
வைகறையில் ஓர் இலக்கியக் காட்சி (காட்சியை அகக் கண்ணால் காண்க).
ஓர் ஊரின் கோயிலுக்கு அருகே, வயல்களுக்கு நடுவே பாம்புபோல வளைந்து, நெளிந்து செல்லும் கழனிப் பாதை.
அதிகாலையிலேயே வேர்க்க, விறுவிறுக்க, ஓட்டமா? நடையா? என்று யாரும் யூகிக்க முடியாததொரு பரபரப்பில் ஒருவன் ஓட்டநடை போட்டுக் கொண்டிருக்கிறான்.
யார் அது?
அட ... கார்மேக வண்ணன்... திருமால்..!
அது என்ன அவன் தோளில்?
அடடே... நாளும் தான் படுத்துக் கொண்டிருந்த பைந்நாகப் பாய்ப் படுக்கையை அவசர அவசரமாகச் சுருட்டி எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டிருக்கிறானே!
பாம்பாகையால் அது விறைப்பாக இல்லாமல், துவண்டு, நெகிழ்ந்து, குழைந்து, ஓடுபவன் முதுகில் தனது வாலால் ‘பட், பட்’டென அடித்து அவனுக்குத் துன்பம் தருகிறது.
வேறு என்ன நிகழ்கிறது அங்கே?
கண்ணி கண்ணிகளாகக் கட்டப்பட்ட வாசமிகு துளசிமாலை (திருத்துழாய் மாலை) பரபரப்பாய் ‘ஓட்ட நடை’ போடும் அவனுடைய பரந்த மார்பில் புரளுகிறது; அதிலிருந்து அருவியாய்த் தேன் வழிந்து வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் காரணமாக, அவன் (திருமால்) ‘ஓட்ட நடை’ செல்லும் கழனிப்பாதை முழுவதும் குழைந்து சேறு போலாகிவிட்டது.
சரி, அது யார்..., பின்னால் ஒரு மங்கை...?
தட்டுத் தடுமாறி, தத்தித் தத்தி...?
ஓ... திருமகள்!
திருமால் எங்கு செல்கிறானோ அவனைப் பின்தொடர்ந்து தானும் அங்கு செல்ல விழைந்து, ஆவலால் விடுக்கென எழுந்து, உடன் செல்ல முயன்று, தட்டுத் தடுமாறி வருகிறாள் போலும். வழிமுழுதும் முன்னோடும் திருமாலின் மாலையிலிருந்து அருவியாய்த் தேன் இறங்கிச் சேறுபோல ஆகிவிட்டதே!
மிகவும் வழுக்குகிறது திருமகளுக்கு. அதனால்தான் தத்தித் தத்தி, இந்தத் தடுமாற்ற நடை திருமால் துணைவிக்கு. யாரையோ பின்தொடர்ந்து போகும் அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக, ‘பைந்நாகப் பாய்ச்’ சுமையோடும் சென்று கொண்டிருந்த திருமால் நல்லவேளையாக ஒரு கணம் திரும்பிப் பார்த்தான்.
பூவாசமே செய்து புவி வாசம் சிறிதும் அறியாதது திருமகள் சீரடி.(அவள் ‘வண்ணச்சீரடி மண்மகள் அறியாளே’!) அதிலும் குழ, குழ, வழு வழு, சேற்றுப்பாதையில் நடக்கவே இயலாமல் தத்தித் தத்தி, தடுமாற்ற நடை பயின்று வரும் திருமகளைக் கண்டான் திருமால்.
தான் பள்ளி கொள்ளும்போது தனது கையையே தலையணை போல வைத்துக் கொள்பவனல்லவா அவன்? மனையாள் கையைத் தனது, கையணையைக் கொண்டு, முகந்தெடுத்தது போலக் கோர்த்து அணைத்தவாறு (இழுத்துக்)கொண்டு உடனழைத்துச் செல்கின்றான்.
அது சரி. ஏனிந்த இடப்பெயர்வு இருவருக்கும்?
