பழம்பெருமைமிகு இந்தியா... முந்தைப் பெருமிதங்களும் இன்றைய பொருளாதாரமும்!

பெருமிதம் கொள்ள வேண்டிய இந்தியாவின் பழங்காலச் சாதனைகள் பற்றியும் இன்றைய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தும்... தொடர்...
Ancient india
நாளந்தா பல்கலைக்கழகம்UNESCO
Published on
Updated on
4 min read

விஞ்ஞானம், மருத்துவம் மட்டுமின்றி அனைத்துத் துறைகள் மற்றும் கலைகளிலும் இந்தியா சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் பல இருக்கின்றன. ஆரம்ப காலத்திலும் இந்தியா, பொருளாதாரத்தில் முதன்மையானதாக இருந்திருக்கிறது.

பண்டைய காலத்தில் உலகளவில் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகளின் மையமாகத் திகழ்ந்திருக்கிறது இந்தியா. இந்தியாவின் புகழ்பெற்ற பௌத்த பல்கலைக்கழகமான நாளந்தா (பிகார்), தொல்லியல் சார்ந்த தக்ஷசீலம் (தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது), சாந்த பீடம் (கர்நாடகம்) போன்ற மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கின்றன. இன்றைக்கு ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள்போல அப்போது இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்களைக் கல்வியறிவு பெற இந்தியாவுக்கு ஈர்த்தன.

மேலும் ஆர்யபட்டர், பாஸ்கராச்சார்யா, பிரம்மகுப்தர், காளிதாசர் மற்றும் இன்னும் பல மேதைகளை இந்தியா, இந்த உலகத்திற்கு பரிசாக அளித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் கல்விக்காக இந்தியாவில் இருந்து 7.65 லட்சம் மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதேநேரத்தில் 40,431 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் படிக்கின்றனர். உலகளவில் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் 19%. இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்விக்காக செலவழிக்கும் தொகை 60 பில்லியன் டாலர். (5.1 லட்சம் கோடி ரூபாய்)

1947ல் பிரிட்டிஷ் வெளியேற்றத்தின்போது இந்தியா, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தது. தற்போது தாழ்ந்த நிலைக்குச் சென்றது ஏன்? ஆனால் ஒரு நல்ல விஷயம் பொருளாதாரத்தில் இந்தியா சற்றும் பின்வாங்கவில்லை. இந்தியா தற்போது உலகின் 5 ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 297 லட்சம் கோடி ரூபாய்).

ஜப்பானைக் கீழிறக்கி உலகின் நான்காவது பொருளாதாரமாக இந்தியா உருவாகிவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 2027ல் மூன்றாவது பொருளாதாரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி 2075 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி 52.5 டிரில்லியன் டாலரை (4,460 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

இந்தியா தற்போது உலகளவில் தலைமை வகிக்கும் நிலையில் இருக்கிறது. உலகமே இந்தியாவின் தலைமையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

பண்டைய காலத்தில் இந்தியா கட்டடக் கலை, வானியல், கணிதம் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

உலகின் பொறியியல் அல்லது கட்டடக் கலையின் தலைமையமாக இந்தியா இருந்துள்ளதற்கான சான்றுகள் இன்றும் பல இருக்கின்றன. இந்தியாவின் கட்டடக் கலை சாதனைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக அல்லது அதனை மிஞ்சுவதாகவே இருந்துள்ளன.

பொறியாளர்களின் துல்லிய தன்மை, வடிவமைப்பு, அவர்களது அறிவுக்கூர்மையை பிரதிபலிக்கும் விதமாக பல கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் இன்றும் நம்முடைய கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிக நகர்ப்புறக் கட்டடங்கள், எல்லோரா குகைக் கோயில்கள், தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

அறிவியலிலும் இந்திய விஞ்ஞானிகள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதுசார்ந்த கோட்பாடுகளுமே சிறந்த சான்றுகள்.

புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த ஐசக் நியூட்டன் முதல் ஆர்யபட்டர், பிரம்மகுப்தர், வராகமிகிரர் என பலரும் அணுக்கள், அணுக் கோட்பாடுகள், வெப்பம், சூரியன் மற்றும் பூமி சுழற்சிகள் பற்றி கண்டறிந்து தங்களது நூல்களில் தொகுத்திருக்கின்றனர். இன்றைய பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியாவின் ஆரம்ப கால விஞ்ஞானிகளே அடித்தளமிட்டுள்ளனர் என்று சொல்லலாம்.

அறிவியலையும் வானியலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியே அறிவியலாளர்கள் பலவேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். வானியல் கண்டுபிடிப்புகள் பல, பண்டைய இந்தியர்களின் ஆன்மிகத்தையும் வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்பட பல கோயில்கள் சூரியக் கதிர்கள் ஊடுருவும் அல்லது கதிர்கள் கோயிலுக்குள் விழும் வகையிலும் நில அதிர்வைத் தாங்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது இன்றும் வியப்பைத் தருகிறது.

சூரியக் கடிகாரங்கள், நீர்க் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நேரத்தைக் கணக்கிடுவது, சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் நிலை, பூமி சுற்றிவர ஆகும் காலம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவை கண்டறியப்பட்டுள்ளன.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்தில் பூஜ்யம் கண்டறியப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், கிபி 595ல் செப்புத்தகடுகளில் பூஜ்யம் மற்றும் தசம முறையில் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவே இந்தியாவில் கணிதப் புரட்சிக்கும் அடித்தளமாக அமைந்தது.

