அயோத்தி விவகாரம்: வெறுமனே, கடந்து வந்த பாதை என்று எப்படி சொல்லிவிட முடியும்?

உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அயோத்தி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது. 
Ayodhya Land Dispute Case
Ayodhya Land Dispute Case

1528ம் ஆண்டு தொடங்கிய அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தியது. 

40 நாள்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டலாம். 

வஃக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கப்பட வேண்டும், இந்த உத்தரவு 3 மாதத்துக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்துக்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், முதல் முறையாக 1950ம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்பவர், சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார். 

அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக, அன்று அவர் மனு மூலம் போட்ட பிள்ளையார் சுழி இன்று முடிவுக்கு வந்துள்ளது. அதன்பிறகு அந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.

தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் 1970, 1992, 2003ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வில், அவ்விடத்தில் மிகப்பெரிய இந்து கோயில் இருந்துள்ளது என்பதை சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளது.

2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு

அதே சமயம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள் சரி சமமாக, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை ஒன்றிணைத்து, அயோத்தி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 1528-ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்றுள்ள நிகழ்வுகள் தேதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

1528: முகலாய பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் சரியாக ராமர் பிறந்த இடமாகக் கருதப்பட்டு வருவதும், அங்கு ஏற்கனவே மிகப்பெரிய இந்து கோயில் இருந்துள்ளதும் தான் இன்று வரை சர்ச்சையாக உள்ளது.

1853: பாபர் ஆட்சிக் காலத்தில் அங்கிருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் அங்கு மிகப்பெரிய வன்முறை வெடித்ததாகவும் பதிவுகள் உள்ளன. 

1885: மஹந்த் ரகுபீர் தாஸ், ராமஜென்மபூமி - பாபர் மசூதி இடத்தைச் சுற்றி சுவர் எழுப்ப ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. 

1949:  டிசம்பர் 22-23 இரவு சர்ச்சைகுரிய இடத்துக்கு வெளியே உள்ள மைய மண்டபத்தில் ராமர் - சீதா - லஷ்மணன் சிலைகள் வைக்கப்பட்டன. 

சர்ச்சை வெடித்தது. அந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக அரசு அறிவித்தது. கதவுகள் மூடி பூட்டுப்போடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராடினார்கள். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

1950: கோபால் சிம்லா விஷாரத் என்பவர் ராமர் சிலைகளை வழிபட ஃபைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1950: பரமஹன்சா ராமச்சந்திர தாஸ் சிலைகளை வைத்து, தொடர்ந்து வழிபாட்டை மேற்கொள்ள வழக்கு தொடுத்தார். 

பூஜை செய்ய அனுமதி கிடைத்தது. ஆனால் மையப் பகுதியின் கதவுகள் பூட்டியே இருந்தது.

1959: நிர்மோஹி அக்ஹாரா அமைப்பு சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுத்தது. 

1981: உத்தரப் பிரதேசத்தின் மத்திய சன்னி வக்பு வாரியம் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது. 

பிப்ரவரி 1, 1986: ஹிந்து மதத்தை வழிபடுபவர்களுக்கு சர்ச்சைக்குரிய இடத்தை திறக்க உள்ளூர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. 

ஆகஸ்ட் 14, 1989: சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது நிலவும் சூழலே தொடரலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

1991: உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.

1992

டிசம்பர் 6, 1992: பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கர் சேவகர்கள் அயோத்தி நிலத்தில் இருந்த மசூதியை இடித்தனர். ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி தலைவர்களின் நேரடி கண்காணிப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 2,000 பேர் பலியானார்கள்.

ஏப்ரல் 3, 1993:  சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசால் அயோத்தி சட்டம் கொண்டுவரப்பட்டது.

அக்டோபர் 24, 1994: இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில், 'மசூதி, இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல' என்று உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. 

ஏப்ரல், 2002: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. 

ஜனவரி 2003: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்பதை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியது.

2003

மார்ச் 13, 2003: அஸ்லாம் என்கிற பூரே வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்வித மதச் சடங்கு செயல்களையும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மார்ச் 14: சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிப்பதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவடையும் வரை இந்த இடைக்கால உத்தரவுகள் அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2010

செப்டம்பர் 30, 2010: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அக்டோபர் 2010: மூன்று தரப்புக்கும் நீதிமன்றம் தலா 3,500 சதுர அடி நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தில் நாங்கள் கட்ட தீர்மானித்திருக்கும் பெரிய கோயிலின் கருவறையைக் கட்டக் கூட போதுமான இடமல்ல என்று கூறிய விஎச்பி, ஒட்டுமொத்தமாக 67 ஏக்கர் நிலத்தையும் பெற வேண்டும் என்று கோரியது.

சர்ச்சைக்குரிய இடத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அகில பாரத ஹிந்து மகாசபை முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தை நாடியது.

2011

மே 9, 2011: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. 

