இஸ்லாமியர்களின் இறையுணர்வு கொண்ட தியாகத் திருநாள்!

இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், பெளத்த மதம் என மதங்கள் பல்வேறு பெயர்களில் இருந்தாலும், அனைவருடைய மனமும் ஒன்றுதான். எண்ணங்களும் ஒன்றுதான்.
இஸ்லாமியர்களின் இறையுணர்வு கொண்ட தியாகத் திருநாள்!

இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், பெளத்த மதம் என மதங்கள் பல்வேறு பெயர்களில் இருந்தாலும், அனைவருடைய மனமும் ஒன்றுதான். எண்ணங்களும் ஒன்றுதான். இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும், இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். இந்த சேவைகளின் மாற்றங்கள்தான் வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அனைத்து மதத்தினரின் வழிபாடும், சேவைகளும் இறைவன் என்ற திருவடியைத்தான் சென்றடைகிறது.

ஒவ்வொரு மதத்தினருக்கும் பல்வேறு பண்டிகைகள் உள்ளன. அதுபோல், இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ரம்ஜான் பெருநாள் போல, பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளை பெருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாயில் எம்.எஃப்.பி. அரபிக் கல்லூரி முதல்வர் தானாதி மு.ஜாகிர் ஹுசைன் ஆலிம் கூறியது: முஸ்லிம்களின் இறுதி கடமை என்பது புனித மெக்காவிற்குச் சென்று புனித வழிபாடு நடத்துவது. இந்த வழிபாடு உடல் நலமும், பொருளாதார பலமும் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமையாகும். இதனைத் தான் ஹஜ் புனித பயணம் எனச் சொல்லப்படுகிறது. மெக்காவில் முஸ்லிம்கள் ஃ கஹ்பா ஆலயத்தை வலம் வந்து முஜ்தலிபா, மினா, அரபா உள்ளிட்ட பாலைவன இடங்களில், கூடாரம் அமைத்து முஸ்லிகள் தியானம் செய்து, சாத்தானுக்கு கல் எறிந்து, இறுதியில் தங்கள் தலைகளை மொட்டை அடித்து வழிபாடு செய்வதையே ஹஜ் புனித கடமையாக கருதப்படுகிறது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில், நபிகள் இப்ராஹிமுக்கும், ஹாஜரா அம்மையாருக்கும் குழந்தை பாக்கியமே இல்லாது இருந்தனர். இந்நிலையில், இஸ்மாயில் என்ற ஆண் மகவையை, இறைவன் பிள்ளையாகக் கொடுத்தான். குழந்தை வந்த மகிழ்ச்சியில் நபி இப்ராஹீம் திளைத்தபோது, இஸ்மாயில் என்ற ஆண் குழந்தையை தனக்காக அறுத்து, நரபலி கொடுக்க வேண்டும் என்று நபி இப்ராஹிமுக்கு, இறைவன் கட்டளையிட்டான். இறைவனின் சோதனையை ஏற்று நபி இப்ராஹிம் தனது மகனை இறைவனுக்கு அறுத்து பலியிடத் தயாரானார்.

தனது நேசர் இப்ராஹிமின் தியாகச் செயலைக் கண்ட இறைவன், நரபலிக்கு பகரமாக, ஒரு ஆட்டை பலியிடுமாறு உத்தரவிட்டார். இதை நினைவுபடுத்தும் விதத்தில்தான், உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளில் ஆட்டையோ, மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ இறைவனுக்காக அறுத்து பலியிட்டு அந்த இறைச்சியை தாங்களும் உண்டு, உறவினர்கள் மற்றும் ஏழைகள் பிற சமுதாய மக்களுக்கும் உண்ணக் கொடுத்து மகிழ்வார்கள்.

பக்ரீத் பெருநாளான தியாகத் திருநாளன்று, சூரிய உதயத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, பள்ளி வாயில்களுக்குச் சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபடுகின்றனர். ஜாதி, மத, பேத வேறுபாடுகள் இல்லாமல் உலக மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

இஸ்லாமியர்கள் மெக்கா என்ற நகரத்தில் கஃபா என்ற ஆலயத்தை நோக்கி புனித பயணம் மேற்கொள்வதின் காரணம், அந்த ஆலயம்தான் முஸ்லிம்கள் வழிபாடு நடத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட முதல் ஆலயம் ஆகும். குர்பானி கொடுத்தப் பிறகு, மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். அதில், ஒரு பங்கு தமக்கும், 2 ஆவது பங்கு உறவினர்களுக்கும், 3 ஆவது பங்கு ஏழை, எளிய மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். 3 பங்காகப் பிரிக்காமல் குர்பானி செய்வதில் பலன் ஏதும் கிடையாது. ஒரு ஆட்டின் முன்பே, அந்த ஆடு பார்க்கும் படியாக அறுக்கக் கூடாது. குர்பானி கொடுக்கும் போது, உள்ளத் தூய்மை இருக்க வேண்டும். இறைவனுக்காக கொடுக்கப்படுகின்றது என்ற இறையுணர்வு, இறை அச்சத்துடன் கொடுப்பதுதான் நல்லது. தமிழகம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட உலக மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com