போக்குவரத்து Vs போலீஸ் போட்டி! - நீயும் கண்டுக்காதே, நானும் கண்டுக்கல! இல்லேன்னா...

கடந்த சில நாள்களாகப் போக்குவரத்துத் துறை - காவல்துறை இடையே நடந்து வரும் மோதல்களை முன்வைத்து...
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

“அனைத்து அரசுப் பேருந்துகளிலும் காவல்துறையினரை டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்; இல்லாவிட்டால் விதிகளை மீறும் போக்குவரத்துத் துறை மீதும் தொழிலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம்.”

வெளிப்படையாக எதுவும் அறிவிக்கப்படாத இந்த நிபந்தனையுடன் கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தோன்றுகிறது.

மே 23 ஆம் தேதி மட்டும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையப் பகுதியில் 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நிறுத்தும் பகுதி அல்லாத இடத்தில் (நோ பார்க்கிங்) நிறுத்தியது, நிறுத்தத்தில் நிறுத்தாதது எனப் பல்வேறு விதிமீறல்களைச் சுட்டிக்காட்டி காவல்துறையினர் அபராதங்களை விதித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதாகத் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோப்புப் படம்.
போக்குவரத்து Vs போலீஸ் தகராறு: ‘சுமுக முடிவு’ பின்னணி என்ன?

இவை எல்லாவற்றுக்கும் தோற்றுவாய், திருநெல்வேலி அருகே நடந்த ஒரு சம்பவம்தான்.

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் நான்குனேரியில் ஏறி திருநெல்வேலிக்குச் சென்ற சீருடை அணிந்த காவலர் ஒருவர், டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

டிக்கெட் எடுக்காவிட்டால் பேருந்து நகராது என நடத்துநரும் நிறுத்திவைத்துவிட்டார். நிறுத்தப்பட்ட இடத்தில் வெளியே நின்றிருந்தவாறு   சமாதானம் பேச வந்த தலைமைக் காவலர் ஒருவர் தானே டிக்கெட் எடுத்துவிடுவதாகக் கூறியும் தொடர்ந்து டிக்கெட் எடுக்க மறுத்து வாதிட்டுக்கொண்டிருப்பார் அந்தக் காவலர்.

கோப்புப் படம்.
இன்று ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் எவ்வாறு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்? நீங்கள் அரசு ஊழியர் என்றால் நானும் அரசு ஊழியர்தான். நான் மட்டும் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்? நானும் வேலைக்குத்தான் செல்கிறேன் என்று அவர் வாதிடுவார்.

இந்த விடியோ வைரலான நிலையில்தான், அதிகாரப்பூர்வமாக அல்லாவிட்டாலும்  போக்குவரத்துத் துறை வெளியிட்டதாக விளக்கமொன்று வாட்ஸ்ஆப் வழி போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்பட அனைவரிடமும் பரவியது. செய்தியானது.

“காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படும். அந்தத் தொகையும் அரசிடமிருந்து போக்குவரத்துத் துறையால் திரும்பப் பெறப்படுகிறது. நான்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.”

இது எந்த அளவு அதிகாரப்பூர்வமானதோ, ஆனால், சம்பந்தப்பட்ட காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இதனிடையேதான், இந்தத் தகராறு அல்லது போக்குவரத்துத் துறை அறிவுறுத்தலைத் தொடர்ந்துதான் திடீரென அரசுப் போக்குவரத்துத் துறையைக் குறிவைத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் காவல்துறையினர் அவசியம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சுற்ற்றிக்கையில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல நேரங்களில் காவலர்களுடன் தகராறுகளைத் தவிர்ப்பதற்காகக் கண்டும் காணாததைப் போல காவலர்களின் டிக்கெட்டில்லா பயணங்களை அனுமதித்து வரும் நடத்துநர்கள், இனி கட்டாயம் டிக்கெட் வாங்க வேண்டும் என்று வலியுறுத்த முடியும். ஏனெனில், இவ்விஷயத்திலான நிலைப்பாட்டைத் தனது ஊழியர்களுக்குப் போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கோப்புப் படம்.
மைசூருவில் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு ரூ.80 லட்சம் பாக்கி! யார் கொடுப்பார்கள்?