பள்ளிகொண்டிருந்த இடத்தில் பூகம்பமா?
கொள்ளிடத்து வெள்ளமா?
கோவிலில் தீயா?
எதுவும் இல்லையே.
பிறகென்ன?
தான் மிகவும் விரும்பும் ஒரு பொருளுக்காக... ஒருவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு... மறுபேச்சு எதுவுமே இல்லாமல்... அவர் பின்னால் தன் வழக்கமான இருப்பிடத்தையும் விட்டு திருமால் விரைந்துகொண்டிருக்கிறான்.
அவன்பின் திருமகளும் தொடர்கிறாள்.
இவர்கள் இருவர் மட்டுந்தானா? இல்லையே.
கூடவே, பழைய மறைகளாகிய வேதங்கள் யாவும் “திருமாலே! நீ எம்மை மறந்து விட்டாயே” எனப் புலம்பிக்கொண்டே திருமால் - திருமகள் இணையின் பின் தொடர்ந்து வருகின்றனவாம்.
வேதங்களையே திருமால் மறந்து, துறந்து, எப்பொருள் நாடி இப்படிப் பைந்நாகப் பாயோடும் இடப்பெயர்வானான்? அப்பொருள்... அமுதப் பைந்தமிழ்!.
திருமாலையே அவசர இடப்பெயர்வு செய்யப் பணித்தது ஓர் ஆழ்வார்... அவர் திருமழிசை ஆழ்வார்!
இக்காட்சியைப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கே சிகரமாகத் திகழும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் வழங்குவதன் வழி அறிகிறோம்.
இதோ அப்பாடல்:
மணிகொண்டநெடுநேமி வலயஞ் சுமந்தாற்று
மாசுணச் சூட்டுமோட்டு
மால்களிறு பிடர்வைத்த வளரொளிவிமானத்து
வாலுளை மடங்கல்தாங்கும்
அணிகொண்டபீடிகையின் அம்பொன்முடி முடிவைத்தெம்
ஐயனொடு வீற்றிருந்த
அங்கயற் கண்ணமுதை மங்கையர்க்கரசியையெம்
அம்மனையை இனிதுகாக்க
கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்
கலுழிபாய்ந் தளறுசெய்யக்
கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்
கையணை முகந்துசெல்லப்
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்
பணைத்தோள் எருத்தலைப்பப்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே.
சரி. குமரகுருபரர் சொல்வது போல ‘பச்சைப் பசுங்கொண்டல்’ திருமால், ஏன் “பைந்தமிழ்ப் பின்” சென்றான்? அதற்கு ஒரு முன் கதை இருக்கிறது. சுருக்கமாகப் பார்ப்போம்.
காஞ்சியில் உறையும் பெருமாள் திருமழிசை ஆழ்வார் எனும் தனது அடியாரின் அமுதினிய பைந்தமிழ்ப் பாடல்களுக்கு ஆட்பட்டுவிட்டான். திருமழிசை ஆழ்வார் ஊரைவிட்டே செல்கிறார். அவர் போய்விட்டால் எவ்வாறு தினமும் அவர் போற்றிப் பாடும் இன் தமிழ்ப் பாடல்கேட்டு இன்புறுவது? அவர் பாடும் செந்தமிழ்த்தேன் பாய்ந்து தன் செவி நிறைக்காமல் தனக்கு ஒருநாள் கூடக் கழிக்க இயலாதே!
அவரோ ‘நான் ஊரை விட்டுச் செல்கிறேன்; நீயும் உன் பாம்பணையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எம்முடன் வந்து விடு,’ என கட்டளை இடுகிறார். மறுபேச்சுப் பேசாமல் தானும் அவர் பின்னால் போய்விடலாம் என்று திருமாலும் கிளம்பி விட்டானாம்!
அது சரி, திருமழிசை ஆழ்வார் ஊரைவிட்டே செல்லக் காரணம் என்ன? வாங்க... அக் கதைக்குள்... விளக்கமாகப் பார்க்கலாம்..
சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். அவ்வூரின் பெயராலேயே திருமழிசை ஆழ்வார் என்றானார். 12 ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார் என அவர் கருதப்படுகிறார். 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் ஆரம்பத்தில் சைவநெறியாளராக இருந்து முதலாழ்வாரான பேயாழ்வாரால் வைணவத்திற்கு ஈர்க்கப்பட்டவர் எனும் செய்திகளுண்டு. தமிழுக்கு 216 பாசுரங்களை அருளியவர். அவை நான்முகன்திருஅந்தாதி (96), திருச்சந்த விருத்தம் (120) என்று அழைக்கப்படுகின்றன. இவை நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திருமழிசை ஆழ்வாரது பிரபந்தங்கள் தான் முதன்முதலில் திருமாலை வேறு தெய்வங்களுக்கு மேலாக உயர்வாகச் சொல்லியவை.
திருவெஃகா தலத்தில் (காஞ்சிபுரம்) பெருமாள் கோயிலில் தனது இளவல் முறையான சீடனுமான கணிகண்ணனுடன் தங்கி அவர் இறைச் சேவை செய்து வந்தார். அவர்களின் குடிலைத் தினமும் கைம்மாறு கருதாது தூய்மை செய்துவரும் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி இருந்தார். அம்மூதாட்டிக்கு ஏதாவதொரு நன்மை செய்ய எண்ணிய ஆழ்வார், ஒருநாள் அவரிடம் “நீ வேண்டுவன கேள்” எனக் கூறினார்.
அம்மூதாட்டியோ “ஐயா எனது வயது முதிர்வால் ஏற்பட்ட இயலாமையால் தங்களுக்கு முழுமையான சேவை செய்ய முடியாமல் தடுமாறுகிறேன். இளமையாக இருந்தால் இன்னும் கூடுதலாக உங்களுக்குப் பணியாற்றுவேன். வேறேதும் விருப்பமில்லை ” என்றார்.
மூதாட்டியின் அந்த வருத்தத்தை உடனே போக்கும் வண்ணம் ‘என்றும் இளமையாக இருக்கும்படி’ அம்மூதாட்டிக்கு ஆழ்வார் வரம் நல்கினார். அக்கணமே முதுமையகன்று அழகிய இளமங்கையாய் அவர் மலர்ந்தார். அச்சமயத்தில் காஞ்சியை ஆண்டு வந்தது பல்லவராயன் என்ற மன்னன். ஒருநாள் நகர்வலத்தின்போது மன்னன் அந்தப் பெண்ணைக் கண்டு, கண்டதும் அவள் அழகில் மயங்கி, அவளை மணந்து கொண்டான்.
காலச் சுழற்சியில் மன்னன் இளமை குன்றி முதுமையடையத் துவங்கினான். ஆனால் தன் மனைவி இளமை குன்றாமல் இருப்பதன் காரணத்தை அவளிடம் வினவினான். அவள் திருமழிசை ஆழ்வார் தனக்கு ‘என்றும் இளமையாக இருக்கும்படி’ வரம் நல்கியதைத் தெரிவித்தாள்.
தானும் அந்த ஆழ்வார் மூலம் இழந்துவரும் இளமையை மீட்டெடுக்க மன்னன் ஆசைப்பட்டான். தன் சேவகர்கள் மூலம் ஆழ்வாரின் (இளவல்) சீடனான கணிகண்ணனை அரசன் அழைத்துத் தனக்கும் என்றும் மாறாத இளமை அருள ஆழ்வாரிடம் எடுத்துரைக்கும்படி வேண்டினான்.
தனது (உடன் பிறவாத் தமையனான) குருவின் தன்மையறிந்த சீடன் கணிகண்ணன் அவ்வாறெல்லாம் ஆழ்வார் செய்ய மாட்டாரே என மிகப் பணிவுடன் எடுத்துரைத்தான்.
‘சரி, நாமே பிறகு ஆழ்வாரைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கருதி, முன்னோட்டமாகத் தன்னைப் பற்றி ஒரு பாடலேனும் பாடுமாறு ஆழ்வாரிடம் சொல்ல வேண்டும் எனக் கணிகண்ணனுக்கு மன்னன் ஆணையிட்டான்.
