இந்தியாவில் மீண்டும் போலியோவா? உலகெங்கும் ஒழிக்கப்பட்டது எவ்வாறு?

இந்தியாவில் போலியோ பாதிப்பு அறியப்பட்டிருப்பதையொட்டி உலகளாவிய ஒழிப்பு இயக்கம் பற்றிய அலசல்...
Polio drops
சிறு துளி... உலகைக் காக்கும்...AP
Published on
Updated on
4 min read

இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளில் மேகாலயா மாநிலத்தில் மேற்கு கரோ மலை மாவட்டத்திலுள்ள திக்ரிகில்லா என்ற இடத்தில் இளம்பிள்ளை வாதத்தால் (போலியோவால்) ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதென்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால், இது தொற்று பரவல் காரணமாக இந்த பாதிப்பு நேரவில்லை என்றும் குழந்தைக்குப் புகட்டப்பட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்தின் காரணமாகவே நேர்ந்திருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக, 2011, ஜன. 13-ல் மேற்கு வங்கத்தில் ஹௌராவில் ஒரு பாதிப்பு அறிய வந்த பிறகு கிருமி பரவல் காரணமாக நாட்டில் எங்கேயும் யாருக்கும் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, 2014, பிப்ரவரி, 24-ல் ஆம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக இந்தியா அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

(2009 ஆம் ஆண்டில் உலகில் நேரிட்ட போலியா பாதிப்புகளில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியாவில்தான் இருந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான கால அவகாசத்திலேயே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையை இந்தியா எட்டியது குறிப்பிடத் தக்கது).

Polio drops
சொல்லப் போனால்... ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

இதன் பிறகு 2013 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் பீட் மாவட்டத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவான ஒரு 11 மாதக் குழந்தை போலியோ பாதிப்பால் உயிரிழந்தது. இதேபோல, தில்லியிலும் இரண்டரை வயதுக் குழந்தை இறந்ததாகச் செய்திகள் வெளியாகின.

தற்போது மேகாலயாவில் நேரிட்டுள்ள பாதிப்புக்கு சொட்டு மருந்து அல்ல;  தொற்றுப் பரவலே காரணமென உறுதி செய்யப்பட்டால் போலியோ விஷயத்தில் நம் நாட்டில் மிகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படும்.

போலியோவை ஒழிக்க முடியாதா?

உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இளம்பிள்ளைவாதம் என்ற போலியோ ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், உலகின் மிகவும் மோசமான தொற்று நோய்களில் ஒன்றான போலியோ இன்னமும்கூட சில நாடுகளில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

அடுத்துவரும் சில ஆண்டுகளில் போலியோவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பதற்காக உலக சுகாதார நிறுவனம் துணை அமைப்புகளும் தீவிரமாக முயன்றுவருகின்றன.

ஒட்டுமொத்தமாக பூமியிலிருந்தே துடைத்தெறியப்படாவிட்டால், தடுப்பு மருந்துகள் முழுமையாகக் கிடைக்கப் பெறாத குழந்தைகளிடையே எங்கே வேண்டுமானாலும் மீண்டும் போலியோ தொற்றுகள் பரவத் தொடங்கலாம்.

காஸாவில், இந்தப் பிராந்தியத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் தடுப்பு மருந்து செலுத்தப்படாத ஒரு குழந்தைக்கு போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலியோ என்றால் என்ன?

போலியோ (பொதுவாக இளம்பிள்ளைவாதம்) என்பது ஒருவித வைரஸ், பெரும்பாலும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளையே பாதிக்கிறது. போலியோ தொற்றால் பாதிக்கப்படுவோருக்குத் தனியே எவ்வித நோய்க்குறிகளும் தென்படுவதில்லை. ஆனால், இதனால், காய்ச்சல், தலைவலி, வாந்தி, தண்டுவடத்தில் இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

மிகவும் சிக்கலான – மோசமான தருணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டலத்திற்குள் புகக் கூடிய  போலியோ கிருமியானது சில மணி நேரங்களிலேயே பக்க (இளம்பிள்ளை) வாதத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்ட 200 பேரில் ஒருவருக்கு நிரந்தரமாக வாத பாதிப்பு, பெரும்பாலும் கால்கள் முடக்கம், நேரிடுவதாகவும் இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், அவர்களின் சுவாச தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும்பட்சத்தில், சுமார் 10 சதவிகிதம் வரையிலும் உயிரிழப்பு நேரிடுகிறது.

