தீபாவளி தோறும் வட சென்னைவாசிகளை அச்சுறுத்தும் மாஞ்சா நூல் பீதி! விடிவே இல்லையா?

மாஞ்சா காற்றாடி நூலுக்குப் பெரிதும் பலியாகக் கூடியவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளே! வாகன ஓட்டிகள் என்பதை விட வாகனத்தின் முன் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் குழந்தைகளே
தீபாவளி தோறும் வட சென்னைவாசிகளை அச்சுறுத்தும் மாஞ்சா நூல் பீதி! விடிவே இல்லையா?

மாஞ்சா நூலின் ரத்த தாகம்..

சென்னையில் பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் கயிறு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில உயிர்ப்பலிகளும் மேலும் சிலருக்கு மோசமான குரல்வளைபாதிப்புகளும் ஏற்பட்டு விட்ட நிலையில் மாஞ்சா நூல் காற்றாடி விடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது உயர்நீதிமன்றம். ஆயினும் இன்று வரையிலும் சென்னையின் சில பகுதிகளில் வாழும் மக்கள் சட்டத்தை மதித்ததாகத் தெரியவில்லை. ஆண்டு தோறும் மாஞ்சா நூல் விபத்து காரணமாக ஒரே ஒரு உயிரிழப்பாவது ஏற்படாமல் ஓயாது போலிருக்கிறது அந்த நூலின் ரத்த தாகம்!

மாஞ்சா நூலுக்கு குழந்தை அபினேஷ் பலி..

இதோ, நேற்று சென்னை கொருக்குப் பேட்டையில் ஒரு உயிரைப் பலி கொண்டிருக்கிறது மாஞ்சாநூல் காற்றாடி மோகம்.

வட இந்தியரான மோகித், நேற்று சென்னை கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் தனது 3 வயதுமகன் அபினேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென, மேலே பறந்து கொண்டிருந்த மாஞ்சா நூல் காற்றாடி வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த குழந்தையின் கழுத்தைச் சுற்றிப் படர்ந்து இறுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பலத்த காயமடைந்தான். உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் கூட செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டான். குழந்தை மரணத்தைத் தொடர்ந்து இது குறித்து ஆர் கே நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வடசென்னைப் பகுதிகளில் இப்படி மாஞ்சா நூல் கயிற்றில் சிக்கி அடிக்கடி யாராவது உயிரிழப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் அரசும், நீதிமன்றமும் சட்டம் போட்டுத் தடுத்த பின்னரும் கூட மீண்டும் மீண்டும் இதன் காரணமாக உயிர்ப்பலி நேர்வது கண்டிக்கத் தக்கது.

கடந்த ஆண்டு மாஞ்சா நூலில் சிக்கித் தப்பிய லோகேஷ்குமார்..

கடந்த ஆண்டும் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்ற இளைஞருக்கு மாஞ்சா காற்றாடி நூல் கழுத்தை அறுத்தது. உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு கழுத்தைச் சுற்றி 23 தையல்கள் போடப்பட்டு வீடு திரும்பினார் லோகேஷ்குமார். ஆயினும் வீடு திரும்பிய மறுநாளே தையல் போடப்பட்ட இடத்தில் ரத்தக்கசிவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவரானார். இத்தனைக்குப் பிறகும் இந்த இளைஞரால் சரியாகப் பேசப் முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் அப்போது விபத்துக்குக் காரணமான மாஞ்சா நூல் பறக்க விட்ட 18 மற்றும் 16 வயதுக்குட்பட்ட இரு இளைஞர்கள் அப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்கின்றன ஊடகச் செய்திகள்.

சென்னையில் தொடரும் மாஞ்சா நூல் காத்தாடி பலிகள்.. 

  • சென்னையில் 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்த மாஞ்சா நூல் கயிற்று விபத்தினால் 4 உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன.
  • 2015 ஆம் ஆண்டில் அஜய் என்கிற 5 வயதுச் சிறுவன் உயிரிழந்திருக்கிறான்.
  • 2017 ஆம் ஆண்டில் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

சென்னை மக்களை மாஞ்சாக் கயிறு பீதியிலிருந்து காக்கும் முழுப்பொறுப்பு சென்னைக் காவல்துறைக்கு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில் இது குறித்து மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்குமா காவல்துறை என்று பொறுத்திருந்து காண வேண்டும்.

