திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!

தமிழகத்தில் 1967-க்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சியில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.
திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!
Updated on
4 min read

தமிழகத்தில் 1967-க்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சியில் பங்கு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விஜய் தலைமையிலான தவெக போட்ட தூண்டிலில் சிக்கி, வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா, தவெகவுடன் கூட்டணியா என்பதில் தொடர்ந்து காங்கிரஸ் குழப்பத்தில் இருந்து வருகிறது.

2019, 2021, 2024 பொதுத் தேர்தல்களில் நிலையாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமான கிரிஷ் ஷோடங்கர், பிரவீண் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், கிள்ளியூர் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் சட்டப்பேரவைத் தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரûஸ வலுப்படுத்த வேண்டும் என்று கருதுவதன் காரணம், திமுக அதிக இடங்களையும், ஆட்சியில் பங்கும் தர முன்வராவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களைப் பெற்று ஆட்சியில் பங்கேற்கலாம் என்பதுதான்.

திமுகவில் 40 தொகுதிகளையோ அல்லது தவெகவில் 75 தொகுதிகளையோ பெற்றுவிட்டால், இப்போது இருப்பதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், குறைந்தது 10 சதவீத வாக்கு வங்கியை காங்கிரஸால் நிரூபிக்க முடியும். இதன்மூலம் 2029 - ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அல்லது தவெகவிடம் பேரம் பேசி இப்போதுள்ள 10 எம்.பி.க்கள் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்தலாம் என்பது காங்கிரஸ் தலைமையின் கணக்கு.

அதேவேளை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விஷ்ணுபிரசாத் எம்பி. போன்றவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதே சிறந்தது, வெற்றிவாய்ப்பு அதிகம் என காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இன்னொருபுறம், தவெகவை காட்டித் தங்களது பேர வலிமையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு அதிகரித்துள்ளது.

காங்கிரûஸப் பொருத்தவரை தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 11 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே 50,000 வாக்குகளைப் பெற முடிந்தது. அப்போது அந்தத் தேர்தலில் 24 சதவீத வாக்குகளை மட்டுமே திமுக பெற்று அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. 2 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது. ஆனால், மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து 2016 பேரவைத் தேர்தலில் 40 சதவீத வாக்கு வங்கியுடன் 98 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றது.

கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் சிறிய எண்ணிக்கை ஹிந்து ஜாதி வாக்குகளை தங்களால்தான் திமுக பெறுகிறது என காங்கிரஸார் வாதிடுகின்றனர்.

ஆனால், அந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதிமுக - காங்கிரஸ் மோதிய இடங்களில் அதிமுக 33 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை காங்கிரஸுக்கு அளித்து சாமர்த்தியமாக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திமுக போட்டியிட்டதால் தனது வெற்றியை வலுப்படுத்திக் கொண்டது என்பது காங்கிரஸின் மனக்குமுறல். திமுக தயவு இன்றி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்கிற திமுகவின் வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

திமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதிக்கு மூன்று பேரவைத் தொகுதிகள் என்ற அடிப்படையில் கடந்த 2021 பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, வரும் பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகள் மட்டுமே திமுக தரப்பில் ஒதுக்கப்படும். கூடுதல் கட்சிகள் கூட்டணிக்குள் வருவதைக் காரணம் காட்டி தங்களுக்குரிய தொகுதிகள் குறைக்கப்படலாம் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. அமைச்சரவையில் பங்கேற்றால் மட்டுமே தங்கள் கட்சியினரை தாங்களே திருப்திப்படுத்த முடியும் என்பது அவர்களது எண்ணமாக உள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொகுதிகளில் மக்கள் பிரச்னைகளை அவர்கள் கவனிப்பதில்லை, பெரும்பாலான காங்கிரஸார் சென்னையிலேயே தங்கிவிடுவதால் அவர்களை, தொகுதி மக்களால் அணுக முடியாத நிலை நிலவுகிறது. எனவே, காங்கிரஸ் தொகுதிகளை இந்த முறை மாற்றி வழங்க வேண்டும் என திமுகவினர் கருதுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் திமுக - காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

திமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தாலும், காங்கிரûஸ கைவிடும் நிலையில் திமுக தலைமை இல்லை. தொடர்ந்து தில்லியில் காங்கிரஸ் தலைமையுடன், திமுக தலைமை சமாதானம் பேசிவருகிறது.

இன்னொருபுறம் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கேரள காங்கிரஸ் கட்சிக்கு கிறிஸ்தவ அமைப்புகளின் முழுமையான ஆதரவு இருப்பதால், அந்த அமைப்புகளும் தமிழகத்தில் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு (சோனியா காந்தி) அழுத்தம் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

""நடிகர் விஜய்க்கு கேரளத்தில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழக எல்லையை ஒட்டிய கேரள சட்டப்பேரவைத் தொகுதிகளில் விஜய்யுடனான கூட்டணி மிகப்பெரிய அளவில் உதவக் கூடும். கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு உண்டு. அதற்கு நடிகர் விஜய்யின் ஆதரவு உதவியாக இருக்கும்'' என்பது கேரள காங்கிரஸாரின் கருத்து.

