‘துறவி’ ஆக ஆசைப்பட்ட சாரங்கி ‘ஒதிஷா’ மக்களின் மந்திரியான வெற்றிக்கதை!

சாரங்கிக்கு ஆதரவாக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனினும் ஒதிஷாவில் பாஜகவைக் காட்டிலும் மாநிலக் கட்சியான பிஜூ ஜனதா தளத்திற்கு செல்வாக்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது.
‘துறவி’ ஆக ஆசைப்பட்ட சாரங்கி ‘ஒதிஷா’ மக்களின் மந்திரியான வெற்றிக்கதை!

எளிய மனிதரின் அபார வெற்றி!

தேர்தல் வெற்றிகளில் பலவகை உண்டு. வெற்றியடைவதற்கான அனைத்து வசதி, வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டு பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் அரசியல் பிரபலங்கள் வெற்றி அடைவதில் வியப்பேதும் அடைய அவசியமில்லை. அந்த வெற்றிகள் பத்தோடு பதினொன்றாகக் கருதத் தக்கவை. ஆனால், எங்கொருவர் எவ்விதமான ஸ்பெஷல் அஸ்திரங்களும் இன்றி தமது மக்கள் சேவை ஒன்றின் வாயிலாக மட்டுமே அடையாளம் காணப்பட்டு அனேக மக்களை ஈர்த்து அதிசயிக்கத் தக்க வெற்றியை ஈட்டி மக்களை குதூகலமாகப் புருவம் உயர்த்தி ஆர்ப்பரிக்க வைக்கிறாரோ அவரது வெற்றி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி என்பதில் இங்கு எவருக்கும் ஆட்சேபமிருக்காது என நம்புகிறேன்.

அப்படியொரு வெற்றிக்கு சமீபத்தில் பாத்திரமாயிருக்கிறார் ஒதிஷாவின் பிரதாப் சந்திர சாரங்கி. பார்வைக்கு மிக மிக எளிய மனிதராகக் காட்சியளிக்கும் சாரங்கியைக் கண்டால் எதிர்க்கட்சியினருக்கு சிம்ம சொப்பனம் என்கிறார்கள் ஒதிஷா மக்கள். ஏனெனில், மக்கள் சேவையென வந்து விட்டால், எந்த ஒரு பிரச்னையையும், அதற்கான தீர்வுகளையும் தரவுகளுடன் முன் வைத்து மிகச்சிறப்பாக வாதிட்டு தன்னுடைய மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கக் கூடியவர் சாரங்கி என்ற பாராட்டு அவருக்கு எப்போதும் உண்டு. அத்துடன் சாரங்கியின் அப்பழுக்கற்ற தன்மையும், குற்றம் கண்டால் பொறுக்காமல் சம்மந்தப்பட்ட நபரிடமே அதை நேருக்கு நேர் வாதிடும் தைரியமும் அவரை எளிய மனிதர்களிடம் மிக எளிதாகக் கொண்டு சேர்க்கப் போதுமானதாக இருந்தது. அதனால் தான் 2019 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார நேரத்தில், சாரங்கியை எதிர்த்து போட்டியிட்ட சிட்டிங் எம் பி ரபிந்திரகுமார் ஜேனாவுக்கு ஆதரவாக மாநில முதல்வரான நவின் பட்நாயக்கே பிரச்சாரம் செய்தும் கூட அவரை சாரங்கியால் வெல்ல முடிந்திருக்கிறது. இந்தப்பக்கம் சாரங்கிக்கு ஆதரவாக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனினும் ஒதிஷாவில் பாஜகவைக் காட்டிலும் மாநிலக் கட்சியான பிஜூ ஜனதா தளத்திற்கு செல்வாக்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது.

பிறப்பு...

பிரதாப் சந்திர சாரங்கி, பிறந்தது 1955 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள். ஒதிசாவின் பாலசோர் நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த கோபிநாத்பூர் எனும் கிராமத்தில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.

எளிமைக்கும் சேவை மனப்பான்மைக்கும் கிடைத்த அரிய வெற்றி...

