உலக அரங்கில் முன்னெடுக்கப்படாத மொழிப்போர்!

தாய்மொழியைக் காக்க இத்தனை பேர் மாண்டதற்குக் காரணமான மொழிப் போரை உலக அரங்குக்குக் கொண்டு செல்ல யாரும் முனையவில்லை என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது.
உலக அரங்கில் முன்னெடுக்கப்படாத மொழிப்போர்!
Published on
Updated on
2 min read

இன்றைக்கு உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கான வரலாற்றுக் காரணமும் இருக்கிறது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டில் பிரிந்தது. அப்போது, வங்காளத்தில் ஒரு பகுதியைக் கிழக்கு பாகிஸ்தான் என்றும், மேற்கிலுள்ள பகுதியை மேற்கு பாகிஸ்தான் எனவும் இணைத்து பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டது.

இதில், கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியும், மேற்கு பாகிஸ்தானில் உருதும் தாய்மொழியாக இருந்தன. இந்நிலையில், 1948 ஆம் ஆண்டில் உருது மொழிதான் இந்த நாட்டின் ஆட்சி மொழி என அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா அறிவித்தார்.

இதற்கு வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உருது மொழி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது என்பதல்ல; வங்க மொழியையும் ஆட்சி மொழியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.

அக்கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் கிளர்ச்சி உருவாகி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை பாகிஸ்தான் அரசு கடுமையாக ஒடுக்கியது.

இந்நிலையில், 1952, பிப்ரவரி 21 ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிய அளவில் வெடித்து துப்பாக்கிச்சூடு வரை சென்றது. இதில், 4 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து ஆண்டுதோறும் அந்நாளை வங்க தேசத்தினர் துக்க நாளாகக் கருதி மாணவர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன்பின்னர், இந்தியாவின் தலையீட்டால் 1971-இல் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டு வங்கதேசம் உருவானது. வங்க மொழியும் அந்நாட்டின் ஆட்சி மொழி என்ற அந்தஸ்தை எட்டியது. ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, இப்போராட்டத்தை அந்நாட்டினர் உலக அரங்குக்கும் கொண்டு சென்றனர்.

இந்த பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கக் கோரி 1998 ஆம் ஆண்டில் கனடா நாட்டிலிருந்து வங்க தேசத்தைச் சேர்ந்த ரபீரும் இசுலாம் என்ற இளைஞர் ஐ.நா. மன்றப் பொதுச் செயலருக்குக் கடிதம் எழுதினார். இக்கோரிக்கையை ஐ.நா. மன்றம் ஏற்று 1999 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் தேதியை உலகம் முழுவதும் உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்குமாறு யுனெஸ்கோ (ஐ.நா.வில் உள்ள கலை, அறிவியல், பண்பாட்டு அமைப்பு) மூலமாக அறிவித்தது. இது, 2000 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

இதில், ஆச்சரியம் என்னவென்றால், 4 மாணவர்கள் இறந்ததை 47 ஆண்டுகளுக்கு பின்னால் எங்கேயோ இருந்து ஒருவர் கடிதம் எழுதியதை நடைமுறைப்படுத்தி, இப்போது உலகமே தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்கிறது.

ஆனால், அதற்கு முன்பு 1937 ஆம் ஆண்டிலிருந்தே மொழிப் போராட்டம் நடத்திய நம்முடைய மண்ணில், தீக்குளித்தும், நஞ்சு அருந்தியும், துப்பாக்கிச்சூட்டிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தி மொழி நமக்கு எதிரி அல்ல; நம்மை ஆதிக்கம் செலுத்த வருகிற மொழி என்ற காரணத்தால், அதற்கு எதிராக 1937, 1948 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து பலமுறை நடைபெற்ற போராட்டம் 1965 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியது. இதனால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.

ஆனால், தாய்மொழியைக் காக்க இத்தனை பேர் மாண்டதற்குக் காரணமான மொழிப் போரை உலக அரங்குக்குக் கொண்டு செல்ல யாரும் முனையவில்லை என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது.

தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளைப் போன்று ஆண்டுதோறும் ஜனவரி 25-இல் மொழிப் போர் தியாகிகள் நினைவு தினத்தை அனுசரிப்பதும், வீரவணக்கம் செலுத்துவதும், பொதுக் கூட்டங்கள் நடத்தி, அரசியல் பேசுவதுமாக இப்போராட்டம் சுருங்கிவிட்டது.

தாய்மொழிக்காகத் தீக்குளித்தும், நஞ்சுண்டும், துப்பாக்கிச்சூட்டிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். இவ்வளவு பெரிய தியாகத்தை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டு செல்ல ஏன் யாரும் முனையவில்லை என்பது வேதனைக்குரியது.

தங்கள் பகுதியில் 4 பேர் இறந்ததைத் தாங்க முடியாமல், அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கனடாவிலிருந்து ஐ.நா. மன்றத்துக்கு கடிதம் எழுதி, அதை உலகம் ஏற்றுக்கொள்கிற நாளாகக் கடைப்பிடிக்க முடிந்தது. ஆனால், தமிழ் மொழியை நூற்றுக்கணக்கானோர் உயிர் கொடுத்து காத்த நிலையில், அதை உலக அரங்குக்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்பது வருத்தம்தான். 

(பிப். 21 - உலக தாய்மொழி நாள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com