FOLLOW US

ON GOOGLE DISCOVER

திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

உலகச் செம்மொழிகளும் இந்தியாவில் செம்மொழி அரசியலும்!

உலகளவில் செம்மொழி அங்கீகாரம் மற்றும் இந்தியாவில் செம்மொழி அங்கீகாரத்தில் உள்ள அரசியலும் பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :7 வினாடிகள் முன்பு

"உலகின் செம்மொழிகள்" (Classical Languages of the World) என சில குறிப்பிட்ட மொழிகள் மட்டுமே தலைசிறந்த மொழியியலாளர்களாலும் வரலாற்று அறிஞர்களாலும் மதித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய உயர் மதிப்பீடு பெற்றுள்ள மொழிகளின் பட்டியலில் கிரேக்கம்; லத்தீன்; சீனம்; ஹெப்ரூ; அரபு; பெர்ஷியன்; தமிழ்; சமஸ்கிருதம்; பழங்கால எகிப்தியம் (Ancient Egyptian) மற்றும் சுமேரியன் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. பொதுவாக, செம்மொழித் தகுதியானது அம்மொழியின் மிகுபழமை, விரிவான, தனித்துவமான இலக்கியத் தொடர்வளம், மற்ற மொழிகளில் இருந்து கடன் பெற்றிருக்காத  தனித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

உலகளாவிய இத்தகைய மதிப்பீட்டின்படி ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய’, மூத்த மொழியான தமிழ் இடம்பெற்றிருப்பது இயற்கையானதே. கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற மேல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக, “தமிழ் மொழி, இலக்கியங்கள், சமஸ்கிருதம் போன்ற எம்மொழியையும் சாராமல், தனித்து உருவான மிகுபழமையான (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு கால) தொல்காப்பியம், சங்க கால இலக்கியங்கள் உள்ளிட்ட இலக்கண, இலக்கியங்களைக் கொண்டிருப்பதால் உலகச் செம்மொழிப் பட்டியலில் தமிழுக்கு முதன்மை இடம் இயல்பாகவே உரித்தாகும்” என நிறுவி வந்துள்ளது குறிப்பிட உரியதாகும்.

உலகளாவிய அளவில், ஒரு மொழியைச் 'செம்மொழி' என அறிவிக்கப் பொதுவான - ஐக்கிய நாடுகள் அவை (UN) அல்லது யுனெஸ்கோ (UNESCO) போன்ற - எந்தவொரு அதிகாரப்பூர்வ சர்வதேச அமைப்பும் இல்லை என்பது அறிய உரியது. நூற்றாண்டுகளாக மதிப்புறு நிலைபெற்றுள்ள பல்கலைக்கழகங்கள், சிறந்த வரலாற்று ஆய்வாளர் குழு மற்றும் தேர்ந்த மொழியியலாளர்களிடையே விளையும் "ஒருமித்த கருத்தேற்பு" (Academic consensus) அடிப்படையில்தான் செம்மொழி அங்கீகாரம் கிடைக்கிறது.

செம்மொழி உலக அரசியல் 

உலக அளவிலுள்ள அரசியல், கலாசார, புவியியல் வேறுபாடுகளாலும் காரணங்களாலும் வேறுபட்ட செம்மொழிப் பட்டியல்கள் நிலவுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கத்தியப் பார்வையின்படி (Western Perspective) ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக கிரேக்கம், லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளை மட்டுமே செம்மொழிகளாக மதித்து வந்தனர். வெகுபின்னரே, மத, கலாசார அடிப்படைகளில் பாரம்பரிய அரபு (Classical Arabic) மற்றும் எபிரேயம் (Hebrew) ஆகியவற்றையும் செம்மொழிகளாக ஏற்றுக்கொண்டனர்.

சீனா, ஜப்பான், கொரியா, வியத்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புவியியல் பகுதியின் – கிழக்காசிய (East Asian Sphere) - பார்வையில்  பாரம்பரியச் சீனம் (Classical Chinese) மட்டுமே முதன்மைச் செம்மொழியாக ஆதிக்கம் செலுத்துகிறது.