தன் குருவின் பதில் என்னவாக இருக்கும் என்று கணிகண்ணனுக்குத் தெரிந்தும் அரசன் விருப்பத்தை ஆழ்வாரிடம் தெரிவிக்கும் கடமையைச் செய்தான்.
எதிர்பார்த்தது போலவே ‘நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்ற துணிவுடன் முழங்கினார் திருமழிசை. (இவருக்கு ‘உறையில் இடாதவர்’ என்றொரு பெயர் உண்டு – ‘வாளினை உறையில் இடாத வீரன் என்பது அப்பெயரின் பொருள் (இங்கு ஆழ்வாரின் நா ‘வாள்’ எனப்படுகிறது).
“ஆழ்வார் ஆண்டவனை ஏற்றிப் பாடுவாரேயன்றி ஆள்பவரைச் சும்மா புகழ்ந்து அருந்தமிழ் தரமாட்டாரே” என முன்பே நன்கு அறிந்திருந்த சீடன் ஆழ்வாரின் பதிலைப் பக்குவமாக மன்னனிடம் பணிந்தளித்தான். பொங்கு கடலென மன்னன் வெகுண்டான். கணிகண்ணனை உடனே நாடு கடத்தும்படி மன்னன் வாய்மொழி ஆணை வெடித்தது.
தனது இருப்பிடத்துக்கு வருத்தமுகமாக வந்த சீடனிடம் கேட்டுச் செய்தியறிந்தார் ஆழ்வார். சீடனுக்கு ஏற்பட்ட துயர் தன்னால்தானே என உணர்ந்து, சீடனுடன் தானும் நாடகலத் தயக்கமின்றி முடிவெடுத்தார். பின்னர், கோவிலுக்குச் சென்று, “பெருமாளே கிளம்பு உடனே, உனது உடைமையான பாம்புப் படுக்கையைச் சுருட்டி எடுத்துக்கொண்டு” எனுந் தொனியில்-
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்.
என்று கட்டளையிட்டுவிட்டுக் கார்வண்ணனுக்குச் சற்றும் காத்திருக்காமல் கிளம்பிவிட்டார் ஆழ்வார் (கவனிக்க: ‘துணிவுடைய செந்நாப்புலவனும்...’).
(பொருள்: கணிகண்ணைன் செல்கின்றான், நானும் உடன் செல்கிறேன், கச்சி (காஞ்சி)யில் இருக்கும் பெருமானே, நீ எதற்கு இங்கு கிடக்கிறாய்? இங்கு நீ இருக்க வேண்டாம். ஆதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் சுருட்டிக்கொண்டு கிளம்பி எங்களுடன் வா).
ஏன்? என்ன? என்று ஒருவார்த்தை கேட்கவில்லையே பெருமாள்.
தன் பக்தன் போய்விட்டால், தினமும் தன் செவியும் சிந்தையும் குளிரச் செய்யும் செந்தமிழுக்கு எங்கே போவது? அரைநொடியும் தனக்கு அவகாசம் தராமல் ஆழ்வார் கிளம்பிவிட்டாரே!
தமிழ்ப் பட்டினி தனக்கு வராமலிருக்க வேண்டுமானால் தனக்கு வேறு வழியேயில்லை. தானும் தன் நாகப்படுக்கையைச் சுருட்டிக்கொண்டு ஆழ்வாரின் பின் செல்வதே அதிஉத்தமம் என்ற கருத்தில், நொடியும் தாமதிக்காமல் அவசர அவசரமாக படுக்கையைச் சுருட்டித் தோளில் போட்டுக்கொண்டு ஓட்டமா? நடையா? என்று எவரும் நிர்ணயம் செய்ய முடியாததொரு பரபரப்பில் பரந்தாமன் தொடர்ந்தானாம்.
(கிளம்பிச் சென்ற ஆழ்வார், திருமகள், கணிகண்ணன், பெருமாள் ஆகியோர் ஒரு நாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மருவி “ஓரிக்கை” என இந்நாளில் அழைக்கப்படுகிறது).
