பட்டியல் வகுப்பு பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஓர் பார்வை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 17ம் பிரிவின் படி நம் நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரையறுக்கப்பட்டது.
பட்டியல் வகுப்பு பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஓர் பார்வை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 17ம் பிரிவின் படி நம் நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரையறுக்கப்பட்டது. ஆனால் தீண்டாமைக்குக் காரணமான ஜாதிகள் ஒழிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவில் ஜாதிகளை ஒழிப்பதற்காகத் தான் அரசியல் சட்டம் வழங்க முயற்சி செய்தார். ஆனால் அந்தக் காலத்தில் அவருக்கு இருந்த அதிகாரங்களுக்கு உட்பட்டுத் தீண்டாமையை ஒழிப்பதற்கான சட்டத்தை மட்டுமே எழுத முடிந்தது. அதற்குப் பின் வந்தவர்கள் ஜாதிகள் ஒழிப்பு பற்றி திட்டமிடவேயில்லை. எனவே அது ஒவ்வொரு உட்ஜாதிப் பெருமைகளையும் வளர்த்தெடுப்பதற்கான அடையளாங்களாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

ஜாதிகள் இருக்கின்ற வரை ஆதிக்கச் சிந்தனையும் அடக்குமுறை சிந்தனையும் இருக்கத் தான் செய்யும். இதனால் பாதிக்கப்படுகிற பட்டியல் வகுப்பு பழங்குடியினரைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களும் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது நடைமுறையில் இருக்கும் 1989 வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பட்டியல் வகுப்பினர் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், “ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார்களா?” என்ற கேள்வி மட்டுமே வரும். “இல்லை, இது வேறு விதமான குற்றச்சாட்டுகள்” என்று சொன்னால், “நீங்கள் சொல்வதெல்லாம் இந்தச் சட்டத்தின் கீழ் வராது”, என்று காவல்துறையினர் பதில் சொல்வர், பட்டியல் வகுப்பு பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டக் குற்றச் சாட்டுகளைப் பதிவதற்குக் காவல்துறை விரும்புவதில்லை. எது எது வன்கொடுமைகள், அதற்கான தண்டனைகள் என்ன? போன்றவை பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்குத் தெரியாததால் முறையாகப் புகார் தர முடிவதில்லை. எனவே எளிமையாக பட்டியல் வகுப்பு பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்தத் தகவல்கள் வழங்கப்படுகின்றன.

ஆறு மாதத்திற்குக் குறையாத, ஐந்தாண்டு வரை நீடிக்கலாகும் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தலுக்கான பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பின்வருமாறு:

உண்பதற்கு ஏற்கத் தக்காத அருவருப்பான பொருளைக் குடிக்கச் சொல்லியும் உண்ணச் சொல்லியும் வற்புறுத்துபவர்கள்

உடலுக்குத் துன்பம், அவமதிப்பு அல்லது தொல்லை தரும் கருத்துடன் பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் இருப்பிடத்தில் அல்லது இருப்பிடத்திற்கு அருகில் கழிவுப் பொருட்கள், இறந்த விலங்குகளின் சிதைவுகள், மலம், அருவருப்பான பிற பொருட்களைக் கொட்டி வைப்பவர்கள்

பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் உடைகளை அகற்றுதல், உடைகள் அற்ற நிலையில் இருக்கச் செய்தல், சாயம் பூசி அலங்கோலப்படுத்தி பிறர் காண்கிற வகையில் அழைத்துச் செல்லுதல் அல்லது இவை போன்ற மனித மாண்பை இழிவுப் படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர்

பட்டியல் வகுப்பினர் பழங்குடியினரின் நிலத்தில் பயிரிடுபவர்கள், அந்த நிலத்தை மாற்றம் செய்பவர்கள், அரசுச்  சட்டத்திற்கு முரணாகக் கையகப்படுத்துபவர்கள்

பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் நிலத்தில் அல்லது அவரது இடத்தில் உள்ள உடைமைகளைச் சட்டத்திற்கு எதிராகப் பறிப்பவர்கள், அல்லது அவரின் நிலம், இருப்பிடம், நீர்வசதியின் உரிமைகளில் குறுக்கிடுபவர்கள்

பட்டியல் வகுப்பினர் பழங்குடியினரை வற்புறுத்தி வேலை வாங்குதல், கட்டயாப் பணி அல்லாதவற்றிக்குத் திணிப்பவர்கள், கொத்தடிமைகளாகப் பயன்படுத்துவோர், ஆசை காட்டி வேலையைத் திணிப்பவர், பேகார் முறையில் வேலையைத் திணிப்பவர்கள்