Polio drops
முதன்முறை! கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து இந்தியாவில் அறிமுகம்!!

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வாய் வழியேதான் உடலுக்குள் நுழைகிறது – தொற்றுகிறது. பெரும்பாலும் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் (மலம், சிறுநீர் போன்ற) கழிவுகளுடன் தொடர்பு ஏற்படும்போது  பரவுகிறது. சில நேரங்களில் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுகளின் வழியேயும் பரவுகிறது. இவ்வாறு உடலுக்குள் செல்லும் கிருமியானது சிறுகுடல் பகுதியில் பல்கிப் பெருகி நரம்பு மண்டலத்திற்குள் நுழைகிறது.

 கடந்த காலத்தில் எவ்வளவு மோசமாக இருந்தது?

போலியோவைப் பொருத்தவரை கடந்த காலம் என்பது உள்ளபடியே மிகவும் மோசமான ஒன்று. பற்பல நூற்றாண்டுகளாகவே மக்களிடையே போலியோ இருந்துகொண்டிருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் சித்திரங்களிலேயே – சித்திரவடிவ எழுத்துகளிலேயே – போலியா பாதிப்பு காரணமாக நேரிடுவதைப் போன்ற வலுவிழந்த கால்களுடன் கம்புகளுடன் சிறுவர்கள் நடந்துசெல்லும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

 1950-களில் முதன்முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையிலும் மிகவும் அச்சமூட்டும் நோய்களில் ஒன்றாகத்தான் இருந்தது போலியோ. 1916 ஆம் ஆண்டில் நியூ யார்க் நகரில் போலியோ தொற்று பரவியபோது, 2000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமாக 1952 ஆம் ஆண்டில் போலியோவால் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். போலியோவில் தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் வாழ்நாள் முழுவதும் – பக்க வாதம், உருக்குலைந்த, செயலிழந்த கால்களுடன் - தொடர் பாதிப்புகளுடன் வாழ்ந்து கழித்தனர். சுவாச தசைகள் பாதிக்கப்பட்டோரின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.

போலியோ ஒழிப்பு இயக்கம் எப்போது தொடங்கியது?

 உலகில் பெரியம்மை ஒழிக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வெற்றி தந்த நம்பிக்கையில், 1988 ஆம் ஆண்டில் உலகிலிருந்து போலியோவை ஒழிப்பதென்ற தீர்மானத்தை உலக சுகாதார நிறுவனம் நிறைவேற்றியது (இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பேர் போலியோவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்).

 உள்ளபடியே, 2000 ஆம் ஆண்டில் உலகிலிருந்து போலியோவை அறவே அகற்றிவிட வேண்டும் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கு. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள், யுனிசெஃப், ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகளின் உதவியுடன் – வாய்வழி புகட்டும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து உற்பத்தியை அதிகரித்ததுடன் உலகம் முழுவதும் பரவலாக  போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்களை  உலக சுகாதார நிறுவனம் நடத்தியது. இந்தத் தொடர் முயற்சியின் காரணமாக உலகில் 99 சதவிகிதத்துக்கும் போலியோ பாதிப்புகள் குறைந்தன.

 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டும்தான் போலியோ தொற்றுப் பரவல் ஒருபோதும் தடுக்கப்படவேயில்லை. இன்னமும் தொடருகிறது. இந்த நாடுகள் மட்டுமின்றி, பெரும்பாலும், ஆப்ரிக்க கண்டத்திலுள்ள 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் திடீர் திடீரென சில நேரங்களில் போலியோ நோய்த் தொற்றுகள் பரவியிருக்கின்றன. இப்போது 2026-ல் எப்படியும் போலியோவை உலகிலிருந்த ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு உலக சுகாதார நிறுவனமும் சார்பு அமைப்புகளும் இணைந்து பணியாற்றுகின்றன.

ஏன் இவ்வளவு காலதாமதம்?

ஏனெனில், இது மிக மிகக் கடினமான ஒன்று. போலியோ பரவலைத் தடுப்பது என்றால் – போர்கள் நடந்துகொண்டிருக்கும் நாடுகள், உருப்படியான எத்தகைய சுகாதார ஏற்பாடுகளும் கட்டமைப்புகளும் இல்லாத / வறிய நாடுகள் உள்பட -  ஒவ்வொரு பகுதியிலும் மக்கள்தொகையில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கும் தடுப்பு மருந்து புகட்டியிருக்க / செலுத்தியிருக்க வேண்டும் என்பதுதான்.

வாய்வழி புகட்டும் போலியோ தடுப்பு மருந்துதான் விலை குறைவானது, எல்லாருக்கும் எளிதில் புகட்டக் கூடியது, பயன்படுத்தத் தக்கது. ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் செலுத்தக் கூடியதும்கூட.

ஆனால், இதிலுள்ள சிக்கல், இந்தச் சொட்டு மருந்தில் மிகவும் பலவீனமான, வலுவிழந்த உயிருள்ள போலியோ கிருமிகளும் இருக்கின்றன. மிகவும் அரிதான தருணங்களில் - ஏற்கெனவே தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு -

இதன் மூலம் போலியோ நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கிறது. தற்போது மேகாலயாவில் நேர்ந்திருப்பதும் இந்த வகையிலானேது என்றே அரசு வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.

இன்னமும் அரிதிலும் அரிதான தருணத்தில் உயிருடனிருக்கும் இந்த வைரஸ், வேறு வகையில் உருமாற்றம் கொண்டு புதுவிதமான, உலகம் முழுவதும் மீண்டும் முதலிலிருந்து தொடங்க நேரிடும் வகையில் - கரோனா புதுப்புது உருவமெடுத்தாற் போல - புது போலியோ தொற்றாக மாறிவிடக் கூடிய பேராபத்தும் இருக்கிறது.

பணக்கார மேலை நாடுகளில் பெரும்பாலானவற்றில் போலியோ தடுப்பு மருந்து ஊசி மூலமே உடலில் செலுத்தப்படுகிறது. ஆனால், இவற்றுக்கான செலவு அதிகமென்பதால்தான் வளரும் நாடுகளில் இது தவிர்க்கப்பட்டுப் பெருமளவில் சொட்டு மருந்தே பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

 இந்தியாவிலும் ஊசி மூலம் தடுப்பு மருந்து என்பதைப் பரவலாக்கலாம். இதன் மூலம் வாய்வழி 10 முறை புகட்டும் தடுப்பு மருந்தைவிடவும் திறமான  போலியோ நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க முடியும். திறமான ஊசி மூலம் தடுப்பு மருந்து கிடைக்கும்போது இன்னமும் எதற்காக வாய்வழி புகட்டும் மருந்தையே தொடர வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Polio drops
பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 6,900 சிபிஐ வழக்குகள்!

தடுப்பு இயக்கம் மேற்கொண்ட நாடுகளில், பகுதிகளில் பெருமளவில் போலியோ பரவல் என்பது முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதென்றே கூறலாம். தற்போது பெரும்பாலும் தடுப்பு சொட்டு மருந்து காரணமாக நேரிடக் கூடிய போலியோ பாதிப்புகள்தான் நிகழ்கின்றன.

போலியோ ஒழிப்பு இயக்கத்தை இன்னமும்கூட சிறப்பாகச் செயல்படுத்த முடியும். ஆனால், உலகம் முழுவதுமே அரசு அமைப்புகளில் – சுகாதார கட்டமைப்புகளில் இன்னமும் அகற்றப்பட வேண்டிய பல்வேறு பலவீனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவான மக்கள் வசிக்கிற – நீண்ட காலம் இந்த வைரஸ் உயிர்த்திருக்கக் கூடிய பகுதிகளில் வாய்வழி புகட்டப்படும் தடுப்பு மருந்து காரணமாக நோய் பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் உலகில் இதுவரை 72 போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 30 பாதிப்புகள் நைஜீரியாவில் நேரிட்டுள்ளன. 2023-ல் சொட்டு மருந்து காரணமாக 527 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. இவற்றில் 224 பேர், அதாவது 43 சதவிகிதம், காங்கோவில் நேரிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ முந்நூறு கோடி குழந்தைகளுக்கு ஆயிரம் கோடி ‘டோஸ்கள்’ மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்தைப் புகட்டுவதன் மூலம் மட்டுமே நோயை உலகிலிருந்தே முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்கின்றன மருத்துவ வட்டாரங்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் மேகாலயாவில் போலியோவால்  ஒரு குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது எளிதில் ஒதுக்கிவிட முடியாத ஒன்றாகவே மருத்துவ வட்டாரங்களில் கவனிக்கப் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.