‘அப்படியா, காவல்துறையினரையே டிக்கெட் எடுக்கச் சொல்வார்களா, நாங்கள் என்ன அவ்வளவு சாதாரணமாகப் போய்விட்டோமா? சாலைகளில்தானே பேருந்துகளை ஓட்டுகிறீர்கள், நாங்களும் பார்த்துக்கொள்கிறோம்’ என்றெல்லாம் வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமிருந்து என்றோர் அறிவுறுத்தலும் அடுத்த நாளில் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியது.

இதன்படி, போக்குவரத்து கழகப் பேருந்துகளைத் தவறான முறையில் இயக்கினால் வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

“இன்று 22.05.2024 ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த அறிக்கையின்படி போக்குவரத்து பேருந்துகள் அதிகப்படியான புகையை வெளியேற்றுவதும், ஓட்டுநர், நடத்துநர்கள் சரியான சீருடை அணியாமல் பணி செய்வதும், அதிக வேகத்தில் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தை இயக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

எனவே, அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் சமம் என்பதைக் கருத்தில்கொண்டு போக்குவரத்துக் கழக வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்து அதன் வாராந்திர அறிக்கையைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த நிலைப்பாடுகூட மிகச் சரியானதே. இரு துறைகளைச் சேர்ந்தவர்களும் பரஸ்பரம் சட்டப்படி நடந்துகொள்வது எல்லாவகையிலும் வரவேற்கத் தக்கதே.

மாறாக, காவல்துறையின் அறிவுறுத்தலை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம்:  டிக்கெட் எடுக்காமல் பயணங்களை மேற்கொள்ளும் காவல்துறையினரைப் போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், போக்குவரத்துத் துறையினர் – ஓட்டுநர், நடத்துநர்கள் – செய்யும் தவறுகளையும் சாலை விதிமீறல்களையும் காவல்துறையினர் கண்டுகொள்ள மாட்டார்கள். இல்லாவிட்டால் நாங்களும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிடுவோம் என்று மறைமுகமான காவல்துறை எச்சரிக்கை.

கோப்புப் படம்.
‘கூகுள் மேப்’பை நம்பி கால்வாய்க்குள் பாய்ந்த கார்: கேரளத்தில் பரபரப்பு

இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர், இந்த மாதிரியான அபராதம் விதிக்கும் நடைமுறை தொடர்ந்தால் போக்குவரத்துத் துறையின் நிதி மேலாண்மையைப் பாதிக்கும். எனவே, இரு துறைகளும் பேச்சு நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர் (எத்தகைய விதிமீறல்கள் என்றாலும் அரசுப் போக்குவரத்துத் துறையாக இருந்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட பொருள்).  

இவ்விரு துறையினருக்கும் இடையில் இது என்னவிதமான அட்ஜெஸ்ட்மென்ட் அல்லது 'ஜென்டில்மேன்' அக்ரிமென்ட்? இவ்வளவு காலமாக இப்படியே நடந்துகொண்டிருந்தாலும் இனியும் இத்தகைய அட்ஜஸ்ட்மென்ட் தொடருவது நியாயந்தானா?

இன்னும் யார் யாருடன் எல்லாம், யார் யாருக்கெல்லாம் இப்படியாகப்பட்ட ஜென்டில்மேன் அக்ரிமென்ட்கள் இருக்கின்றன? சம்பந்தப்பட்டவர்களுக்குள் சண்டை வரும்போதுதானே இவையெல்லாம் வெளியே தெரிய வருகிறது.

இதே பாணியில் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு துறையினருடன் அட்ஜெஸ்ட்மென்ட் அல்லது ஜென்டில்மேன் (அல்லாத) அக்ரிமென்ட் செய்துகொள்ளத் தொடங்கினால், செய்துகொள்வதாக இருந்தால்...

இவர்களால் ஒன்றுமறியா பொதுமக்கள் பாதிக்கப்படும்போதும் இவர்களுக்குள் இப்படி இணங்கித்தானே செல்வார்கள்? இவர்களிடமிருந்து எத்தகைய நேர்மையை எதிர்பார்க்க முடியும்?

சட்டத்தின் (விதிகளின்) முன் அனைவரும் சமம். காவல்துறையினர் என்றாலும் அரசுப் பேருந்துகளில் மட்டுமல்ல அனைத்துப் பேருந்துகளிலும் டிக்கெட் எடுக்கத்தான் வேண்டும்; அரசுப் போக்குவரத்து என்றாலும் விதிகளை மீறும்போது துறை மீதும் தொழிலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் – அப்படி என்றால் மட்டுமே சட்டத்தின் ஆட்சி என்று பொருள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com