பட்டியல் வகுப்பு பழங்குடியினரைக் குறிப்பட்ட ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றோ, குறிப்பிட்ட இவருக்கு வாக்களிக்கக் கூடாது என்றோ, சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றோ வற்புறுத்துபவர்கள்

பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு எதிராக பொய்யான, தீய நோக்கத்துடன் அல்லது அலைகழிப்புக்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் உரிமையியல் அல்லது குற்றவியல் அல்லது பிற சட்ட முறை நடவடிக்கைகளைத் தொடுப்பவர்கள்

பொது ஊழியர் எவரிடமும் பொய்யான அல்லது சிறுமைத்தனமான தகவலைக் கொடுத்துப் பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு எதிராக ஊறு அல்லது தொல்லை கொடுப்பவர்கள், அந்தப் பொது ஊழியரைப் பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு எதிராகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தச் செய்தல்

பட்டியல் வகுப்பு பழங்குடியினரை பொது மக்கள் பார்வையில் உள்ள இடத்தில் தாழ்வு படுத்தும் கருத்துடன் வேண்டுமென்றே அவமானப்படுத்துபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள்

பட்டியல் வகுப்பு பழங்குடிக் குடியினராக உள்ள பெண்ணுக்கு மானக் கேடு, நாணச் சிதைவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரைத் தாக்க முனைபவர்கள் அல்லது தாக்குபவர்கள்

பட்டியல் வகுப்பு பழங்குடியினராக உள்ள பெண்ணின் உள்ளத்தில் ஆதிக்கம் பெற்று, அந்தப் பெண்ணைத் தன் பாலுணர்வுச் செயல்களுக்குப் பயன்படுத்துபவர்கள்

பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் பயன்படுத்தும் நீருற்று, நீர்த்தேக்கம் அல்லது அவர்களின் நீர் ஆதாரங்களின் நீரைக் கெடுப்பவர்கள் அல்லது மாசுபடுத்துபவர்கள்

பொதுமக்கள் கூடுகிற இடத்திற்குச் செல்லும் பாதையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை மறுப்பவர்கள், பொது மக்களோ அவர்களில் ஒரு பிரிவினரோ பயன்படுத்தும் அல்லது சென்றுவரும் கூடும் இடத்தினைப் பயன்படுத்தவோ அங்கு சென்று வரவோ அவரைத் தடுப்பவர்கள்

பட்டியல் வகுப்பு பழங்குடியினராகிய ஒருவரின் வீட்டையோ, ஊரையோ அவர் குடியிருக்கும் பிற இடத்தையோ விட்டு அகலுமாறு வற்புறுத்துபவர்கள் அல்லது வெளியேற்றச் செய்பவர்கள்

பொய்ச் சான்று அளித்து அல்லது பொய்ச் சான்று உருவாக்கிப் பட்டியல் வகுப்பு பழங்குடியினர் ஒருவரை மரண தண்டனைக்கோ அல்லது அந்தக் குற்றத் தீர்ப்புக்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் அளிக்கப்பட வேண்டும். பொய்ச் சான்றுகளை அளித்துப் பட்டியல் வகுப்பு பழங்குடியினரைத் தூக்கிலிடக் காரணமாக இருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

பொய்ச் சான்று அளித்து அல்லது பொய்ச் சான்று உருவாக்கி பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குச் சிறைத் தண்டனை பெற காரணமானவர்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாத ஏழாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் அளிக்கப்படும்

பட்டியல் வகுப்பினர் பழங்குடியினரின் உடைமைகளுக்கு நெருப்பு அல்லது வெடிப் பொருட்கள் மூலம் சேதம் விளைவிக்கச் செய்தால், அல்லது சேதம் விளைவிக்க முனைந்தால் அவருக்கு ஆறு மாதத்திற்குக் குறையாத ஓராண்டிற்கு நீடித்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் வழிபாட்டிடம், வாழுமிடம், சொத்து கையடைவில் வைப்பதற்கான இடம், வழக்கமாகப் பயன்படுத்தும் இடம் , கட்டடம் ஆகியற்றிற்குத் தீ, வெடிபொருள் அல்லது வேறு பொருளால் அழிவு ஏற்படுத்துதல் அல்லது அழிவு ஏற்படுத்தும் கருத்துடன் செயல்படுதல் ஆகியவற்றிக்கு ஆயுள்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பட்டியல் வகுப்பு பழங்குடியினரின் சொத்துக்கு இன்னார் என்னும் காரணத்தைக் கொண்டே பத்தாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குச் சிறைத் தண்டனை பெற்றிருப்பார் எனில் அவருக்கு ஆயுள்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்

பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு எதிராக குற்றச் செயல் இழைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்தோ அல்லது இழைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான நிலையிலோ குற்றவாளியைக் காப்பதற்கான கருத்துடன், அந்தக் குற்றம் இழைக்கப்பட்டதற்கான சான்றை மறைக்கும் கருத்துடன் அல்லது பொய் என்று தெரிந்தும் பொய் என்று நம்பியும் குற்றச் செயலுக்குத் துணை போனால் தண்டிக்கப்படுவார்.

பொது ஊழியராக இருந்து பட்டியல் வகுப்பினர் பழங்குடியினருக்கு எதிராகக் குற்றச் செயல்புரிந்தால் அவர் ஓராண்டிற்குக் குறையாத அளவிற்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்.

பொது ஊழியர் ஒருவர் தனது கடமைகளை வேண்டுமென்றே புறக்கணித்தால் அவருக்கு ஆறு மாதத்திற்குக் குறையாத ஓராண்டிற்கு நீடிக்கத் தக்கக் கால அளவிற்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்து தண்டனை பெற்றவர் மீண்டும் இரண்டாவது முறை குற்றம் இழைத்தால் அவருக்குக்கு ஓராண்டிற்குக் குறைவில்லாத தண்டனை வழங்கப்படும்.

இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்திற்குப் பொருந்துகிற அனைத்தும் இந்தச் சட்டத்திற்கும் பொருந்தும்.

இச்சட்டத்தின் கீழ் குற்றத் தீர்ப்புப் பெற்றவருக்குச் சொந்தமான, குற்றச் செயலைச் செயப்படுதுதவதற்குக் காரணமான அசையும் அசையா சொத்து அல்லது இரண்டு வகையான சொத்துகளையும் அரசாங்கத்திற்காகப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் எழுத்தாணை வழங்கலாம்.

இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துகளைப் பற்றுகை செய்ய ஆணை பிறப்பிக்கலாம். குற்றத் தீர்ப்பு வழங்கப்படும்போது அபராதத் தொகைக்காக அச்சொத்துகள் பறிமுதல் செய்யலாம்.

இச்சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றச் செயலை இழைத்ததாக ஐயப்பாடு உள்ளான ஒருவருக்குப் பண உதவி அளித்திருந்தால் அவரைக் குற்றச் செயலுக்கு உடந்தையானவர் என்று கருதலாம்.

குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கு அரசாங்கம் செய்ய வேண்டியவை:

  • வன்கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் நீதிபெறுவதற்கு சட்ட உதவி உள்ளடங்கிய போதிய வசதிகளை ஏற்படுத்தல்
  • புலனாய்வு, விசாரணைகளின் போது வன்கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கும் சாட்சி சொல்பவர்களுக்கும் பயணப்படி, உணவுச் செலவு வழங்கப்படுதல் வேண்டும்
  • வன்கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்குப் பொருளாதார, சமூக மறுவாழ்விற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
  • இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுப்பதற்கும், அவற்றைக் கண்காணிப்பதற்கும் அலுவலர்களை அமர்த்த வேண்டும்.
  • மாநில அரசுக்கு உதவி புரிய உரிய நிலைகளில் குழுக்களை அமைத்துக் கொள்ள வேண்டும்
  • இந்தச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவதற்காகக் காலந் தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
  • பட்டியல் வகுப்பு பழங்குடியினர் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பகுதிகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்
  • இச்சட்டம் பற்றிய செயல்பாடுகளின் விவரங்களை மாநிலங்களடமிருந்து பெற்று மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இச்சட்டம் குறித்த முழுமையான தகவல்களுக்கு பட்டியலில் கண்ட ஜாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 (சட்ட எண் 33/1989). சட்ட, நீதி மற்றும் நிறும அலுவலல்கள் அமைச்சகம் (சட்டத்துறை) புது தில்லி, 23.11.1992 இந்திய அரசிதழில் பார்க்கலாம்.
 

செந்தமிழ்சரவணன்

செல்பேசி: 9360534055 

மின்னஞ்சல்: senthamizhsaravanan@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com