Enable Javscript for better performance
Bonded labour and human trafficking | உடல் உறுப்புக்களுக்காகவும் இப்படியொரு துணிகர செயல்!- Dinamani

சுடச்சுட

  

  பாலியல் தொழிலுக்காகவும் உடல் உறுப்புக்களுக்காகவும் இப்படியொரு துணிகர செயல்! 

  Published on : 07th November 2019 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  bonded labour

  bonded labour

   

  இந்தியாவில் பாலியல் தொழில், உடல் உழைப்பு மற்றும் உடல் உறுப்புகளுக்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச் செல்லும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நாம் எவ்வளவுதான் நம் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று கூறிக் கொண்டாலும் மனித கடத்தல் எனும் அவல நிலை நீடிக்கிறது. 

  தமிழகத்தில் மனித கடத்தல் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு வடிவம்தான் கொத்தடிமைத் தொழில்முறை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாமல் வட இந்தியா, நேபால், பங்களாதேஷ் போன்ற பகுதியிலிருந்து வரும் தொழிலாளர்களும் அடங்குவர். குறிப்பாகத் தமிழகத்தில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களிடம் உடல் உழைப்பை சுரண்டுவது அதிகரித்துக் காணப்படுகிறது. பெரும்பாலும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களே இதற்கு இலக்காகின்றனர். குறிப்பிட்ட நேரப் பணத் தேவைகளுக்காக பின் விளைவுகளை அறியாமல் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களின் சுதந்திரமான வாழ்க்கையை இழக்கின்றனர்.

  அதிக சம்பளமும் இருப்பிடமும் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி இடைத்தரகர்கள் வெளிமாநில தொழிலாளர்களை இங்கு அழைத்து வருகின்றனர். இங்கு வந்த பின்னர் அதிகப்படியான உடல் உழைப்பை வாங்கிக் கொண்டு கூலியைச் சரிவர வழங்காமல் பல முதலாளிகள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். மேலும் முதலாளியின் வசைச் சொற்களுக்கு ஆளாகும் அவர்கள் ஒருவித அச்சத்திலேயே வைத்திருக்க உடல்ரீதியிலான வன்முறையும் அவர்கள் மீது ஏவப்படுகிறது. தப்பி செல்ல முயலும் தொழிலாளர்களைத் துரத்திப் பிடித்து மற்ற தொழிலாளர்களின் முன் கொடுமைப்படுத்தி அவர்களுக்குள் ஒருவித பயத்தை முதலாளிகள் ஏற்படுத்துகின்றனர். கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவத்தைக் கேட்கும்போது அவர்கள் எந்த மாதிரியான கொடுமைகளுக்கு உள்ளானார்கள் எனவும் அவர்களிடம் ஆறாத வடுக்களாக சில சம்பவங்களும் இருப்பதை அறிய முடிகிறது.

  அந்தவகையில் கொத்தடிமைத்தனத்தின் கொடூர முகத்தை வினோத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. வினோத்தும் அவரது மனைவியும் கிராமப்புறத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொண்டனர். ஒரு வயதே ஆன அவர்களின் பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முதலாளியிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் முதலாளியோ 'மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை என்றால் உன் குழந்தை ஒன்றும் இறந்து விடாது’ என்று கூறி அனுமதி மறுத்துள்ளார். எவ்வித மருத்துவ உதவியும் இல்லாமல் அந்தக் குழந்தை மறுநாள் இறந்து விட்டது. இந்த சோகத்திலும் குழந்தையை தன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்ய வினோத் முதலாளியிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சியுள்ளார்.

  அதனையும் மறுத்த முதலாளி 'குழந்தைதான் இறந்து விட்டதே… ஒரு வாரம் கழித்து அடக்கம் செய்தாலும் குழந்தை திரும்ப வரப்போவது இல்லை' என்று ஈவு இரக்கமின்றி பேசியுள்ளார். மேலும் அத்தம்பதி அழுவதற்குக் கூட நேரம் தராமல் உடனடியாக வேலைக்குத் திரும்பும்படி உத்தரவிட்டுள்ளார். இறந்து போன குழந்தையை அரிசி ஆலையின் ஓரமாக உள்ள தங்களது குடிசையில் வைத்துவிட்டு முதலாளி இல்லாத சமயம் பார்த்து குழந்தையிடம் சென்று இருவரும் கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளனர். அந்த வார இறுதியில் வினோத்திடம் வந்த முதலாளி 'நீங்கள் குழந்தையை அடக்கம் செய்ய உங்கள் ஊருக்குச் சென்றால் குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்பி வர மாட்டீர்கள். அதனால் சடலத்தை இங்கேயே புதைத்து விடுங்கள்’ என்று கூறியுள்ளார். வினோத் வெறும் கைகளாலேயே தனது மகளின் சவக்குழியைத் தோன்றியுள்ளார்.  முதலாளி ‘குழந்தையை அப்படியே தூக்கி எறிந்து விடு’என்று என்னிடம் கூறினார். நான்தான் அழுது புரண்டு குழி தோண்டி புதைத்தேன்’ என்றார் வினோத்.

  வினோத்தின் வாழ்க்கையைப் போலவே தான் பல கொத்தடிமைகளின் நிலையும். கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொள்பவர்கள் உடல் மற்றும் மனரீதியாக முதலாளிகளால் துன்புறுத்தப்பட்டு வளர்ச்சியடைந்த சமூகத்துடன் இணையாமல் இருக்கின்றனர். இதனை நாம் ‘நவீன அடிமை முறை’ என்று கூறினால் மிகையாகாது.

  மனிதக் கடத்தலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. முக்கியமாக 1976-ம் ஆண்டில் கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் மற்றும் இந்தியத் தண்டனை சட்டம் (IPC) பிரிவு 370-ஐ உருவாக்கி உள்ளது. ஆனாலும் இங்குச் சட்ட நடைமுறைகளுக்கும் பாதிக்கப்படுபவர்களுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகிறது. இதற்குச் சட்ட நடைமுறைகளின் மீது மக்களுக்கு இருக்கும் பொதுவான அவமதிப்பும் முதலாளிகளின் மீது தொழிலாளர்களுக்கு உள்ள அச்சமுமே காரணமாகும். சில தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கொத்தடிமைகளே இல்லை என மறுக்கும் அளவிற்கு அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இக்குற்றத்தைத் தடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுப்பது மட்டுமில்லாமல் சமூகத்தில் இக்குற்றம் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக உள்ள ஏழ்மையையும் அறியாமையையும் துடைத்தெறிய வேண்டும். 

  சமூகத்தின் அடிமட்ட அளவில் நுழைந்து மனித கடத்தலில் ஈடுபடும் இடைத்தரகர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் அரசும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் (TNSLSA) ஏற்படுத்தியுள்ள ONE STOP CRISIS என்ற குழு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவது மட்டுமில்லாமல் மக்களுக்கும் சட்டத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் என்று முழு நம்பிக்கை உள்ளது. அரசும் தனிநபர்களும் இணைந்து இனி எந்த ஒரு மனிதனுக்கும் வினோத் அனுபவித்த கொடுமைகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  'நாம் அனைவரும் சுதந்திரமாக இல்லாதவரை, ஒவ்வொருவரும் அடிமைகளே’  - எம்மா லாசரஸ்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai