‘1990 - 1996’ இந்தியத் தேர்தல் களத்தில் டி என் சேஷனின் அதிரடி ஆட்ட காலம்!

இந்தியாவில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான ஐ ஏ எஸ் அதிகாரிகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேரை நாம் சேஷன் அளவுக்கு நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோம்?!
T N SESHAN MAN BEHIND THE  INDIAN ELECTION REFORMS
T N SESHAN MAN BEHIND THE INDIAN ELECTION REFORMS

திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி என் சேஷன்.. இந்திய தேர்தல் சீர்திருத்தத்தின் பின்னிருந்த மகத்தான மனிதர்!

1932 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி பாலக்காட்டில் பிறந்தவரான டி என் சேஷனுக்கு வயது 86. சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று ஞாயிறு அன்று உடல்நலக்குறைவால் மறைந்தார்.

சேஷனைப் பொருத்தவரை;

தனக்குக் கீழ் பணிபுரியும் தேர்தல் அதிகாரிகள்.. அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்த வேட்பாளர்களின் பிரம்மாண்டம் கண்டு பயந்தால் அவர்களுக்குச் சொல்ல சேஷனிடம் ஒரே ஒரு ஆறுதலான வார்த்தை எப்போதும் உண்டு. அது;

எதற்கும் பயப்படாதே. ஒன்றும் நடக்காது. உன் முகத்தில் யாரேனும் குண்டு வீசலாம், உன் வயிற்றில் யாருடைய துப்பாக்கி குண்டாவது துளைக்கலாம்’ அவ்வளவு தான்.. எதற்கும் பயப்படாதே, ஒன்றும் நடக்காது!’ என்பாராம். இதை டி என் சேஷனின் தலைமைக்கு கீழ் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆளுநர்களில் ஒருவரான எஸ் ஒய் குரேஷி தெரிவித்துள்ளார்.

சேஷன், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக 1990 - 1996 வரை பதவி வகித்தார். 

1955 ஆம் ஆண்டு பேட்ச் ஐ ஏ எஸ் அதிகாரிகளில் ஒருவரான சேஷன் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். அவரது பழுத்த அனுபவத்தின் காரணமாக 1990, டிசம்பர் 12 அன்று இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்தார் அன்றைய பாரதப் பிரதமராக இருந்த சந்திர சேகர். அந்தக் காலத்தை சேஷனின் அதிரடி ஆட்டக் காலம் என்று சொல்லலாம்.

அது வரையிலும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகச் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிதாப நிலையை மாற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார் சேஷன்.

வாக்காளர்களை விலைக்கு வாங்குவது, மிரட்டுவது உள்ளிட்ட முறைகேடான செயல்களைக் கட்டோடு களைய சேஷன் மெனக்கெட்டார். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முறைகேடான செயல்பாடுகளில் இறங்கத் துணியும் வேட்பாளர்களையும் அரசியல் கட்சிகளையும் நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தினார் டி என் சேஷன்.

  • தேர்தலின் போது மது விநியோகிக்கப்படுவது..
  • அரசு இயந்திரத்தைப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது..
  • சாதி, மத ரீதியிலான பிரச்சாரங்களை முன்னெடுப்பது..
  • மத அடையாளங்களாகக் கருதப்படும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பது, 
  • தேர்தல் காலத்தில் அனுமதியின்றி அதிக ஓசையுடன் கூடிய ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவது

உள்ளிட்ட விஷயங்களுக்கு சேஷன் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதுமட்டுமல்ல, கள்ள ஓட்டு முறையைத் தடுக்க வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப் பட்டதும் சேஷன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது தான்.

நியாயமான முறையில் தேர்தல் நடைபெற தேர்தல் நடத்தை விதிமுறைகளை வகுத்தார் சேஷன். அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் காலங்களில் தெரிந்தே தெரியாதது போல நடத்தப்பட்ட பல்வேறு தேர்தல் முறை ஊழல்களைக் கண்டிக்கும் தைரியத்தை தனக்குள்ளே உரம் போட்டு வளர்த்துக் கொண்டார் சேஷன்.

அந்தத் தைரியத்துடன் நின்ற சேஷனின் தலைமையில் 1993 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

வட இந்திய மாநிலங்களில் பணம் படைத்த வேட்பாளர்களால் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றப்படுதல் மிக அனாயாசமாக நடத்தப்பட்டு வந்த அந்தக் காலகட்டத்தில் சேஷன் தனது கடுமையான தேர்தல் நடத்தை விதிமுறைகளின் மூலம் 1993 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 873 ஆக இருந்த வாக்குச்சாவடி கைப்பற்றல் எண்ணிக்கைய ஒரே ஆண்டில் 273 ஆகக் குறைத்தார். அது மட்டுமல்ல, தேர்தல் காலத்தில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கையையும் இரண்டிலக்கங்களில் இருந்து ஒரு இலக்கத்திற்குக் கொண்டு வந்தார். வாக்குச்சாவடி முறைகேடுகள் காரணமாக தேர்தல் நிறுத்தப்படுதல் எனும் அநியாய நடைமுறையையும் தனது பணிக்காலத்தில் மிக அரிதாக்கிக் குறைத்தவர் சேஷன் தான்.

இப்படித் தொடர்ந்து தனது நேர்மையான அணுகுமுறையாலும், செயல்பாட்டாலும் முறையற்ற அரசியல் வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் டி என் சேஷன்.

அதற்கு ஒரு சோறு ஒரு பதமாக இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

1994 ஆம் ஆண்டு தேர்தலில், அன்றைய மத்திய அமைச்சர்களான சீதாராம் கேசரி மற்றும் கல்ப்நாத் ராய் இருவர் மீதும், சட்ட விரோதமாக வாக்காளர்களைக் கவர முயல்கிறார்கள் எனவும், அவர்கள் இருவரையும் பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி பிரதமரிடம் புகார் அளித்தார் டி என் சேஷன். சேஷனின் இந்த அதிரடி கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தைக் கிளப்பி  ‘ அத்துமீறி அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார் சேஷன்’ என கடும் புகாராக வெடிக்க அதை எவ்விதச் சலனமும் இன்றி கடந்து போனவர் சேஷன்.

சேஷனை மிக மோசமான எதிரியாகக் கருதிய இந்திய அரசியல்வாதிகள் லிஸ்டில் நம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கும், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத யாதவுக்கும் தனித்த இடமுண்டு.

1995 ஆம் ஆண்டில் சென்னை வந்த டி என் சேஷனுக்கு அன்றைய ஆளும்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சென்னை விமானநிலையத்தில் இருந்து அவர் வெளியேற முடியாத அளவுக்கு அதிமுகவினர் விமானநிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர். கிட்டத்தட்ட 6 மணி நேர போராட்டத்தின் பின் கடைசியில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்ட பின்னரே அன்றைய டி ஜி பி ஸ்ரீபால் தலைமையில் அவரால் விமான நிலைய முற்றுகையிலிருந்து தப்ப முடிந்தது. அது மட்டுமல்ல, இது போன்ற பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க அன்றெல்லாம் தினமும் உளப்பயிற்சி எடுத்துக் கொண்டார் சேஷான் என்று தான் சொல்ல வேண்டும்.

இல்லையேல், பலம் படைத்த அரசியல்வாதிகளின் மிரட்டலில் என்றோ காணாமல் போயிருப்பார் சேஷன். ‘பனங்காட்டு நரி உன் சலசலப்புக்கு அஞ்சாது’ என இந்திய அரசியல்வாதிகளின் தேர்தல் முறைகேடுகளைக் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடித் தேடி சரி செய்யப் போராடினார் சேஷன். எவ்வித எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் நேர்மையாகத் தனது கடமையைச் செய்து வந்த ஒரே காரணத்துக்காகத்தான் நாம் இன்றளவும் அவரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய தேர்தல் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து உலகையே திரும்பிப்பார்க்க வைத்தவர் எனும் நோக்கில் தான் 1996 ஆம் ஆண்டில் சேஷனுக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.

தனது அச்சமற்ற தன்மை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார் சேஷன். ஆயினும் அந்தத் தேர்தலில் அவரால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை. அந்த ஆண்டு குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் கே ஆர் நாராயணன் வெற்றி வாகை சூடி இந்திய குடியரசுத் தலைவர் ஆனார். எல்லாம் ஒரு பரீட்சார்த்த முயற்சியே! இதெல்லாம் ஒரு தோல்வியா?! 2018 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச போலி வாக்காளர்கள் தொடர்பான வழக்கு ஒன்று 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நிகழ்ந்த வாதத்தின் போது உச்சநீதிமன்றம் தனது கூற்றாக முன் வைத்தது...

‘டி என் சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் தேர்தல் ஆணையம் நம்பத் தகுந்ததாக இருந்தது’

- என்றொரு கூற்றைப் பதிவு செய்தது உச்சநீதிமன்றம்.

இதல்லவோ சேஷனின் நிஜமான வெற்றி!

இந்தியாவில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான ஐ ஏ எஸ் அதிகாரிகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேரை நாம் சேஷன் அளவுக்கு நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோம்?! என்று யோசித்துப் பாருங்கள்.

சொற்பம்.. வெகு சொற்பமானவர்களே மக்களால் நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்.

காலம் தோறும் நினைவு கூரப்படுகிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர் சேஷன்.

சேஷனுக்கு, ஜெயலக்‌ஷ்மி என்ற மனைவி இருந்தார். அவர் 2018 ஆம் ஆண்டில் வயோதிகத்தால் ஆன உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 

மறைந்த சேஷன் தம்பதியினருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. ஆயினும் நேர்மையுடன் பணியாற்ற நினைக்கும் அரசு அதிகாரிகள் அத்தனை பேருக்கும்  மிகச்சிறந்த முன்னுதாரணத் தந்தையாக இருக்க தகுதி படைத்தவர் தான் சேஷன்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

சேஷனைப் போல மீண்டுமொரு தலமைத் தேர்தல் அதிகாரி கிடைக்க இந்தியா தவமிருக்கட்டும்!

Image Courtesy: Financial Express.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com