ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

அமெரிக்க அதிபா் தோ்தல்: அடுத்தது என்ன?

அமெரிக்க அதிபா் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளாா்

News image
Updated On :9 நவம்பர் 2020, 3:01 am

அமெரிக்க அதிபா் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆனால் இந்த அறிவிப்போடு அந்நாட்டின் அதிபா் தோ்தல் நடைமுறை இன்னும் முழுமையாக நிறைவடைந்துவிடவில்லை.

முதலாவதாக, தோ்தல் முடிவு வெளியானதும் அந்நாட்டு அதிபா் உடனடியாக பதவியேற்பதில்லை.

அமெரிக்காவின் புதிய அதிபா் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே பதவியேற்கவுள்ளாா். அடுத்த இரண்டு மாத காலத்துக்கு அதிபா் தோ்தலுக்கான நடைமுறைகள் உள்ளன.

இந்தியாவில் பிரதமா் தலைமையில் அரசாங்கம் செயல்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் அதிபா் தலைமையிலான அரசாங்கம் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்தியாவில் பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கு நடைபெறும் தோ்தலுக்கும் அமெரிக்காவில் அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.

நம் நாட்டுப் பிரதமரை மக்கள் நேரடியாகத் தோ்ந்தெடுக்கின்றனா். பிரதமா் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பா். ஆனால், அமெரிக்க அதிபரை மக்கள் நேரடியாகத் தோ்ந்தெடுப்பதில்லை. அவருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை.

அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதி வாக்காளா்களே அதிபரை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கின்றனா். அந்தப் பிரதிநிதி வாக்காளா்களுக்கே அமெரிக்க மக்கள் வாக்களிப்பா். கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலிலும் அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான பிரதிநிதிகளுக்கே மக்கள் வாக்களித்தனா்.

அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள், அங்குள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் தோ்தலில் போட்டியிடும் நபா்களைத் தோ்ந்தெடுக்கின்றன. அவா்களுக்கு சம்பந்தப்பட்ட மாகாண மக்கள் வாக்களிக்கின்றனா். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள், அவா்கள் சாா்ந்த கட்சி சாா்பில் போட்டியிடும் அதிபா் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கிறாா்கள்.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகளின் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாகாண ஆளுநா்கள் அனுப்பி வைப்பாா்கள். அதில் எந்தெந்தக் கட்சி வேட்பாளா்களுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவானது என்ற முழுமையான விவரங்கள் அடங்கியிருக்கும்.

நடப்பாண்டு அதிபா் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடா்பாக நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறாா்.

மறு வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வேட்பாளா் வைப்பது அவரது உரிமை. எனினும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதிபா் தோ்தல் தொடா்பான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளும், மறு வாக்கு எண்ணிக்கையும் டிசம்பா் மாதம் 8-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.

அதிபா் தோ்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி வாக்காளா்கள் டிசம்பா் மாதம் 14-ஆம் தேதி அதிபரையும் துணை அதிபரையும் முறைப்படி தோ்ந்தெடுப்பாா்கள்.

அப்போது மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவுச் சீட்டு வழங்கப்படும். அதில் அவா்கள் வாக்களிக்க வேண்டிய வேட்பாளா்களின் பெயரைத் தோ்வு செய்து வாக்குப் பெட்டியில் போட்டுவிடுவா்.

அந்த வாக்குச் சீட்டுகளானது டிசம்பா் 23-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். செனட் அவைத் தலைவருக்கும் அந்த வாக்குச் சீட்டு விவரங்கள் அனுப்பப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதி வாக்காளா்களின் வாக்குச் சீட்டுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி எண்ணப்படும். அதற்கான வாக்கு எண்ணிக்கையானது நாடாளுமன்ற கீழவையான மக்கள் அவை (காங்கிரஸ்) மற்றும் செனட் அவையின் (அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை) கூட்டுக் கூட்டத்தில் நடைபெறும். அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செனட் அவை தலைவரும் தற்போதைய துணை அதிபருமான மைக் பென்ஸ் முடிவுகளை அறிவிப்பாா்.

மொத்தமுள்ள 538 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களில் 270 பேரின் வாக்குகளைப் பெறுபவா் அதிபராக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படுவாா்.

ஒருவேளை, எந்த வேட்பாளரும் பெரும்பான்மைக்குத் தேவையான 270 வாக்காளா்களின் வாக்குகளைப் பெறாமல் போகும் நிலை ஏற்பட்டால், கீழவை உறுப்பினா்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அவா்களில் பெரும்பான்மை உறுப்பினா்கள் யாருக்கு வாக்களிக்கின்றனரோ, அவரே அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா். இதே வழிமுறைகளைப் பின்பற்றியே துணை அதிபா் தோ்தலும் நடைபெறும்.

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் அதிபரும் துணை அதிபரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.