காங்கிரஸின் மத்திய தலைமையில் இன்னொரு கருத்தும் நிலவுகிறது. என்னதான் திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும், அமைய இருக்கும் ஆட்சி திமுக ஆட்சியாக இருக்குமே தவிர, காங்கிரஸ் ஆட்சியாகவோ, காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணி ஆட்சியாகவோ இருக்கப் போவதில்லை. அதே நேரத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், கூடுதல் இடங்களில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் அதிக இடங்களிலும் வெற்றி பெற முடியும்.

தாங்கள் கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர தவெக தயாராக இருக்கும். திமுக வெற்றி பெறும் தொகுதிகளைத் தனக்குத் தக்க வைத்துக் கொள்ளுமே தவிர தங்களுக்கு விட்டுத் தராது என்று காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைவதைவிடக் கேரளத்தில் தங்கள் தலைமையில் ஆட்சி அமைவதை காங்கிரஸார் விரும்புவதில் வியப்பில்லை. இந்தத் துருப்புச் சீட்டை பயன்படுத்திதான் ராகுல் காந்தியின் மனதில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த சிந்தனையைக் காங்கிரஸார் விதைத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகளின் மூலம் சோனியா காந்தியிடமும், "காங்கிரஸ் ஆட்சி' ஆசை காட்டி ராகுல் காந்தியிடமும் தவெகவுடனான கூட்டணிக்கு ஆதரவு தேட முற்பட்டிருக்கின்றனர்.

விஜய்க்கான வாய்ப்பு: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் போட்டிருக்கும் முட்டுக்கட்டைக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்திருப்பது காங்கிரஸ்- தவெக உறவுக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம். காங்கிரஸ் கட்சி எந்தஅளவுக்கு நடிகர் விஜய்யின் ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறதோ, அதேபோல நடிகர் விஜய்யும் காங்கிரஸின் ஆதரவை எதிர்பார்த்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

தனக்கு எம்ஜிஆர் போன்ற ஆதரவு இருக்கிறது என்கிற நடிகர் விஜய்யின் எண்ணமும், தனித்துப் போட்டியிட்டு தமிழக முதல்வராகிவிடலாம் என்கிற கனவும் படிப்படியாக குறைந்து வருகிறது.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தனித்து இயங்க முடியாது; தனக்கு அரசியல ரீதியாக ஆதரவு வேண்டும் என்பதை நடிகர் விஜய் உணரத் தொடங்கி இருக்கிறார். தவெகவுடன் கைகோக்கத் தயாராக இருந்த அதிமுகவின் நேசக்கரத்தை, ஆரம்பம் முதலே தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி நிராகரித்துவிட்டார் விஜய். செங்கோட்டையனை இணைத்துக் கொண்ட பிறகு அதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் வலிமையான கூட்டணியை உறுதி செய்துகொண்டுவிட்ட நிலையில், இனிமேல் நடிகர் விஜய்யே விரும்பினாலும்கூட அந்தக் கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராக மாட்டார் என்பது உறுதி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய பாஜகவை கடுமையாக விமர்சித்து தனது சிறுபான்மையினர் ஆதரவை தக்க வைத்துக்கொள்ள விஜய் விரும்புவதால் பாஜகவுடனான உறவு சாத்தியமில்லை. ஜனநாயகன் தணிக்கை விவகாரத்துக்குப் பிறகு அதற்கான வாய்ப்பு முற்றிலுமாக அடைக்கப்பட்டு விட்டது.

ஆரம்பம் முதலே தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்கிற பரப்புரையுடன் களமிறங்கிய நடிகர் விஜய், திமுக கூட்டணியில் இணைவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. திமுகவே விரும்பினாலும்கூட அந்தக் கட்சித் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் அந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தப் பின்னணியில் தனக்கென்று அரசியல் ரீதியாக ஆதரவில்லாமல் தனித்து விடப்பட்டிருக்கும் நடிகர் விஜய்க்கு, காங்கிரஸ் ஆதரவு மட்டும்தான் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை, வாய்ப்பு. திமுகவிலிருந்து அதிமுக பிரிந்தபோது, எம்ஜிஆர் இந்திரா காங்கிரஸின் ஆதரவை நாடினார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிடத் தோன்றுகிறது.

ராகுல் காந்தியின் ஆதரவையும், காங்கிரஸ் நீட்டத் தயாராக இருக்கும் நேசக் கரத்தையும் நடிகர் விஜய் ஏற்றுக்கொள்ளப் போகிறாரா, இல்லை நடிகர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி சீமான்போல தனித்துக் களமிறங்கி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா என்பது ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே அரசியல் களத்தில் நிலவும் மில்லியன் டாலர் சந்தேகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com