 : இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தெலங்கானா அரசு உத்தரவிடுகிறது.

டிசம்பர் 6 : குற்றம் நடந்தது எப்படி என நடித்துக் காட்ட சம்பவ இடத்துக்கு குற்றவாளிகளை போலீஸார் அழைத்துச் சென்றனர்.  அவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயலும் போது என்கவுன்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

இதன் மூலம் தங்களது இச்சையைத் தீர்க்க, ஒரு பெண்ணை கந்தையைப் போல கசக்கி எரிந்ததோடு அல்லாமல் கொன்று எரித்த குற்றவாளிகளுக்கு மக்கள் விரும்பும் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com