மாமல்லபுரம் கடற்கரையில் வெளிவந்த பல்லவர் காலத்து பழங்கால கோயில்? தொல்லியல் துறை ஆய்வு

மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகில் கடலில் புதைந்து வெளிவந்துள்ள தூண்கள், செங்கற்கள், ஸ்தூபிகள் ஆகியவை
மாமல்லபுரம் கடற்கரையில் வெளிவந்த பல்லவர் காலத்து பழங்கால கோயில்? தொல்லியல் துறை ஆய்வு
Published on
Updated on
4 min read


செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகில் கடலில் புதைந்து வெளிவந்துள்ள தூண்கள், செங்கற்கள், ஸ்தூபிகள் ஆகியவை மண்ணில் புதையுன்ட பல்லவர் காலத்து பழங்கால கோயிலின் பொருட்களா என்று ஆய்வு செய்வதற்காக தொல்லியல் துறையினர் அவற்றை எடுத்து சென்றனர். 

மேலும் கோயில் கட்டுமான பொருட்கள் வெளிவந்த இடத்தில் பழங்கால செப்பு நாணயம் ஒன்றும் மீனவர் கையில் சிக்கியது. 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோயில் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்கள் இங்கு உள்ளன. இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் கடந்த சில நாட்களாக திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அரிப்பால் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. 

அப்போது பழங்கால கோயில்களின் டெரகோட்டா வகையை சேர்ந்த 70 செங்கற்கள், 8 தூண்கள், கோயில் உச்சியில் அமைக்கப்படும் கருங்கல் ஸ்தூபிகள் என கடல் அரிப்பின்போது பூமிக்கடியில் இருந்து வெளிவந்துள்ளன. மணல் திட்டாக காட்சி அளித்த அப்பகுதி முழுவதும் இப்போது கோயில் கட்டுமானங்களை சேர்ந்த பழங்கால டெரகோட்டா வகையை சேர்ந்த சதுர வடிவு செங்கற்களாகவும் மற்றும் கருங்கற்களாவும் காட்சி அளிக்கிறது.  

பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகவும், காஞ்சிபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்த போது மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, புலிக்குகை உள்ளிட்ட ஏராளமான கட்டுமான கோயில்களை வடிவமைத்தனர். குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் இருந்து வந்த கடல் அகழாய்வு தொல்லியல் அறிஞர்கள் குழுவினர் மாமல்லபுரம் கடற்கரையில் படகில் சென்று ஆய்வு செய்து பல வரலாற்று தகவல்களை அப்போது வெளிக்கொண்டு வந்தனர். 

கடலில் பல கட்டுமானங்கள்(கோயில்கள்), பழங்கால கலை பொக்கிஷங்கள் மூழ்கி இருப்பதாகவும் அவர்கள் தில்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பிவிட்டு சென்றனர். அதேநேரத்தில் தமிழக தொல்லியல் துறையின் அகழாராய்ச்சி பிரிவினர் 2005-ம் ஆண்டு புலிக்குகை புராதன சின்னம் அருகில் கடற்கரை ஒட்டி அகழாய்வு செய்தபோது பூமியில் புதைந்து கிடந்த பழங்கால முருகன் கோயில் கட்டுமானத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்து பழங்கால கருங்கல்லில் வடிக்கப்பட்ட தூண்கள், வேல், குடுவைகள், கருங்கற்கள், ஸதூபிகள்; போன்றவற்றை கண்டுபிடித்து எடுத்து அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் கடற்கரை கோயில் கட்டுமான பணி அமைத்த போது அங்கு கடல் அப்போது  1000 மீட்டர் தூரத்தில் பின்னோக்கி இருந்ததாகவும், அங்கு மக்கள் வாழ்விடங்கள் இருந்ததாகவும் கூறப்படுறது. அப்போது முதலாம் நரசிம்ம பல்லவ மன்னனால் சில சிறிய கோயில்கள் அங்கு கட்டப்பட்டதாகவும் காலப்போக்கில் கடலின் தட்ப வெப்ப நிலை மாறி கடல் முன்னோக்கி வந்துவிட்டபோது மக்கள் வாழ்விடங்கள், கோயில்கள் கடலில் மூழ்கி விட்டதாக வரலாற்று சான்றுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

தற்போது கடல் அரிப்பினால் பூமிக்கடியில் இருந்து வெளிவந்துள்ள தூண்கள், ஸ்தூபிகள், செங்கற்கள், சுண்ணாம்பு படிமங்கள் ஆகியவை கடலில் மூழ்கி இடிந்த கோயில்களின் துகள்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் தலைமையில் சென்ற தொல்லியல் துறை பணியாளர்கள் கடற்கரையில் பூமிக்கடியில் இருந்து வெளியே வந்துள்ள பழங்கால கோயில்களின் தூண்கள், ஸ்தூபிகள், சுண்ணாம்பு படிமங்கள், பழங்கால செங்கற்கள் ஆகியவற்றை சங்க காலத்திற்கு முன்பு மண்ணில் புதையுண்ட இக்கோயில் எந்த மாதிரியான கட்டுமான பணி, பல்லவர்களில் எந்த மன்னன் ஆட்சி காலத்தில் இவை புதையுண்டது என ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர். 

