'தவறு நடந்தா தைரியமா தட்டிக் கேளுங்க..' எடுத்துக்காட்டான கேரளத்து சிங்கப் பெண்!

கேரளாவில் அரசுப் பேருந்து ஒன்று சாலை விதிகளை மீறி தவறான பாதையில் வருவதைப் பார்த்த இளம்பெண் ஒருவர், சட்டென்றும் யோசிக்காமல் பேருந்தை இடைமறித்து நின்ற அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. 
'தவறு நடந்தா தைரியமா தட்டிக் கேளுங்க..' எடுத்துக்காட்டான கேரளத்து சிங்கப் பெண்!

கேரளாவில் அரசுப் பேருந்து ஒன்று சாலை விதிகளை மீறி தவறான பாதையில் வருவதைப் பார்த்த இளம்பெண் ஒருவர், சட்டென்றும் யோசிக்காமல் பேருந்தை இடைமறித்து நின்ற அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. 

கேரள  மாநிலம் காசர்கோடிலிருந்து, கோட்டயம் நோக்கி, கேரள அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இருவழிப்பாதையான அந்த சாலையில், தொடக்கத்தில் இடது பக்கத்தில் பயணித்து வந்த பேருந்து, திடீரென சாலையின் வலப்பக்கம் சென்றது. எதிரே பைக்கில் வந்த இளம்பெண் ஒருவர், இதைப்பார்த்து விட்டு சட்டென்று தனது பைக்குடன் பேருந்தின் முன்பாக நின்றார். சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார் அந்த இளம்பெண். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் தன்னுடைய தவறை புரிந்துகொண்ட ஓட்டுநர்  பேருந்தை இடப்பக்கம் திருப்பினார். அவ்வழியாகச் சென்ற மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இந்தச் சம்பவத்தை தனது மொபைல் போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும், அந்தப் பெண்ணை பாராட்டி வருகின்றனர். இவர் கேரளாவைச் சேர்ந்த சூர்யா மானிஷ் எனது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து சூர்யா கூறும்போது, 'நான் டிரைவருக்கு சவால் விடும் நோக்கில் அந்தப் பேருந்தின் முன்னால் நிற்கவில்லை. மாறாக, அது தவறான வழியில் வந்தது. எனக்கு முன்பாக ஒரு பள்ளிப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஒன்று தவறாக சாலையின் வலப்பக்கம் வருவதையறிந்தேன். அதனைச் சுட்டிக்காட்ட என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்தினை இடைமறித்தேன். சற்று நேரத்தில் தவறை உணர்ந்து அவர் இடப்பக்கம் திரும்பி விட்டார்' என்று கூறியுள்ளார். 

இதுபோன்று சாலையில், தவறான வழியில் சாலையைக் கடந்த கார் ஒன்றை அந்த வழியாக பைக்கில் வந்த நபர் வழிமறித்துத் தட்டிக் கேட்டார். சில வாரங்களுக்கு முன்னதாக இந்த விடியோவும் வைரலானது. 

நாடு முழுவதுமே சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது விதிமுறை மீறல். சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததாலேயே விபத்துகள் ஏற்படுகின்றன என்று போக்குவரத்து காவல்துறையும் வாகன ஓட்டிகளிடம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

சாலைகளில் நாம் செல்லும்போது, அதிக வேகத்தில் செல்வது, தவறான வழியில் செல்வது, சிகப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும் போது சாலையைக் கடப்பது என  பலர் சாலை விதிகளை மீறிச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இவற்றில் பெரும்பாலானோர் 'நமக்கென்ன' என்று கடந்து விடுகின்றனர். ஆனால், சிலரின் அலட்சியத்தினால் நம்மைப் போன்ற யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். 

அவ்வாறு சாலை விதிமுறைகளை மீறும் நிகழ்வுகள் நடைபெற்றால் அதனை நாம் தட்டிக் கேட்க வேண்டும். விதிமுறைகளை மீறுவது அரசியல்வாதிகள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்வுகளைத் தட்டிக்கேட்க முன்வர வேண்டும். 

தவறு நடக்கும்போது ஒருவர் கேள்வி எழுப்பினாலே, மற்றவர்கள் கேள்வி எழுப்பிவிட்டாலும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வருவர்.  தொழில்நுட்ப வளர்ச்சியாக தற்போது சிக்னல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய தேவையில்லை. தவறு நடக்கும் இடத்தில் தைரியமாக கேள்வி எழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும். பெண்கள் இவ்வாறான விஷயங்களில் ஈடுபடும்போது சற்று முன்னெச்சரிக்கையோடு மட்டும் செயல்படுங்கள். மேலும், உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை உங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சியுங்கள். 

இது எதுவுமே முடியாத பட்சத்தில் உங்களது கையில் உள்ள மொபைல் போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள். தற்போது பெரும்பாலான சம்பவங்கள், விதிமுறை மீறல்கள் சமூக வலைத்தளங்களின் மூலமாகவே மக்களுக்குப் போய்ச் சேருகின்றன. 

இந்த சமூகத்தில் எப்போது மாற்றம் நிகழும்? என்று கேள்வி எழுப்பும் நாம், தவறு நடக்கும் இடத்தில் ஒரு கேள்வி எழுப்பினாலே அதுவே அந்த மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும். 

மாற்றத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com