செம்மொழி அரசியல் இந்தியாவில்

இந்த இரண்டு பார்வைகளிலிருந்து மாறுபட்டு, இந்தியாவில் மட்டுமே (இந்திய மொழிகளுக்குள்) செம்மொழித் தகுதி மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது. இந்தியாவைப் போல, வேறு நாடுகள் எதுவும் தங்கள் மொழிகளைச் செம்மொழியாக அறிவித்துக்கொள்வதில்லை. செம்மொழித் தகுதி வழங்கப்படும் நடைமுறை செயல்படுத்தப்படுவதற்கெனச் 'சாகித்ய அகாதெமி' (Sahitya Academy) அமைப்பின் கீழ் ஒரு மொழி வல்லுநர் குழு (Linguistic Experts' Committee- LEC) அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியைச் செம்மொழியாக அறிவிக்க மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும்போது, இந்தக் குழு (LEC) அதனை ஆய்வு செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

இதன்படி, முதலாவதாக - இந்திய அரசு, உள்துறை அமைச்சகம், எண். IV- 14017/7/2004-NI-II, 12 அக்டோபர், 2004 நாளிட்டு வெளியிட்ட அறிவிப்பில்:

1. இந்திய அரசால் செம்மொழிகள் என ஒரு புதிய மொழிப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. ஒரு மொழி செம்மொழியாக வகைப்படுத்தப்படுவதற்கு அதன் தகுதியைத் தீர்மானிக்க, பின்வரும் அளவுகோல்கள் பயன்படுத்தப்படும்:-

i. 1000 ஆண்டுகளுக்கும் மேலான அதன் தொடக்க கால நூல்கள் / பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் உயர் தொன்மை.

ii. தலைமுறை தலைமுறையாகப் பேசுபவர்களால் மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்படும் பண்டைய இலக்கியங்கள் / நூல்களின் தொகுப்பு இருப்பது.

iii. தனித்துவமான இலக்கிய மரபு - வேறெந்த மொழிச் சமூகத்திடமிருந்தும் கடன் பெறப்படாத - வளமுடையதாகவும் இருக்க வேண்டும்.

3. மேலும், தமிழ் மொழியானது மேலே பத்தி 2-இல் பட்டியலிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்வதாலும், இனிமேல் அது ஒரு செம்மொழியாக வகைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட முடிவுகளைப் பின்தொடர்ந்து செயல்படுத்த, கலாசார அமைச்சகம் அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு மொழிக்கு ‘செம்மொழி’ (Classical Language) அந்தஸ்து வழங்குவது என்பது, தொடக்கத்தில் மொழியியல் மற்றும் வரலாற்று அடிப்படையிலான ஓர் உயரிய அங்கீகாரமாகவே தொடங்கியது. ஆனால், காலப்போக்கில் அது அரசியல் கூட்டணிக் கணக்குகளையும் தேர்தல் வியூகங்களையும், பிராந்திய சமரசங்களையும் முக்கிய அடிப்படையாகக் கொண்ட சமய, சாதுரிய அரசியல் கருவியாக உருமாறியுள்ளது.

தமிழைத் தொடர்ந்து (12 அக்டோபர், 2004) சமஸ்கிருதம் (25 நவம்பர், 2005); தெலுங்கு, கன்னடம் (31 அக்டோபர், 2008); மலையாளம் (8 ஆகஸ்ட், 2013 ); ஒடியா (11 மார்ச், 2014 ) ஆகிய 6 மொழிகள் செம்மொழிப் பட்டியலில் சேர்ந்திருந்த நிலையில், 4 அக்டோபர் 2024 இல் மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய 5 மொழிகள் ஒரே நேர்வில் மொத்தமாகச் சேர்க்கப்பட்டு, தற்போது இந்தியாவில் 11 மொழிகள் அரசால் செம்மொழிகள் என அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளன. (இவ்வகையில் இந்தியா உலக முதலிடம்!).

'தன்னேரிலாத் தமிழ்' போன்ற மிகு தொன்மையும் சிதையாத் தொடர்ச்சியும் கொண்ட மொழியுடன், காலத்தால் பற்பல நூற்றாண்டுகள் பிந்தைய மொழிகளும் ஒரே தராசில் வைக்கப்படுவது மொழியியல் ஆய்வாளர்கள் மத்தியில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இவ்விஷயம் தொடர்பாக நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது. (சென்னை உயர்நீதிமன்றம், ரிட்மனு எண்கள்:  27405/2014, 28334/2008, 18810 of 2008, 5813 & 5814 of 2015, ஆர்.காந்தி, எதிர் இந்திய அரசு, உள்துறை, கலாசார அமைச்சகங்களின் செயலாளர்கள். தீர்ப்பு: 8-8-2016)