கிபி 5 ஆம் நூற்றாண்டிலே கூட்டல், கழித்தல் ஆகிய எண்கணித செயல்பாடுகள், பூஜ்யம், எதிர்மறை எண்கள் என கணிதத்திற்கான அடிப்படைக் கொள்கைகளை வகுத்தவர் ஆர்யபட்டர். கிபி 7 ஆம் நூற்றாண்டில் வந்த பிரம்மகுப்தர் இதனை மேலும் செம்மைப்படுத்தினார். அடுத்துவந்த பாஸ்கராச்சார்யா, ஆச்சார்யா பிங்கலா ஆகியோர் தசம எண்கள், கணினிக்கான பைனரி எண்கள் என கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்தி கணிதத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவத்திலும் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்துள்ளது. 4,300 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான மண்டை ஓடு ஒன்று கிடைத்துள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் இரு முக்கிய மருத்துவர்களாக சரகர், சுஷ்ருதர் அறியப்படுகின்றனர். இவர்கள்தான் நவீன கருவிகளைக் கொண்ட அறுவைச் சிகிச்சை முறையைக் கண்டறிந்து இன்றைய மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளனர்.

அதேபோல மன அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான பிரச்னைகள் இன்று வந்ததல்ல. மாறாக ஆதி காலத்தில் இருந்தே உள்ளது. பழங்கால இந்தியர்கள், தியானம், யோகா, நினைவாற்றல் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி மூலமாக உளவியல் ரீதியான பிரச்னைகளைக் கையாண்டுள்ளனர்.

இதன் மூலமாகவே மன அமைதியையும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் பல முனிவர்கள் பெற்றுள்ளனர். மன அழுத்தத்தைக் குறைக்க இசையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர் நம் மூதாதையர்கள்.

2014 முதல்தான் உலகில் ஜூன் 21 யோகா நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல நூற்றங்களுக்கு முன்பு கோயில்களில் தியான மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டு யோகா பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஏன், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் யோகா மூலமாக பயன்பெற்று அதனை வணிக ரீதியாகவும் பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆன்மிகம் மற்றும் தத்துவம் சார்ந்த யோகா இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எழுத்துகள், மொழி எப்படி தோன்றியது என்பதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. கிமு 300 ஆம் ஆண்டில் தோன்றிய பிராமி, கரோஷ்டி எழுத்துகள்தான் தேவநாகரி, இன்றைய தமிழ், பெங்காலி மொழிகளுக்கான ஆரம்ப வடிவம்.

ஆரம்பத்தில் சமஸ்கிருத மொழியிலேயே பெரும்பாலான நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இன்றும் பல மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அறிவியல், மருத்துவம் மட்டுமின்றி பண்டைய சமூகம் கலைகளிலும் சிறந்து விளங்கியுள்ளது. நாடகம், இசை, நடனத்துக்கான கொள்கைகளை வகுத்த பரத முனிவரின் காலம் கிமு 2 ஆம் நூற்றாண்டு. இந்த கலைகள் அனைத்தும் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடையதாகவே இருந்திருக்கின்றன. அதில் தமிழ்நாட்டில் தோன்றிய பரதநாட்டியம் குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் இந்தியாவில் தோன்றிய கலைகள் அண்டை நாடுகளுக்கும் பரவியதற்கான சான்றுகள் இருக்கின்றன.

வளர்ச்சிக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?

பொருளாதாரத்தில் மட்டுமின்றி இந்தியாவின் நாகரிகம், கலாசாரம் ஆகியற்றைப் பாதுகாப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியா அதன் உண்மைத்தன்மையை இழக்காததும்தான். பாரம்பரியத்துடனான வளர்ச்சியை நாம் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். நகர்ப்புறத் திட்டமிடலில் பண்டைய கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது இந்தியா நிலையான வளர்ச்சி பெறும்.

நீரைச் சேமிக்க மழைநீர் சேகரிப்பு முறைகள், சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தைப் பெறுவது என பல முறைகள் உள்ளன . பண்டைய கால முறைகளைப் பயன்படுத்துவது வளர்ச்சி மட்டுமின்றி சிறந்த சுகாதாரத்தை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத களிமண், மரத்திலான பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் தொழில்கள், மாடித் தோட்டம், இயற்கை விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பசுமையான இடங்களை உருவாக்குவது ஆகியவை இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை 175 -200 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும். கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆயுர்வேதம், யோகா ஆகியவை உடல், மன ரீதியான பிரச்னைகளைச் சரிசெய்து செலவுமிக்க அறுவைச் சிகிச்சைகளில் இருந்து காப்பாற்றுகிறது. ஆயுர்வேதம் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கிறது. ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்த வாழ்க்கை முறை பெரிதும் உதவுகின்றன. ஆயுர்வேதத்தை அனைத்து இந்தியர்களும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் சுகாதாரத்தில் இந்தியாவின் செலவினம் குறையும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 1.3 ட்ரில்லியன் ரூபாய் செலவிடுகிறது.

மக்கள்தொகையில் வெறும் 10% மட்டும் ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொண்டாலே பல நோய்களைக் குணப்படுத்துவதன் மூலம் இந்தியா 350 பில்லியன் ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.

ஆயுர்வேத மருத்துவம் 2022 ஆம் ஆண்டில் 1.2 - 1.8 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. யோகா சான்றிதழ் திட்டங்களை இந்தியா மேற்கொள்வதன் மூலமாக இந்தியா உலகளவில் நிலைத்து நிற்கும். இதன் மூலமாக வருவாயும் ஈட்டலாம். பண்டைய கால நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக இந்தியா பல்வேறு துறைகளில் மேலும் சிறந்து விளங்க முடியும்.

ஒவ்வொரு துறையிலும் இந்தியா சிறந்து விளங்கியது எப்படி? அதற்கு காரணமாக விளங்கியவர்கள் யார்? என்பதைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்...

(தொடரும்)

Summary

Its about Ancient History of India, India excelled in all fields and arts, not just science and medicine. Even in its early days India was leading in economy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com