2019-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பெறுகிறார் பாடகி செளம்யா!

சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி மற்றும் இதர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பெறுகிறார் பாடகி செளம்யா!

சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி மற்றும் இதர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவு செய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கர்நாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கர்நாடக இசையுலகில் மிக உயரிய விருதான இசைக் கலைஞர் டாக்டர் எஸ்.செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீத கலாநிதி எஸ். ராமநாதனிடமும் சங்கீத கலா ஆச்சார்யா டி. முக்தாவிடமும் இசை பயின்றார் செளம்யா. சென்னை பல்கலைக்கழத்தில் 'இந்திய இசையில்' முனைவர் பட்டம் பெற்றுள்ளார் செளம்யா. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 'மியூசிக் அகாதெமியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிக்காலஜிஸ்ட், நிருத்ய கலாநிதி உள்ளிட்ட விருதுகளுக்கு, விருது பெறுபவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் எஸ்.சௌம்யாவுக்கு வழங்கப்படுகிறது. எம்.எஸ்.ஷீலா மற்றும் சீதா நாராயணனுக்கு கலா ஆச்சார்யா விருது வழங்கப்படுகிறது.

நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமன் மற்றும் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதிக்கு டிடிகே விருது வழங்கப்படுகிறது. மியூசிக்காலஜிஸ்ட் விருதுக்கு ஆர்த்தி என்.ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடனமாமணி பிரியதர்ஷினி கோவிந்த் நிருத்ய கலாநிதி விருது பெறுகிறார்.

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ள இவ்விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படும். நிருத்ய கலாநிதி நாட்டிய விருது பெறும் பிரியதர்ஷினி கோவிந்துக்கு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் நாட்டிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செளம்யா இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை நடை பெறவிருக்கும் அகாதெமியின் 93-வது ஆண்டு மாநாட்டுக்கு தலைமை தாங்குவார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெற்ற கலைஞர்கள் :

2018- அருணா சாயிராம் (வாய்ப்பாட்டு)
2017 - என். ரவிகிரண் (சித்திர வீணை)
2016 - ஏ. கன்யாகுமாரி (வயலின்)
2015 - சஞ்சய் சுப்ரமண்யன் (வாய்ப்பாட்டு)
2014 - டி. வி. கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்)
2013 - சுதா ரகுநாதன் (வாய்ப்பாட்டு)
2012 - திருச்சூர் வி. இராமச்சந்திரன் (வாய்ப்பாட்டு)
2011- திருச்சி சங்கரன் (மிருதங்கம்)
2010 - பம்பாய் சகோதரிகள் C.சரோஜா - C.லலிதா (வாய்ப்பாட்டு)
2009 - வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் (தவில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com