செம்மொழி அளவுகோல்களும் நெகிழ்வுகளும் (Criteria and Dilution)

ஒவ்வொரு மொழியும் செம்மொழித் தகுதியைப் பெற பின்னணியில் இருந்த அரசியல் சூழல்கள், புறக்காரணங்கள் மற்றும் மொழி வல்லுநர் குழு (Linguistic Experts Committee) தமது அளவுகோல்களில் செய்த தளர்வுகள் குறித்த விவரங்கள் அறியக் கிடைக்கின்றன. 2004 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டபோது, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அளவுகோல்கள் மிகவும் கறாராகவே இருந்ததை முன்னர் அறிந்து வந்துள்ளோம். தமிழ் அப்போதிருந்த மூன்று வரையறைகளையும் இயல்பாக, எளிதாக எட்டியது.

ஆனால், 2005-ல் சமஸ்கிருதத்திற்கு இத்தகுதி வழங்கப்பட்டபோது, தொன்மைக்கான காலம் "1500 முதல் 2000 ஆண்டுகள்" எனத் திருத்தப்பட்டது. இதன் பின்னர் செம்மொழிப் பட்டியலில் இடம் பிடித்த பல மொழிகளுக்கும் இந்த விதியை ஈடுசெய்ய, அந்த மொழிகளின் ஆதி வடிவங்கள், கடன் பெற்ற மரபுகள் அல்லது கல்வெட்டுகளைக் காட்டி விதிகளில், அணுகுமுறைகளில் மிகப் பெரிய அளவில் தளர்வுகள் செய்யப்பட்டன.

செம்மொழி அறிவிப்புகளின் பின்னணியில் அரசியல் சூழல்களும் புறக் காரணங்களும்

நம் நாட்டில் 'மொழி' என்பது ஒரு சக்திவாய்ந்த அரசியல் ஆயுதம். இலக்கியத் தகுதிகளைத் தாண்டி, அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் எவ்வாறு செம்மொழிப் பட்டியலைத் தீர்மானித்தன என்பதைக் காலவரிசைப்படி காணலாம்:

தமிழ்: விதிகளின் தொடக்கமும் கூட்டணி அழுத்தமும்

(அக்டோபர் 12, 2004)

2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசில், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) அங்கம் வகித்தது. தேசிய அளவில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கத் திமுகவின் ஆதரவு அக்கட்சிக்கு மிக அவசியமாக இருந்தது. மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் இடைவிடாத அரசியல் அழுத்தம் காரணமாக, இந்தியாவிலேயே முதன்முறையாகச் 'செம்மொழி' என்றொரு தனிப் பகுப்பு அரசாங்கத்தால் (2004) உருவாக்கப்பட்டு முதல் செம்மொழியாகத் தமிழ் அதிகாரப்பூர்வ (அக்டோபர் 12, 2004) அறிவிப்பைப் பெற்றது.

சமஸ்கிருதம் சமநிலைச் சமரசம்

திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழுக்குத் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டவுடனேயே, இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தில் இந்தியாவின் தொன்மையான மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருதத்திற்கும் அத்தகுதியை வழங்க வேண்டும் என்ற அழுத்தம் வலதுசாரி மற்றும் வட இந்தியத் தலைவர்களிடமிருந்து வேகமாக எழுந்தது. அச்சூழலில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தங்களை ஒரு குறிப்பிட்ட பிராந்திய மொழிக்கு (தமிழ்) மட்டும் சாதகமானவர்களாகக் காட்டிக்கொள்ளத் தயங்கியது. சமஸ்கிருதத்திற்குத் தகுதி வழங்கும் பொருட்டு 2005-ல் தொன்மைக்கான அளவுகோல் 1500 - 2000 ஆண்டுகள் எனத் திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான் சமஸ்கிருதம் இரண்டாவது செம்மொழியாக அதிகாரப்பூர்வமாக (நவம்பர் 25, 2005) அறிவிக்கப்பட்டது.

கன்னடம், தெலுங்கு: பிராந்திய உணர்வும் தேர்தல் கணக்கும்

அண்டை மாநிலத்தில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்ததும், கர்நாடகம், ஆந்திரத்தில் மொழி அரசியல் தீவிரம் பெற்றது. ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி (TDP) தெலுங்கிற்குச் செம்மொழி தகுதிகோரி கடும் அழுத்தம் கொடுத்தது. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியும் (BJP) காங்கிரஸும் சேர்ந்தே கன்னட மொழிக்குத் தகுதி பெற முனைப்பாக நின்றன.

