-எம். திரவிய முருகன்
முத்தமிழில் நடுநாயகமாக வீற்றிருக்கும் இசைத்தமிழைப் பருக விரும்புவது அனைவருக்கும் இயல்பானது. காரணம் ஓப்பீட்டளவில் இயல், நாடகத்தை விடவும் இதில் இசைவு அதிகம். இசை வெகுமக்களுக்கு நெருக்கமாக ஒலிக்கும்போது இணையற்ற ஒன்றுதல் அல்லது குவிதல் அங்கு ஏற்படுகிறது. அப்படியான அணுக்கத்தில் அரை நூற்றாண்டைக் கடந்து இளையராஜாவின் இசையில் தமிழ் மக்கள் திளைத்துக் கிடக்கிறார்கள்.
மொழி எல்லைக்கு அப்பாலும் ராஜா கொண்டாடப்படுகிறார் என்றால் இசைக்கு மொழிப் பாகுபாடு இல்லை என்பதல்ல பொருள். மாறாக, உணர்வுகளை இசை வழி கடத்தும்போது அவர் மாயஜாலங்களை நிகழ்த்துகிறார். நுண்ணியவற்றை நீரோடைக்குள் சேர்க்கிறார். ஒழுங்கற்ற மனதைக் கட்டுக்குள் கொண்டுவருகிறார்.
திரைமொழிக்குள் இசைநுட்பத்தை நுழைத்து ஆன்மாவைத் தொடும் ஆத்மார்த்தத்தை தருவது சாதாரண கலைஞனால் இயலாதது. முழுக்க தன்னை அதற்கு ஒப்படைத்து, சரணாகதி அடைந்தால் மட்டுமே சாத்தியம். அப்படித்தான் தன் சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார் இளையராஜா.
ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை தன்மீதான விமர்சனங்களுக்கு இட்ட பணியால் பதில் சொல்வதை வாடிக்கையாக கொண்டவர் அவர். எனினும் சமூக ஊடக பெருக்கத்திற்கு பிறகான அரசியல் சர்ச்சையில் அதிகம் விமர்சிக்கப்பட்டார் இளையராஜா.
2022 ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரை பலதரப்பு எதிர்ப்பை ஒரு சேர அவருக்கு பெற்றுத் தந்தது. 'அம்பேத்கர் அன்ட் மோடி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட அந்த நூல் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பல்வேறு வகைப்பாடுகளில் ஒப்பிட்டது.
இந்த நூலில் தனது நீண்ட முன்னுரையில் மோடியை வியந்து போற்றியிருந்தார் இளையராஜா."ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது சிந்தனைகளை செயல்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் அதைவிட முக்கியம். ஒருவரது கற்பனைக்கு வரம்புகள் இல்லை என்றாலும், செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தர்க்க ரீதியாகவும் கவனமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது "என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஒப்பீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கினர் மோடி எதிர்ப்பாளர்கள். இந்திய அளவில் எதிர்ப்பு என்பதைவிட தமிழ்நாட்டு இடதுசாரிகள், திராவிட இயக்க - கட்சியினர், அம்பேத்கரிய அமைப்புகள் கடும் எதிர்வினையாற்றின.
வளர்ச்சிப் பணிகள் என்ற ரீதியில் மட்டுமல்லாது சமூகநீதிப் பார்வையில் ஒப்பீடு செய்யப்பட்டதும் சர்ச்சைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது."சமூக நீதி என்று வரும்போது, சட்டங்கள், அரசமைப்புச் சட்ட பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இதர பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைத்தது ஆகியவற்றின் மூலமாகவும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி" என்று அந்த முன்னுரையில் குறிப்பிட்ட இளையராஜா, "பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச் சட்டம், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ இயக்கத்தின் மூலமாக மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் உயர்ந்தது ஆகியவற்றின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" என்று தனது முந்தைய கருத்தை அதில் வலுப்படுத்தியிருந்தார்.
அம்பேத்கரும் மோடியும் இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால், இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள் என்று கூறி இருவரையும் சமப்படுத்திய பார்வை அந்த முன்னுரை முழுக்க விரவிக் கிடந்தது.
இந்த ஓப்பீடுகளுக்காக அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என்றுகூட வலியுறுத்தல்கள் வந்தன. எனினும் தனது பதிவுக்காக மன்னிப்புக்கோரப் போவதில்லை என்று தனது சகோதரர் கங்கை அமரன் மூலமாக தகவல் அனுப்பினார் இளையராஜா.
கருத்துரிமை பற்றி பாடம் எடுக்கும் இடதுசாரி, திராவிட அமைப்புகள் இளையராஜாவுக்கு அதைப் பொருத்திப் பார்ப்பதை தவறவிட்டது ஏன் என்று பாஜக, பாஜக ஆதரவு அமைப்பினர் கேள்வி எழுப்பினர். பின்னாளில் பாஜக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானபோது, இதற்காகத்தான் இளையராஜா அப்படி எழுதினார் என்று சில பதிவுகள் காணக் கிடைத்தன.
இசைதான் தன் மதம் என்று பிரகடனப்படுத்திய ஒருவர், அதற்கு தொடர்பற்ற ஒன்றில் பெயர் வாங்க எந்தத் தேவையும் இல்லை. தான் வளர்ந்துவரும் காலக்கட்டங்களில் கூட இளையராஜா அதைச் செய்தது இல்லை என்பதுதான் வரலாறு. இப்போது புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஒருவரைப் புகழ்ந்து பெற வேண்டியது எதுமில்லை. ஆனால் தனக்கான கருத்துரிமை அடிப்படையில் சிலவற்றை அவர் வெளிப்படுத்தினார் என்றுதான் அதைப் பார்க்க வேண்டும்.
இவை எல்லாம் காரசார விவாதமாக மாறிய காலகட்டத்தில் இயல்பாக தனது இசைக்கோர்வைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார் இளையராஜா. கடந்த ஆண்டு லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.
கடுமையான சொல்லாடல்கள் அவர் பணியை முடக்கிவிடவில்லை. "வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு " என்பார் வள்ளுவர். ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடக் கூடாது. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும் என்பது அதன் பொருள்.
இளையராஜா விட்டுவிட மாட்டார். இந்த உலகம் அவரை விட்டுவிடாது!
Summary
Ilayaraaja Birthday special atricle Music Untamed by Political Controversies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் இருப்பதால் வர முடியவில்லை: பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
விஜய் - ஏ. ஆர். முருகதாஸ்! சர்ச்சைகளைக் கிளப்பிய வெற்றிக் கூட்டணி!

துளிர்த்த தூண்டிலும் இளையராஜாவின் பிரளய இசையும்!

80களில் இசையுலகை ஆட்சி செய்த இளையராஜா!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