ஆண்டு தோறும் தீபாவளி சமயங்களில் திடீரென முளைக்கும் மாஞ்சாக் காத்தாடி பீதியை தடுப்பது எப்படி?

சென்னையில் தீபாவளி சமயங்களில் தான் இந்தக் கொடூர விபத்துகள் அதிகமும் பதிவாகின்றன. இப்படிப் பட்டம் விடுவது தவறு, தடை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தாராளமாகக் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம். செக்‌ஷன் 304 (2) பிரிவின் கீழ் மறைமுகமாகக் கொலைக்கு காரணமாக இருந்தார்கள் என்று சொல்லி அவர்களை உள்ளே தள்ள முடியும் என்கிறார்கள் காவல்துறையினர்.

பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளே!

மாஞ்சா காற்றாடி நூலுக்குப் பெரிதும் பலியாகக் கூடியவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளே! வாகன ஓட்டிகள் என்பதை விட வாகனத்தின் முன் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் குழந்தைகளே என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த விபத்துக்களின் இன்னுமொரு கொடூரம் என்னவென்றால், நூல் கயிற்றைச் சுற்றி விடும் போது நம்மால் அதிலிருந்து சட்டென விடுபட முடியாது. ஏனெனில், மறுபுறமிருந்து அந்தக் கயிற்றை இயக்குபவர்களுக்கு நடுவில் ஒரு உயிர் சிக்கியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. இருப்பினும் சரசரவென கழுத்தின் முன் பகுதியை அறுத்துக் கொண்டு ஊடுருவும் மாஞ்சா நூல் எனும் மாயாவி அரக்கனின் கொடும் பற்களில் அரைபட்டு மீண்டவர்களுக்கே முழுவதுமாகத் தெரியும் அதன் வலி எத்தகையதென்று?!

மாஞ்சா நூல் விபத்தில் சிக்கித் தப்பிய ரேடியோ ஜாக்கி கண்மணி!

சென்னையைச் சேர்ந்த ரேடியோ ஜாக்கியான கண்மணி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படியோர் விபத்துக்கு ஆளாகி உயிர் தப்பியவர். கழுத்தைச் சுற்றி 26 தையல்கள் இடப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னரே அவர் உயிர் தப்பி இருக்கிறார். தனக்கு நிகழ்ந்தது இன்னது தான் என்பதை அறியும் முன்னரே அவரது கழுத்து முழுவதும் சொதசொதவென ரத்தம் ஊற்றெடுக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சற்றுத் தாமதமானதில் ஏராள ரத்த சேதம். ஆயினும் தன் ஒரே மகளுக்காக எப்படியோ மன உரத்துடன் தப்பிப் பிழைத்தார் கண்மணி.

இப்படி மாஞ்சா நூலில் சிக்கி உயிர் தப்பியவர்கள் சிலர் இருப்பினும், நிச்சயம் இத்தகைய விபரீதங்கள் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

மாஞ்சா நூல் எப்படித் தயாரிக்கப்படுகிறது?

பாட்டில்களை உடைத்துப் பெறப்படும் கண்ணாடித்தூள், கந்தகம், வஜ்ரம், கலர் பொடி, துத்தநாகம் இவை அனைத்தையும் கலந்து மெல்லிய சாந்து போல தயாரிக்கப்படும் மாஞ்சா... வெள்ளை நிற நூலில் சுற்றித் தடவப்பட்டு நன்கு காய வைக்கப்பட்டு மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது. இவற்றைத் தயாரிக்கவென தனியாக இயந்திரங்கள், அடுப்பு, ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப் படுகின்றன.

மாஞ்சா நூல் காத்தாடி குறித்துப் புகார் அளிக்க..

சென்னையைப் பொறுத்தவரை மாஞ்சா நூல் விற்றாலோ அல்லது மாஞ்சா நூலில் பட்டம் செய்து விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாஞ்சா நூல் தொடர்பான புகார்களுக்கு 044- 25615086 என்ற சிறப்பு எண் வசதியும் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com