கன்னடம் (450 CE), தெலுங்கு (575 CE) ஆகிய மொழிகள் 1500 ஆண்டுகள் தொன்மை என்ற விதியை எட்டுவதில் சிக்கலிருந்தன.  எனினும், தென் மாநிலங்களின் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இரண்டிற்கும் ஒரே நாளில் (அக்டோபர் 31, 2008) செம்மொழித் தகுதியை வழங்கி பிராந்திய அரசியலில் சமன் செய்யும் சாதுரியங்காட்டியது.

மலையாளம், ஒடியா: தேர்தலுக்கு முந்தைய கணக்குகள் 2013 & 2014

ஒடியாவைப் பொருத்தவரை பிஜு ஜனதா தளம் (BJD) கொடுத்த அரசியல் நெருக்கடியும், காங்கிரஸ் அதனை எதிர்கொள்ள செய்த உத்தியுமே முக்கிய காரணம்.

மலையாளத்தின் மிகப்பழமையான பதிவு 849 CE (சுமார் 1100 ஆண்டுகள் மட்டுமே பழமையானது). நிபுணர் குழுவின் கறாரான விதிகள் இங்கே வெகுவாகத் தளர்த்தப்பட்டன.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்னதாக, கேரள மற்றும் ஒடிசா மாநிலங்களில் அரசியல் லாபம் தேடும் நோக்கில் அம்மொழிகளுக்கு செம்மொழி அறிவிப்புகள் வெளியாகின. மலையாளம் (ஆகஸ்ட் 8, 2013) மற்றும் ஒடியாவுக்கு (மார்ச் 11, 2014) வழங்கப்பட்ட செம்மொழித் தகுதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் காந்தி வழக்குத் தொடர்ந்து விதித்தளர்வுகளை விரிவாகப் பட்டியலிட்டு வெளிச்சத்தில் வைத்தார் (நீதிமன்றம், அந்த அறிவிப்புகள் அரசின் கொள்கை முடிவுகள் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது).

மராத்தி, வங்காளி, அசாமி, பாலி, பிராகிருதம்: மாபெரும் தேர்தல் கணக்குகள்

ஒரே நேரத்தில், அக்டோபர் 3, 2024 -இல்5 மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டதன் பின்னணியில் மிகத் தெளிவான தேர்தல் கணக்குகள் இருந்தன என்பதை மறுக்க இயலாது. மகாராஷ்டிர சட்டமன்ற (2024) தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்தான் மராத்திக்கு செம்மொழி அறிவிப்பு வெளியானது. அங்கு சிவசேனை, பாஜக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளுமே மராத்தி மொழிக்குத் செம்மொழித் தகுதி கோரிப் போராடி வந்தன. மேற்கு வங்கத்தில் (அப்போதைய) ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்குப் போட்டியாகப் பாஜக தன்னை நிலைநிறுத்தவும், அசாமில் தனது பிடியை வலுப்படுத்தவும் வங்காளி மற்றும் அசாமி மொழிகள் செம்மொழிகள் ஆக்கப்பட்டன. பௌத்த, சமண சமூகங்களின் ஆதரவைப் பெறவும், இந்தியாவின் பண்டைய கலாசாரத்தை உலகப் பரப்பில் முன்னிறுத்த முயலும் முனைப்பாகவும் இறந்துபோன மொழிகளான (Dead Languages) பாலி, பிராகிருதம் இரண்டும் செம்மொழிப் பட்டியலில் இணைக்கப்பட்டன.

மொழி வல்லுநர் குழுவின் நிலைப்பாடும் தளர்வுகளும்

கலாசார அமைச்சக, சாகித்ய அகாதெமியின் கீழ் செயல்படும் மொழி வல்லுநர் குழுவே (LEC) செம்மொழிக்கான தகுதிகளை நிர்ணயிக்கிறது. ஆனால், அரசியல் நிலைப்பாடுகள் வரும்போது இந்தக் குழுவின் விதிகள் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளன:

  1. கால வரம்பில் நெகிழ்வு: 1500-2000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தபோது, மலையாளம் (849 கி.பி.), ஒடியா போன்ற மொழிகளின் ஆரம்ப கால எழுத்துச் சான்றுகள் அந்த எல்லையை எட்டாத போதும், அவற்றின் ஆதி வடிவங்கள் எனச் சில தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டுத் தகுதி வழங்கப்பட்டது. மராத்தி மொழிக்கு 'மகாராஷ்ட்ரி பிராகிருதம்' என்பதிலிருந்து வந்த தொடர்ச்சி எனக் காரணம் காட்டப்பட்டது.