64 வயதான சாரங்கியின் தேர்தல் வெற்றி அத்தனை லேசானதல்ல. 12,956 எனும் மிகச் சொற்பமான ஓட்டு வித்யாசத்தில் தான் சாரங்கி வென்றிருக்கிறார். ஏனெனில், இம்முறை சாரங்கிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் இருவருமே மிகப்பிரபலமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பணக்காரர்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் இருவருக்குமே சொந்தமாக ஊடக பலமும் உண்டு. அப்படிப்பட்ட அசுர பலம் கொண்ட வேட்பாளர்களை, சாரங்கி வென்றதற்கு, மக்கள் சாரங்கியை வெல்லச் செய்ததின் பின்னணியாக சாரங்கியின் அப்பழுக்கற்ற மக்கள் சேவையை மட்டுமே கூற முடியும். அதனால் தான் பாஜக தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நேற்று இரவு சாரங்கி மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட போது பாஜக அகில இந்தியத் தலைவரான அமித்ஷா கைதட்டி வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சாரங்கியின் இளமைக்காலம்...

பாலசோரில் உள்ள உத்கல் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஃபக்கிர் மோகன் கல்லூரியில் 1975 ஆம் வருடம் தனது இளநிலைக் கல்லூரிப் படிப்பை முடித்தார் சாரங்கி. அந்த இளம் வயதிலேயே சாரங்கிக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல பரிச்சயம் உண்டு. காரணம் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள். பால்ய வயதில் ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சாரங்கிக்கு ராமகிருஷ்ண மடத்தில் இணைந்து துறவி ஆக வேண்டும் என்பதே முதல் விருப்பமாக இருந்திருக்கிறது. 

துறவி ஆக ஆசைப்பட்ட சாரங்கி...

அதற்காக அவர் மேற்கு வங்க மாநிலம், ஹெளராவில் இருக்கும் பேளூர் ராமகிருஷ்ண மடத்திற்கு பலமுறை சென்றிருக்கிறார். மடத்தைச் சேர்ந்த துறவிகள், சாரங்கியின் பயோடேட்டாவை வாங்கிப் பார்வையிட்டனர். சாரங்கியின் ஆன்மீகப் பற்று குறித்தும் மக்கள் சேவை மீதான ஆர்வம் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டனர். ராமகிருஷ்ண மடத்தைப் பொருத்தவரை ஒருவரை துறவியாக அங்கீகரிப்பதற்கு முன்பு, அவரைப்பற்றி முழுமையான தகவல்கள் சேகரிக்கப்படுவது வழக்கம். அப்படியான விசாரணையில் சாரங்கிக்கு ஒரு விதவைத் தாயார் இருப்பது தெரிய வந்தது. எனவே, விதவையான தாயாரை அம்போவென விட்டு விட்டு சாரங்கி துறவியாவது உசிதமானது அல்ல என்று கருதிய மடத்து சந்நியாசிகள், சாரங்கியை அழைத்து... முதலில் உன் விதவைத் தாய்க்கு உதவியாகவும், அனுசரணையாகவும் இருந்து உன் கடமையை முடி என்று அறிவுறுத்தி அவரை மீண்டும் அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தனர். அப்படி ஓர் திரும்பியவரான சாரங்கி, அதன் பின் தனது ஆர்வத்தை முழுமையாக மக்கள் சேவையில் திருப்பினார். தன் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் உடனே சென்று உதவக்கூடிய மனிதராக சாரங்கி மாறினார். 

மக்கள் சேவையே மகேஷன் சேவை!

மலைவாழ் மக்கள் நிறைந்த பலாசோரில், ஏழை, எளிய மக்களுக்காக சாரங்கி ’ சமர் கர கேந்திரா’ எனும் பெயரில் பல்வேறு பள்ளிகளைத் திறந்து வைத்திருக்கிறார். மத்திய அரசின் ஞான சிக்‌ஷா மந்திர் யோஜனா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு இலவச கல்வி பெற்றுத்தரும் முயற்சியான இத்திட்டத்தின் கீழ் ஏராளமான மலைவாழ் இனக் குழந்தைகளின் கல்விக்கு உத்தரவாதமளித்தவர் சாரங்கி எனும் நன்றி உணர்வு அப்பகுதி மக்களுக்கு எப்போதுமே சாரங்கியின் மீது உண்டு. அது மட்டுமல்ல இப்போதும் கூட தனக்கு வரும் எம் எல் ஏ பென்சன் தொகையின் பெரும்பகுதியை சாரங்கி அப்பகுதி ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

ஒதிஷாவின் மோடியான கதை...