ஸ்தூபிகள், தூண்கள் அதிக எடை  கொண்டு இருந்ததால் கயிறுகட்டி தொல்லியல் துறை பணியாளர்கள் அதனை தூக்கி சென்றதை காண முடிந்தது. இந்நிலையில் பழங்கால கோயில் பொருள்கள் பூமியில் இருந்து வெளிவந்தது குறித்து மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரி முதல்வரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான முனைவர் ஜெ.ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:- 

மாமல்லபுரத்தில் கடற்கரையில் பூமிக்கடியில் இருந்து வெளிவந்துள்ள செங்கற்கள், தூண்கள், ஸ்தூபிகள், சுண்ணாம்பு படிமங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது, புலிக்குகை முருகன் கோயில் கண்டுபிடிப்பில் கண்டு எடுக்கப்பட்ட தூண்கள், செங்கற்கள், ஸ்தூபிகள் போன்று ஒத்து இருப்பதால் சங்க காலத்திற்கு முந்தைய கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களாக இவை இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

சங்க காலத்தில் கடற்கரையில் கோயில் கட்டிய பல்லவர்கள் செங்கற்களையும், கருங்கற்களையும் கொண்டே கோயில் கட்டி உள்ளனர். டெரகோட்டா வகை செங்கற்கள் உப்பு நீரில் கரையாது. புல வருடங்கள் அவை கட்டிடத்தை தாங்கி நிற்கும் வல்லமை கொண்டவை ஆகும். பல்லவர்கள் சதுர வடிவில் செங்கற்களை பயன்படுத்தியதற்கு பல சான்றுகள் உள்ளன. இங்கு கிடைத்த செங்கற்கள் அந்த தகவலை உறுதி படுத்துகின்றன. இங்கு மத்திய தொல்லியல் துறையும், தமிழக தொல்லியல் துறையும் இணைந்து அகழாய்வு மேற்கொண்டால் சங்க காலத்தில் பூமியில் புதையுண்ட சங்க கால கலை பொருட்களை கண்டுபிடிக்காலம் என்றும், அவை தமிழர்களின் கலைப்பண்புகளையும், பண்பின் காலத்தையும் கணக்கிடுவதற்கு ஒரு சான்றாக அமையும் என்று அவர் தெரிவித்தார். 

தற்போது பலத்த கடல் சீற்றம் காரணமாக பூமிக்கடியில் இருந்து வந்துள்ள கலை பொருட்களினால் கடற்கரையில் பழங்கால கட்டுமான பொருட்களின் சிதறல்கள் அதிகமாக உள்ளதாலும், மணல் பரப்பும் கடல் நீரினால் சூழப்பட்டதாலும் அங்கு படகுகளை கரை நிறுத்தும் திட்டத்தை கைவிட்ட மாமல்லபுரம் மீனவர்கள மாற்று இடத்தில் தங்கள் படகுகளை நிறுத்தி உள்ளனர். 

இந்நிலையில் பழங்கால கோயில் கட்டுமான பொருட்கள் வெளிவந்துள்ள இந்த இடத்தில் நிறுத்தியிருந்த தன் படகினை எடுக்க சென்ற மீனவர் விஜயகுமார்(44) என்பவரின் கையில் பாறையில் கிடந்த பழங்கால செப்பு நாணயம் ஒன்று சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயமாக இருக்கலாம் என்றும் தொல்லியல் அறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

பல்லவர்கால சிற்பக்கலையில் கடற்கரையில் சவன் பகோடாஸ் எனப்படும்  7 கடற்கரைக் கோயில்களில் 6 கடற்கரைக் கோயில்கள் கடலில் மூழ்கிவிட்டதாகவும், ஒரேஒரு கடற்கரைக் கோயில் மட்டும் மிஞ்சி பல்லவர்கால சிற்பக்கலையை பறைச்சாற்றும் வகையில் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தற்போது இந்த சிதறல்கள் மூழ்கிய கடற்கரைக் கோயில்களின் பாகங்களாகக்கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com