  2. தொடர்ச்சியற்ற தன்மை (Discontinuity): ஒரு மொழி அதன் ஆதி வடிவத்திலிருந்து தற்போதைய வடிவத்திற்கு வந்ததில் பெரிய முறிவுகளோ அல்லது பிற மொழிகளின் கலப்போ இருந்தாலும், அதனை செம்மொழியாக ஏற்கலாம் என சமஸ்கிருத்த்தில் தொடங்கி 2005-க்குப் பிந்தைய விதிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டன.

அரசியல் கட்சிகள் செம்மொழித் தகுதிக்காகப் போராடுவதற்குப் பின்னால் வெறும் "கௌரவம்" மட்டுமில்லை; பெருமளவிலான பொருளாதார, நிறுவன, நிதி நன்மைகளும் அடங்கியுள்ளன.

  • பொருளாதார மானியங்கள்: செம்மொழிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் பல நூறு கோடிகளை ஒதுக்குகிறது.

  • விருதுகளும் கௌரவமும்: சம்பந்தப்பட்ட மொழிகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு மிகப் பெரிய சர்வதேச விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

  • பல்கலைக்கழக இருக்கைகள்: மத்தியப் பல்கலைக்கழகங்களில் செம்மொழிகளுக்கான சிறப்பு இருக்கைகள் (Chairs of Excellence) உருவாக்கப்படுகின்றன.

  • அடையாள அரசியல்: ஒரு மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதன் மூலம், அந்த மொழி பேசும் மாநில மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகத் திருப்ப முடியும் எனக் கணக்குகள் போடப்படுகின்றன.

செம்மொழித் தகுதி என்பது அதன் தொடக்கப் புள்ளியில் மொழிகளின் வரலாற்றுத் தொன்மையையும் சுயமாக உருவான இலக்கியச் செழுமையையும் போற்றும் நோக்கத்தில்தான் உருக்கொண்டது. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள், மாநிலக் கட்சிகளின் அழுத்தங்கள் மற்றும் கூட்டணிக் கணக்குகள் ஆகியவையே ஒரு மொழியின் செம்மொழித் தகுதியைத் தீர்மானிக்கும் முதன்மைப் புறக்காரணங்களாக மாறிவிட்டன என்பதை 2005 முதல் 2024 வரையிலான அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.

செம்மொழி நிதி அரசியல்

செம்மொழி அந்தஸ்து என்பது வெறும் கௌரவத்தோடு நின்றுவிடாமல், மொழிகளின் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் மத்திய அரசின் நிதியுதவியைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி ஒதுக்கீட்டில் நிலவும் மலைக்க வைக்கும் ஏற்றத்தாழ்வுகள், செம்மொழி அரசியலின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், செம்மொழிகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் உள்ள முரண்பாடுகளை விரிவாகப் பார்க்க முடிகிறது.

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் கலாசார அமைச்சகம் மூலம் செம்மொழிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 10 -15 ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிடும்போது, நிதி ஒதுக்கீட்டில் சமஸ்கிருதத்திற்கும் பிற செம்மொழிகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப் பல மடங்காக உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் சமஸ்கிருதம் - ஆண்டுக்குச் சராசரியாக ரூ.100 - ரூ. 200 கோடிகள் வரை - ரூ. 1,000 கோடிக்கும் மேல் நிதி பெற்றுள்ளது. ஆனால், தமிழுக்கு இதுவரை ரூ. 80 கோடி மட்டுமே. (ஆண்டுச் சராசரி ரூ. 7 - 10 கோடிகள்). தெலுங்கு & கன்னடம் ஆகிய மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் மொழிகள் நடுவண் நிறுவனம் (CIIL) மூலம் ரூ. 5 - 10 கோடிகள் (ஆண்டுக்கு 1 கோடிக்கும் குறைவு) மட்டுமே பெற்றுள்ளன. மலையாளம் & ஒடியாவுக்குக் கிடைத்திருப்பது ரூ. 2 - 6 கோடிகள் (ஆண்டுக்கு சில லட்சங்கள் முதல் ரூ. 1 கோடி வரை) மட்டுமே. 2024இல் செம்மொழித் தகுதி பெற்ற மராத்தி, வங்காளி, அசாமி, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கான நிறுவனக் கட்டமைப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும் இனிமேல்தான் முழுமையாக வரையறுக்கப்பட உள்ளன.

மத்திய அரசு / ஆளும் தரப்பு இந்த ஏற்றத்தாழ்வுக்குச் சில நிர்வாக, கொள்கை ரீதியான காரணங்களை முன்வைக்கின்றன. மத்திய அரசின் கீழ் மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் (Central Universities) உள்ளன. அப்பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க, பேராசிரியர்களின் ஊதியம், உள்கட்டமைப்பு, மாணவர் உதவித்தொகை எனத் தேவைகளும் இந்த ஒதுக்கீட்டில் உள்ளதாகச் சாக்குச் சொல்லப்படுகிறது. தமிழுக்கு ஒரு மத்திய நிறுவனம் (CICT) மட்டுமே உள்ளது. மற்ற தென் மாநில மொழிகள் மற்றும் ஒடியாவிற்கு மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் (CIIL) கீழ் ஒரு சிறிய 'ஆய்வு மையம்' (Center/Cell) மட்டுமே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. ஆகவேதான் பிற மொழிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறைவாம்!

மேலும் சொல்லப்படும் காரணம், ’சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல; அது நாடு முழுவதும் (?!) பரவியுள்ள பாரம்பரிய மொழி’ எனவும் ‘அதனைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது’ எனவும் மத்திய கல்வி அமைச்சகம் வாதிடுகிறது.

அதேநேரத்தில், ‘தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழிகள் அந்தந்த மாநில அரசுகளின் வலுவான பாதுகாப்பிலும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதியுதவியிலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதால் மத்திய அரசு துணை நிதி மட்டுமே வழங்குகிறது என்பது மற்றொரு விளக்கமாக உள்ளது.

வலதுசாரி அரசியல் சித்தாந்தத்தில், இந்தியாவின் தொன்மை மற்றும் கலாசார ஒருமைப்பாட்டைக் கட்டமைப்பதில் சமஸ்கிருதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டு வருவது வெளிப்படை. இதனால் ஆட்சியாளர்களின் கருத்தியல் சார்பு சமஸ்கிருத ஆய்வுகளுக்கும், அதன் பரவலாக்கத்திற்கும் அள்ளிக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமஸ்கிருதத்தின் மீது காட்டப்படும் அளவுக்கதிகமான நிதிப் பரிவு, பிற மாநில மக்களிடையே 'சமஸ்கிருத / இந்தித் திணிப்பு' என்ற ஐயத்தை, அச்சத்தை, கோபத்தை அரசியல் ரீதியாகத் தொடர்ந்து வளர்த்து வருகிறது.

செம்மொழிகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் (Presidential Awards for Classical Languages) - சமஸ்கிருதத்தைத் தவிர்த்துப் - பிற மொழிகளுக்குப் பல ஆண்டுகள் வழங்கப்படாமலேயே நிலுவையில் வைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

ஒரு மொழியைச் 'செம்மொழி' என அறிவிக்கப்படும்போது உள்ள அரசியல் வேகம், அதற்கான நிதியை ஒதுக்கும்போதோ அல்லது ஆய்வு நிறுவனங்களைக் கட்டமைக்கும்போதோ இருப்பதில்லை. சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சமமாகப் பாவிக்கத் தவறும் மத்திய அரசுகளின் ஒருசார்பு மனநிலையை, சாய்ந்த செயல்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்திய மொழிகளைச் செம்மொழி என அறிவிப்பதிலும், அறிவிப்புகளை ஆரவாரமாக நிகழ்த்திய பின் நியாயமற்ற, சமன்பாடற்ற, ஒருசார்பான நிதி ஒதுக்கீடுகளைத் தொடர்வதிலும் நேர்மை வற்றிய அரசியலே மேலோங்கி நிற்கும் நிதர்சனம் அவலமே.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமையானுங்கெடும் - (குறள் 466)

நினைவிலெழுவது இயற்கையே.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

World Classical Languages ​​and Classical Language Politics in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.