நேற்று டெல்லி, ராஷ்டிரபதி பதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு, மூங்கில் குடிசையினால் ஆன தனது இருப்பிடத்தில் இருந்து வெகு எளிமையாக சாரங்கி தனது உடைகளை பேக் செய்து கொண்டு கிளம்பிய புகைப்படங்கள் இப்போதும் இணையத்தில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. மோடி அமைச்சரவையில் கொண்டாடப்படத் தக்க ஒரு மனிதராக இந்த எளியவர் அடையாளம் காணப்படுகிறார். ஒதிஷா ஊடகங்கள் இவரை ‘ஒதிஷாவின் மோடி’ எனப் புகழ்கின்றன.

சைக்கிளில் பயணிக்கும் எளிமையான எம்பி!

சாரங்கி மிகச்சிறந்த பேச்சாளர். அவரால் ஒடியா மற்றும் சமஸ்கிருதத்தில் மிகச்சிறப்பாக பேருரை ஆற்ற முடியும். மிகத்தீவிரமான ஆர் எஸ் எஸ் ஈடுபாட்டாளர், தனது தொகுதியைச் சார்ந்த மக்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் உடனடியாகத் தனது சைக்கிளில் ஏறிப் பயணித்து மக்களைச் சந்தித்து பிரச்னைகளைக் களையக் கூடியவர் என்ற பாராட்டுக்குரியவர். தற்போது, தூரமான இடங்களில் இருக்கும் மக்களைச் சந்திக்க ஆட்டோக்களையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறாராம்.

லட்சாதிபதி வேட்பாளர்களை வென்று சாதனை படைத்த சாமானியர்!

பலாசோர், நீலகிரி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக வென்று இருமுறை எம் எல் ஏ வாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட  சாரங்கி இம்முறை வென்றிருப்பது பலாசோர் சிட்டிங் எம் பி & பிஜூ ஜனதா தள தலைவர்களில் ஒருவரான ரபிந்திர குமார் ஜேனாவை. ஜேனாவைத் தவிர்த்து இம்முறை சாரங்கி மோதிய மற்றொரு வேட்பாளர் காங்கிரஸின் நபஜோதி பட்நாயக். இவரது தந்தை நிரஞ்சன் பட்நாயக், ஒதிஷா மாநில காங்கிரஸ் தலைவர் என்ற பெருமை நபஜோதிக்கு எப்போதும் உண்டு. இவரது சிற்றப்பா செளம்ய ரஞ்சன் பட்நாயக், ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் சார்பில் ராஜ்ய சபா எம் பியாகப் பதவி வகிக்கிறார். அத்துடன் இவருக்குச் சொந்தமானது தான் ஒதிஷாவின் பிரபலமான சம்பாத் தினசரிப் பத்திரிகை மற்றும் கனக் டிவி எனும் 24 மணிநேர செய்தி ஊடகமும். இவை தவிர இக்குடும்பத்திற்குச் சொந்தமாக சுரங்கத் தொழிலும் கூட உண்டு. மறைந்த ஒதிஷா முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மருமகனே இந்த செளம்ய ரஞ்சன் பட்நாயக். உண்மையைச் சொல்வதென்றால் இரண்டு அரசியல் அசுர பலங்களுக்கு இடையே மிகச்சொற்ப வித்யாசத்தில் சாரங்கி வெற்றி வாகை சூடியது இன்னமும் எதிர்தரப்பினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாகத்தான் அம்மாநில மக்களால் உணரப்படுகிறது.

சிறு, குறு, நடுத்தரத் தொழில், பால் மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் சாரங்கி!

சாரங்கி என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் இசைக்கருவி என்றொரு அர்த்தம் உண்டு. அது தவிர சார்ங்கம் எனும் திருமாலின் வில்லின் நினைவாகவும் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சாரங்கி, சாரங்கபாணி என்று பெயர் சூட்டுவது உண்டு. இந்த சாரங்கிக்கு அர்த்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சாரங்கி எனும் இசை அதன் ரசிகர்களை எப்படி ஈர்த்து மயக்குகிறதோ அதே அளவில் ஒதிஷாவின் சாரங்கி தனது ஆதரவாளர்களை தனது தன்னலமற்ற சேவையால் மயக்கி தன் வசப்படுத்தியதின் விளைவே இன்றைய அவரது வெற்றி. எனவே இந்த சாரங்கியின் மூலம் ஒதிஷா பழங்குடி இனமக்கள் மற்றும் சாமானிய மக்கள் பலரது பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டால் இவரது புகழ் அகில இந்திய அளவில் மேலும் ஓங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com