பெருமாளைத் தொடர்ந்து திருமகளும் செல்ல, காஞ்சி நகரமே பொலிவிழந்தது. நாடு வறண்டது, வளம் குறைந்தது. மன்னன் தன் தவறுணர்ந்தான்.
ஆழ்வாரிருந்த (“ஓர் இரவு இருக்கை”) இடத்திற்குச் செருக்கில்லாமல் சென்று பணிந்து தன்னை மன்னித்தருளும்படியும் அவரையும் அவருடன் வந்தவர்களையும் நாடு திரும்ப மன்னன் வேண்டினான்.
காழ்ப்புணர்வு களைந்துள பண்புநிறை ஆழ்வார் கனிந்தார். இருப்பினும் தனது சீடனின் சுயமரியாதை காயம்பட்டிருப்பதால் அவனிடம் பொறுத்தமைய வேண்டுமாறு மன்னனுக்கு அறிவுறுத்தினார். நாட்டு நலம் பெரிதெனக் கருதிய மன்னன், தயங்காது கணிகண்ணன் மன்னிப்பைக் கோரினான்.
குருவழியே தன்வழி எனக் காட்டும் வண்ணம் சீடனான கணிகண்ணன் மன்னனுடன் இயல்பானான்.
யாவும் சுமுகமாகவே, திருமழிசை ஆழ்வார் சீடனுடன் காஞ்சி திரும்ப முடிவெடுத்தார். காஞ்சி மீண்ட பின்னரும் கார்வண்ணன் நின்றுகொண்டே இருந்தானாம் (‘பாயைச் சுருட்டி வா’ என்றார். அவ்வாறே வந்தேன். ‘திரும்பு காஞ்சிக்கு’ என்று கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்துவிட்டேன் 'படு' என்று ஆழ்வார் சொல்லவில்லையே’ என்று பரந்தாமன் நினைத்தே நின்றான் போலும்).
திருமாலின் மனவோட்டம் திருமழிசையைத் தொட்டது. அக்கணமே சட்டென்று திரும்பி ‘அதுதான் யாவும் இனிதே முடிந்து விட்டதே. முன்பு எண்ணிய போக்கினைக் கணிவண்ணன் கைவிட்டான். நீயும் நானும் காஞ்சிக்கு மீண்டோம். ஆகவே பழையபடி நீ ‘பாம்பணையில் 'கிட' என்று புதிய உத்தரவு பிறப்பித்தார்.
தன் சொல் ஏற்றுப் பின் தொடர்ந்து வந்த பெருமாளை நோக்கி ஆழ்வார் அளித்த சொல் இது:
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்
தமிழுக்கும் தன்மேல் ஆழ்வார் சொரியும் பேரன்புக்கும் உடன்பட்டுப் பெருமாளும் மீண்டும் பைந்நாகப்பாய் விரித்துப் படுத்துக்கொண்டாராம். அவசரத்தில் அவ்வாறு செய்கையில் பெருமாள் வலமிருந்து இடமாக மாறிப் படுத்துக்கொண்டார் என்ற மரபு அங்குண்டு.
தன் பக்தரான (திருமழிசை ஆழ்வார்) சொன்ன படியெல்லாம், கிஞ்சிற்றும் மாறுபடாமல் –
‘கிளம்பு’ என்றால் கிளம்பி,
‘திரும்பு’ என்றால் திரும்பிக்,
‘கிட’ என்றால் கிடந்து
உடன்படு செய்கைகள் பல புரிந்ததால்,
“பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்ட”லான (காஞ்சித்) திருமாலைச் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்றழைப்பதுண்டு.
தமிழ் முன் செல்லப்
பின்சென்ற பெருமாளைத்
தமிழ்கொண்டு குளிர்விப்போம் இன்றும்.
எம் தமிழே முன் என்றும்.
[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ள இவர், பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடாக ‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’ நூலை எழுதியிருக்கிறார்.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.