ஆகஸ்ட் 2011: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேலும் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

2016

பிப்ரவரி, 2016: சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட சுப்ரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2017

மார்ச் 2017: அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர், இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண பரிந்துரைத்தார்.

ஆகஸ்ட் 7, 2017: அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

ஆகஸ்ட் 8: சர்ச்சைக்குரிய இடத்துக்கு சற்று தொலைவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி கட்ட முடியும் என உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. 

செப்டம்பர் 11: அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தை மேற்பார்வையிடுவதற்கு 10 நாட்களுக்குள் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் 2 பேரை கண்காணிப்பாளர்களாக நியமிக்க அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  

நவம்பர் 20: அயோத்தியில் ராமர் கோயிலையும், லக்னௌவில் மசூதியையும் கட்டலாம் என உத்தரப் பிரதேச வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

டிசம்பர் 1: அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 32 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

2018

பிப்ரவரி 8, 2018: அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. 

மார்ச் 14, 2018: இந்த வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதில் சுப்பிரமணிய சுவாமியின் மனுவும் உள்ளடங்கும்.

மார்ச் 23, 2018: 1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், மசூதி என்பது முஸ்லிம்கள் நமாஸ் செய்ய மிக முக்கியமான கட்டமைப்பு அல்ல; எங்கு வேண்டுமானாலும், திறந்த வெளியிலும் நமாஸ் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி முஸ்லிம் அமைப்பு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்.

ஏப்ரல் 6: அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரி முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 

ஜூலை 6: வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அமைப்புகள் இதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்று உத்தரப் பிரதேசம் உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது.

ஜூலை 20: உச்சநீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

செப்டம்பர் 27: இந்த வழக்கில் 'மசூதி இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல' என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அக்டோபர் 29: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் உரிய அமர்வு முன்பு அயோத்தி வழக்கு விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. குறிப்பிட்ட அந்த அமர்வு வழக்கு விசாரணைகளை முடிவு செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

நவம்பர் 12: இந்த வழக்கின் மனுக்கள் மீதான விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற அகில் பாரத ஹிந்து மகாசபா விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 

நவம்பர் 22: இந்த வழக்கில் தீர்வு காணும் வரை அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சமூகத்தில் இயல்பு நிலையை பாதிக்கும் வகையிலான தங்களது கருத்துகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற தொடரப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டிசம்பர் 24: இந்த வழக்கின் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 4-ஆம் தேதி எடுத்துக்கொள்ளவுள்ளது என அறிவிக்கப்பட்டது. 

2019

ஜனவரி 4, 2019: இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட புதிய நீதிபளைக் கொண்ட அமர்வு, விசாரணை நடத்தப்படும் தேதி தொடர்பாக ஜனவரி 10-ஆம் தேதி முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. 

ஜனவரி 8: வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, என்வி ரமணா, யுயு லலித் மற்றும் டிஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.

ஜனவரி 10: இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி யுயு லலித் தன்னை விலக்கிக் கொண்டதையடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 25: இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய புதிய அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த புதிய அமர்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, டிஒய் சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்ஏ நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜனவரி 27: நீதிபதி எஸ்ஏ பாப்தே இல்லாத காரணத்தினால் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறவிருந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜனவரி 29: சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே திருப்பி வழங்க அனுமதி கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

பிப்ரவரி 20: பிப்ரவரி 26-ஆம் தேதி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

பிப்ரவரி 26: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியாக மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து வரும் மார்ச் 5-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

மார்ச் 6: அயோத்தி விவகாரத்தில் இருதரப்பு ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதுதொடர்பான தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மார்ச் 9: இந்த வழக்கில் தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்எம் இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மே 10: சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 1: அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக மத்தியஸ்தர் குழுவால் எவ்வித இறுதி முடிவையும் ஏற்படுத்த முடியவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் இவ்வழக்கில் தினமும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 6: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தினசரி அடிப்படையிலான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

ஆகஸ்ட் 7: நிர்மோகி அகாரா அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில், அது ராமர் பிறந்த இடம் என்பதற்கான சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் வாய்மொழி ஆதாரங்கள் மட்டும் தான் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பத்திரங்கள் போன்ற சான்றுகள் அல்லது வருவாய்துறை ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த நிர்மோகி அகாரா தரப்பு, 1982-ம் ஆண்டு ஆதாரங்கள் திருடுபோய் விட்டதாக தெரிவித்தது. 

செப்டம்பர் 18: அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அக்டோபர் 4: இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் 17-ஆம் தேதியோடு நிறைவுபெறுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அக்டோபர் 14: டிசம்பர் 10-ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் வருவதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 15: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,"இன்று வழக்கு விசாரணையின் 39-வது நாள். நாளை 40-வது நாள், அதேசமயம் அதுதான் வழக்கு விசாரணையின் கடைசி நாள்" என்று தெரிவித்தார்.

அக்டோபர் 16 : இந்த வழக்கில் இருதரப்பின் இறுதிக்கட்ட வாதங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com