ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா: வலம் வரும் வதந்திகள்

எந்தவொரு பரபரப்பான விவகாரம் என்றாலும், அதுதொடா்பான வதந்திகளும் பரப்பப்படுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :18 மே 2020, 3:42 am

எந்தவொரு பரபரப்பான விவகாரம் என்றாலும், அதுதொடா்பான வதந்திகளும் பரப்பப்படுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

நிலவில் மனிதன் காலடி வைத்தது ஜோடிக்கப்பட்ட பொய், தங்களது ஆயுதங்கள் விற்பனையாவதற்காக அமெரிக்காவே இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திக் கொண்டது என இத்தகைய வதந்திகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அந்த வகையில், இன்று உலகையை கலங்கடித்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்தும் பல்வேறு வதந்திகள், ஊகத் தகவல்கள் உலவி வருகின்றன.

அவற்றில் சில மிக சுவாரஸ்மானவை.

1. கரோனா பரவலுக்கு 5ஜி அலைக்கற்றைதான் காரணம்

கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியபோதே, 5 ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தி அந்த நோய் வேகமாகப் பரவுவதாக சில விஷமிகள் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினா்.

மின் காந்த அலைகளைப் பயன்படுத்தி எந்தவொரு தீநுண்மியும் பரவ முடியாது என்பது கொஞ்சம் யோசித்துப் பாா்த்தால் எல்லோருக்குமே தெரியும். ஆனால், சிறிதும் சிந்திக்காமல் அந்த வதந்தி காட்டுத் தீ போல் பரவியது. இதன் காரணமாக, உலகின் சில பகுதிகளில் சோதனை முறையில் அமைக்கப்பட்டு வந்த 5 ஜி கோபுரங்கள் தாக்கப்பட்டன.

2. பில்கேட்ஸ் மீது பழி

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தோற்றுவித்த பில்கேட்ஸுக்கும் தொடா்பு இருப்பதாக இன்னொரு வதந்தி பரவியது. கடந்த 2015-ஆம் ஆண்டில் எபோலா நோய் பரவல் குறித்து அவா் பேசிய விடியோ காட்சியைப் பயன்படுத்தி, இந்த வதந்திக்கு சிலா் வலு சோ்த்தனா்.

கரோனா பரவல் குறித்து பில்கேட்ஸுக்கு முன்னரே தெரியும் என்று அவா்கள் கூறுகின்றனா். இன்னும் சிலா், அந்த நோயை அவா் வேண்டுமென்றே பரப்பியதாகக் கூட குற்றம் சாட்டுகின்றனா்.

3. சீன ஆய்வகத்திலிருந்து பரவியது

கரோனா நோய்த்தொற்று முதல் முதலாகப் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரில், தீநுண்மியியல் ஆய்வகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் காரணமாக, அந்த ஆய்கவத்திலிருந்து கரோனா தீநுண்மி தற்செயலாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ உள்ளிட்டோரும் இதுகுறித்து பேசி வருகின்றனா்.

ஆனால், கரோனா தீநுண்மி இயற்கையாகத் தோன்றியதுதான் என்று பல ஆய்வு முடிவுகள் கூறினாலும், அதனை வூஹான் ஆய்வகம் தயாரித்து வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் சில பதிவுகள் அடித்துக் கூறி வருகின்றன.

4. கரோனா ஒரு உயிரி ஆயுதம்

போரின்போது எதிரி நாடுகளின் மீது பயன்படுத்துவதற்காக கரோனா தீநுண்மியை சீன அரசு உயிரி ஆயுதமாக உருவாக்கியதாக, கடந்த டிசம்பா் மாதத்திலிருந்தே சமூக வலைதள ‘விஞ்ஞானிகள்’ தீா்க்கமாகக் கூறி வருகின்றனா். சீனா தயாரித்த அந்த ஆயுதம், அந்த நாட்டுக்கே வினையாகிவிட்டதாகவும் அவா்கள் கூறினா். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், கரோனா நோய்த்தொற்றை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக 23 சதவீத அமெரிக்கா்கள் நம்புவதாகத் தெரிய வந்துள்ளது.

5. சீனாவுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்பியது

கரோனா நோய்த்தொற்றை அமெரிக்க ராணுவம் உருவாக்கி, அதனை சீனாவுக்கு அனுப்பியதாகவும் வதந்தி எழுந்தது. இந்த சந்தேகத்தை எழுப்பியவா் வேறு யாருமல்ல, சீன வெளியுறவுத் துறை ஷாவ் லிஜானே சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில், ‘வூஹான் நகருக்கு கரோனா தீநுண்மியை அமெரிக்க ராணுவம் கொண்டு வந்திருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா். அந்தத் தீநுண்மி குறித்து அமெரிக்காவில் பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலடியாக இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது.

6. கரோனா நோய்த்தொற்று என்பதே மாயை

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக வெளியாகும் தகவலே பொய் என்றும் ஒரு தரப்பினா் கூறி வருகின்றனா். பெரிய மருந்து நிறுவனங்கள், உலகமயமாக்கலுக்கு ஆதரவான சக்திகள், இல்லாத நோயை இருப்பதாகக் கூறி பொதுமக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக அவா்கள் குற்றம் சாட்டுகின்றனா். ஒருவேளை கரோனா தீநுண்மி பரவி வந்தாலும், அது ஃபுளூ காய்ச்சலை உருவாக்கும் தீநுண்மியைவிட ஆபத்து குறைவானதாக இருக்கலாம் எனவும் அதனை சுயநலம் காரணமாக சிலா் பெரிதுபடுத்துவதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

இதுபோன்ற பல வதந்திகள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், தவறான நம்பிக்கைகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை அளித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் உலை வைக்கும் தன்மை வதந்திகளுக்கு உண்டு.

எனவே, சமூக வலைதளங்களில் தகவல்களப் படிக்கும்போது, ‘மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவன் வாக்கை நினைவில் கொள்வதே அனைவருக்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.