சுடச்சுட

  

  Personality என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் உருவான சுவாரஸ்யமான கதை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 25th February 2019 12:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  abidhana_sinthamani

   

  இன்று நாம் ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழில் பயன்படுத்தும் தமிழ் கலைச் சொற்கள் பலவும் மிகுந்த யோசனைகளுக்குப் பின் ஒரு குழுவாகப் பலரால் பலவிதமாக அலசி ஆராயப்பட்டு அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதமாக அமைந்தால் மட்டுமே நிலைக்கச் செய்வது என்ற அடிப்படையில் உருவானவையே... அந்தச் சொற்களின் பின்னணியில் பலரது உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் இருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்காக நாம் நன்றி சொல்வதானால் பலருக்கும் சொல்ல வேண்டியிருக்கும். அவர்களும் முதன்மையான நபர்கள் திருப்பூர் அவினாசிலிங்கம் செட்டியார், தமிழறிஞர் வித்துவான் தெ.பொ மீனாட்சி சுந்தரனார், தமிழ் கலைக் களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகச் செயலாற்றிய பெரியசாமி தூரன், அந்நாளில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அங்கத்தினர்களாகவும், புரவலர்களாகவும் இருந்த பிரபலஸ்தர்கள் பலர் என ஒவ்வொருவருக்கும் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

  தமிழ் வளர்ச்சிக் கழகம் தோன்றிய கதை வெகு சுவாரஸ்யமானது. இந்தக் கழகத்தை அவினாசிலிங்கம் செட்டியார் உருவாக்கியதே தமிழில் ஒரு கலைக் களஞ்சியத்தை உண்டாக்கியே தீருவது எனும் பேரவாவுடன் தான். அதன் முதற்படியாக அவர் உருவாக்கியதே தமிழ் வளர்ச்சிக் கழகம். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கத் தொடங்கிய இந்தக் கழகம் இப்போதும் அங்கு எளிமையான முறையில் இயங்கி வருகிறது. அதன் மூலமாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படைப்புகளுக்கு விருதுகள் அளிக்கப்படுகின்றன. தமிழில் கலைக்களஞ்சியம் என்பது ஒரு மாபெரும் முயற்சி. மிகுந்த பொருட்செலவையும் தமிழ் மீது பற்று கொண்ட பலருடைய நேரம் காலம் பாராத உழைப்பையும் அரசு நிதி உதவி பெறுவதற்கான அளவிடற்கரிய சகிப்புத் தன்மையையும் வேண்டி நின்ற மாபெரும் பணி அது. அதை விடாமுயற்சியுடன் நின்று நிறைவேற்றி தமிழிலும் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த  என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவைப் போன்ற ஒரு முழுமையான கலைக் களஞ்சியத்தை கொண்டு வந்த பெருமை அவினாசிலிங்கனாரையே சாரும்.

  இருபது ஆண்டுகால உழைப்பு, 1200 கட்டுரையாளர்கள், 15,000 தலைப்புகள், 7,500 பக்கங்கள், 10 தொகுதிகள் கொண்டு 1953 முதல் 1968 வரை வெளியான கலைக்களஞ்சியம் இந்திய பதிப்புலகில் ஒரு சாதனை.

  தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்று ஆவல் இருந்த போதும் மாதிரிக்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த பிரிட்டானிகா என்சைக்ளோபீடியாவைத்தான். ஏனெனில் தமிழில் அதற்கு முன்பு அப்படியான முயற்சிகள் ஏதும் நடந்திருக்கவில்லை என்பதால். தமிழில் முறையான தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்படும் முன் இரண்டு நூல்கள் பெரிதும் பேசப்பட்டன. அவை முறையே,  ‘அபிதான சிந்தாமணி’ மற்றும் ‘அபிதான கோசம்’ என்பவை. இவை இரண்டிலுமே புராணம் தொடர்பான கதைகளும், தகவல்களுமே அதிகமிருந்ததாகத் தகவல். வெறு செவி வழிக்கதைகளை மட்டுமே வைத்துக் கொண்டு அகராதிகளைத் தொகுக்க முடியாது இல்லையா? அதன் காரணமாகவே ஆரம்பத்தில் குறைவான உறுப்புனர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ் வளர்ச்சிக் கழகம் பின்னர் 50 உறுப்பினர்களுடன் விஸ்தரிக்கப்பட்டது. காரணம் பல்வேறு விதமான அறிவியல், தாவரவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், மனையியல், மருத்துவம், சோதிடம், சாஸ்திரம், பக்தி இலக்கியம்,  பெளதிகம் எனப் பலதரப்பிலிருந்தும் பெறப்படும்டும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்க  அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர் என்கிறது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் தமிழ் கலைக் களஞ்சியத்தின் கதை.

  அந்த உழைப்பின் ஒரு சிறு துளி எப்படி உருவானதென்னும் கதையை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

  Personality என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ் சொல்லாக்கம் எப்படி உருவானது என்று தூரன் அவர்கள் பதிவு செய்திருக்கும் விதம் சுவாரஸ்யமானது.

  கலைச்சொற்கள் நல்ல தமிழில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியாக அமைப்பது மிகக்கடினம். எடுத்துக்காட்டாக, personality என்ற கலைச்சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்பு உளவியல் துறையில் பலர் பலவிதமாகக் கலைச்சொல் உருவாக்க முயன்றிருக்கிறார்கள். மூர்த்திகரம், தோற்றம், தோற்றப்பொலிவு என்பவை எல்லாம் அவர்கள் பயன்படுத்திய சொற்களாகும். ஆனால் இவைகளில் எவையும் முழு மனநிறைவைப் பெறாதவையே ஆகும்...
  ஆகவே இந்த ஒரு சொல்லுக்கு மட்டும் ஒரு கூட்டம் முழுவதும் செலவழித்தோம். செலவழித்தாலும் ஏற்ற சொல்லைக் காண முடியாமல் தடுமாறினோம். இறுதியாக personality என்ற சொல்லுக்குப் பன்மொழிப் புலவர் திரு. தெ.பொ மீனாட்சி சுந்தரனாரையே அடுத்த நா ஒரு புதுச் சொல் கண்டுபிடித்து வருமாறு கேட்டுக் கொண்டோம்.
  இறுதியாக இலக்கணத்தைப் பயன்படுத்தி ‘ஆளுமை’ என்ற சொல்லை அடுத்த நாள் கூட்டத்திலே தெரிவித்தார்கள்.
  Encyclopaedia என்பதற்கீடாகக் ’கலைக்களஞ்சியம்’ என்ற சொல்லாக்கமே கூட இக்குழுவின் உருவாக்கம் தான் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. ஏறத்தாழ 25,000 சொற்கள் உருவாக்கப்பட்டதாகத் தூரம் பதிவு செய்திருக்கிறார்.

  இந்தக் கதை இப்போது ஏன் என்று தோன்றினால்... ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

  இந்த ஆளுமை என்கிற சொல்லை நாம் தினமும் ஒருமுறையாவது பயன்படுத்தாமல் இருக்கிறோமா என்று.

  ஊடகங்களில் ஆளுமை என்ற சொல்லின்றி பொழுதே விடிவதில்லை.

  அரசியலிலும் ஆளுமை என்ற சொல்லாட்சி இல்லாவிட்டால் அரசியல் பருப்புகளை அத்தனை எளிதில் வேக வைத்து விட முடியுமா என்ன?

  ஆக மொத்தம் நாமெல்லோருமே இந்தக் கதைகளை எல்லாம் அறிந்து கொண்டோமெனில் ஒரு வழியாக அந்தந்தச் சொற்களை சரியான விதத்தில் பயன்படுத்தியே தீர்வது எனும் ஒரு முடிவுக்கு நிச்சயமாக வரலாம்.

  நன்றி: தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை (ஆ.இரா.வேங்கடாசலபதி)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai