சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு!

சபரிமலையில் தொடர்ந்து இரண்டு மாத காலம் நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜையானது வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
Sabarimala_women
Sabarimala_women


சபரிமலையில் தொடர்ந்து இரண்டு மாத காலம் நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜையானது வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

இதற்கிடையே, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று பரிந்துரை செய்தது. அதே சமயம், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற நடைமுறை அப்படியே இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று பரிந்துரை அளவில் நின்று, முடிவு எட்டப்படாமல் போனது.

இந்தநிலையில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் எப்படி தரிசனத்தை மேற்கொள்வார்கள், இவர்களது பாதுகாப்பை மாநில காவல்துறை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

முன்னதாக, கடந்த ஆண்டும் இதேப்போல ஆன்லைன் மூலம் 740 பெண்கள், சுவாமி ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்தபோது, காவல்துறையினர், அவர்களது விவரங்களை திரட்டிப் பதிவு செய்து, அவர்களது முகவரியைத் தேடி வீடுகளுக்கேச் சென்றனர். சபரிமலையில் தற்போது நிலவும் சூழல் குறித்து அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லி, அவர்களது சபரிமலை பயணத்தை மேற்கொள்ளாமல் மனமாற்றத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்கும் 36 பெண்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது என்ற நிலைப்பாட்டில்தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். காவல்துறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் முதல் முறையாக சபரிமலை ஐயப்பனைச் சென்று தரிசனம் செய்தனர். 

ஆனால், அவர்கள் திரும்பி வந்த பிறகு பல்வேறு தரப்பில் இருந்தும் அவர்களுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. இருவரும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு, பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல வேண்டும், ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பும், கேரள அரசும், காவல்துறையும் பக்க பலமாக இருக்கிறது. ஆனால், ஐயப்பன் கோயிலுக்கு மாலையணிந்து வரும் பக்தர்களின் கடும் எதிர்ப்பு எனும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும். அதோடு, அவர்கள் திரும்பி வந்து சமூகத்தால் ஏற்படும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையே இன்னமும் நிலவுகிறது.

பல ஆண்டு கால வழக்கமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் பாலின சமநிலையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் ஆண் மாலை அணிந்தால், அவர் மட்டும் விரதம் கடைப்பிடிப்பதில்லை. அவருடன் அவர் வீட்டில் வசிக்கும் அனைவருமே, பெண்களும்தான் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இருமுடிக் கட்டி கோயிலுக்குச் செல்லாவிட்டாலும், மாலை அணிந்தவருக்கு இருக்கும் அனைத்து அனுஷ்டானங்களுக்கும், பெண்கள்தான் உதவி செய்கிறார்கள். எனவே, தனது விரதம் எந்த வகையிலும் பங்கம் ஆகாமல், இருமுடி அணிந்து சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் இதனை முதலில் உணர வேண்டும். 

அதே சமயம், சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்லும் பெண்களைத் தவிர்த்து, வீம்புக்காக, நானும் செல்வேன் என்று சபரிமலை செல்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேண்டுகோளாக வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com