நாளை அறிமுகம்! ஏற்றம் தருமா 'எண்ம ரூபாய்'?

மத்திய ரிசர்வ் வங்கி வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் எண்ம ரூபாயை கடந்த 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இது நாளை(டிச. 1) முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் மக்களுக்கு பயன் அளிக்குமா?
நாளை அறிமுகம்! ஏற்றம் தருமா 'எண்ம ரூபாய்'?


மத்திய ரிசர்வ் வங்கி வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் எண்ம ரூபாயை கடந்த 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. பிளாக் செயின் தொழில்நுட்ப அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எண்ம ரூபாயை, முதல்கட்டமாக மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பிரிவுகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 9 அரசு, தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது வெற்றியடையும் பட்சத்தில், அடுத்தகட்டமாக சில்லறை வர்த்தகத்தில் குழுவாகச் செயல்படும் வியாபாரிகள், பொதுமக்களிடையே எண்ம ரூபாய் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சில்லறை விலை அடிப்படையிலான எண்ம ரூபாய், மொத்த விலை அடிப்படையிலான எண்ம ரூபாய் என இரு பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவானது:  முன்னதாக வங்கிகளிடையே அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனைகள் நடைபெறும்போது, 'டி பிளஸ் ஒன்' என்ற விதி அடிப்படையில், பரிவத்தனைகளை மேற்கொள்ள சுமார் 48 மணி நேரம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. அதுவே எண்ம ரூபாய் அடிப்படையில் மேற்கொள்ளும்போது, சில விநாடிகளிலேயே பரிவர்த்தனையை நடைபெற்று முடிந்துவிடும்.

அவசியம் என்ன: பொதுமக்கள் அரசுத் திட்டங்களுக்கான மானியத் தொகையை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பெறும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கிவைக்கப்பட்டன.
இதன் அடுத்தகட்டமாக, பொதுமக்கள், வியாபாரிகள் வங்கிகளுக்குச் செல்லாமல் இணையவழி அடிப்படையில் க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி சுலபமாக பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசின் நேஷனல் பேமன்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் மூலம் "பிம்' செயலி கடந்த 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ நிறுவனங்கள் வந்த பிறகே கியூஆர் குறியீடு அடிப்படையிலான பணப் பரிவர்த்தனைகள் பிரபலமடைந்தன.

இப்போது ஜன்தன் வங்கிக் கணக்குகள், பிம் செயலி மற்றும் மத்திய அரசின் திட்ட உள்ளிட்ட சேவைகளை இணைக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் நேஷனல் பேமன்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் இந்த ரூபாயை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

பாமரரும் பயன்படுத்தலாம்: எண்ம ரூபாயானது பணம் ஏற்றப்பட்ட இ-வவுச்சர் அல்லது க்யூஆர் குறியீடு அடிப்படையிலோ கைப்பேசியில் பெறும் வகையில் வழங்கப்படும். இந்த ரூபாயை பயன்படுத்த நவீன கைப்பேசி செயல்பாடு குறித்தோ, இணையவழி வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் குறித்தோ அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

குறிப்பாக, மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையானது அந்தந்த திட்டங்களின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, விவசாயிகளுக்கு உரம் வாங்குவதற்காக ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால், இதை விவசாயிகள் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்த முடியும். அதுவே, எண்ம ரூபாய் அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்பட்டால், உர நிலையங்களில் உரம் வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதேபோல, தேசிய ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்ளுக்கான ஊதியம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதில் இப்போது இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, மீதமுள்ள தொகையை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர். அதுவே, எண்ம ரூபாயில் வழங்கப்படும்போது, பயனாளிக்கு முழுத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

யுபிஐ நிறுவனங்களுக்கு கடிவாளம்: நாட்டில் தற்போது 22 யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. யுபிஐ க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்வது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீத அளவுக்கு பயனாளர்களை கூகுள்பே, போன்பே நிறுவனங்கள் கொண்டுள்ளன. தனியார் யுபிஐ நிறுவனங்கள் மூலம் வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டு பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருவதால், வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடுபோகும் சூழல் அதிகரித்து வருகிறது.

யுபிஐ நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் சந்தை மதிப்பை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. யுபிஐ நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் எண்ம ரூபாய் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பயன்கள்: 

♦கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக எண்ம ரூபாய் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதிலிருந்து எண்ம ரூபாய் முற்றிலும் மாறுபட்டது.

♦ கிரிப்டோகரன்சிகள் தனியாரால் நிர்வகிக்கப்படும் நிலையில், எண்ம ரூபாய் மத்திய அரசு மூலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

♦ காகித வடிவிலான இப்போது புழக்கத்திலுள்ள ரூபாய் மதிப்பும் எண்ம ரூபாய் மதிப்பும் சமமானது.

♦எண்ம ரூபாயை கைப்பேசியிலேயே சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதை பயன்படுத்த கடன், பற்று அட்டைகளோ, இணையதளமோ தேவையில்லை. இணைய இணைப்பில்லாத சாதாரண கைப்பேசி மூலமாகவே பயன்படுத்தலாம்.

♦மத்திய அரசுத் திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி எந்தவித இடைத்தரகர்கள், நிறுவனங்கள் சார்ந்து இல்லாமல் நேரடியாக பயனாளிகளை சென்று சேருவது உறுதிப்படுத்தப்படும்.

♦ எண்ம ரூபாய் அடிப்படையிலான பரிவர்த்தனையில் பயன்பாட்டாளர்களின் தரவுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும், விரைவான சேவை கிடைக்கும். இதை அரசு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள், அமைப்புகளும் பயன்படுத்த முடியும்.

♦ இப்போது பயன்பாட்டிலுள்ள காகித வடிவிலான பணத்தை அச்சிடுவதற்கு மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் எண்ம ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் காகித வடிவிலான ரூபாய் முற்றிலும் பயன்பாட்டில் இல்லாமல் போகலாம்.

♦பல்வேறு நாடுகளில் அந்தந்த நாடுகளின் எண்ம ரூபாய் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ம ரூபாய் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com