
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 14
திரைப்படங்களில் கவியரசர் கண்ணதாசனின் தனித்துவமான, புதுமையான பாடல்கள் பற்றி...

கண்ணதாசன் - AI (Gemini)
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்றார் மார்க்ஸ்.
‘மாற்றம் நிகழ நிகழ அவை எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது’ என்றார் அல்போன்ஸ் கார்.
கவியரசு கண்ணதாசன் அவரது வாழ்நாளில் பல மாற்றங்களுக்கு உட்பட்டவர்.
தேசியம், திராவிடம், தமிழ்த்தேசியம் என்ற பலவித அரசியல் கொள்கைகளுக்கு நடுவில் புடமிட்ட பொன்னாக புகுந்து வெளிவந்தவர் அவர்.
‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை’ என தனது சொந்தப் படமான 'கருப்புப் பணம்' படத்தில் பாடல் எழுதியவர் அவர்தான்.
அதேவேளையில் ஹங்கேரி நாட்டின் புரட்சிப் போராளி இம்ரே நாகி படுகொலையானபோது, பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிராகப் பொங்கித் தீர்த்தவரும் அவர்தான்.
இந்தியை ‘இழிசெருப்பனைய இந்தி’ என்று ஏசியவரும் கவியரசர்தான். ‘இலகுமோர் காலையில் புதுதில்லி செல்வேன், இந்தியில் பேசி மகிழ்வேன்’ என்று கவிதை எழுதியவரும் அவர்தான்.
ஏன் இத்தனை முரண்பாடுகள் என்று கேட்கத் தோன்றும்.
ஆனால், கவியரசர் இதற்கு அவரது கவிதை ஒன்றிலே பதில் அளித்து விட்டார்.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று தொடங்கும் கவிதையில்,
‘கல்லாய் மரமாய் காடுமேடாக / மாறாதிருக்க நான் வனவிலங் கல்லேன் / மாற்றம் எனது மானிடத் தத்துவம் / மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! / எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை /என்ப தறிந்தே ஏகுமென் சாலை! / தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; / தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!’
என்று பளிச்சென்று பதில் சொல்லியிருப்பார் கவியரசர்.
*
கவிப்பேரரசர் கம்பர், கம்பராமாயணம் மட்டும் எழுதியவரல்லர். பல்வேறு தனிப்பாடல்களையும் அவர் பாங்காக எழுதியவர்.
கம்பரின் தனிப்பாடல் ஒன்றில் ‘வளை வளை‘ என்று வார்த்தைகள் வந்து வந்து விளையாடும்.
அந்த தனிப்பாடலில் ‘மாத்தத்தன் என்பவனைப் பற்றி எழுதியிருப்பார் கம்பர்.
மாத்தத்தன் ஒரு மாபெரும் அழகன். அவன் மீது மையல் கொண்ட பெண்கள் ஏராளம்.
தாமரைப்பூ மேல் தவளை தத்தித் தத்தி விளையாடுவதால் தாமரை தேன் சிந்தும் நாடாம் பொன்னி (காவிரி) வளநாடு. அந்த வளநாட்டின் வீதிகளில் மாத்தத்தன் நடந்து வந்து பல பெண்களின் வளையல்களைப் பறித்துப் போய் விட்டானாம்! (அதாவது ஏக்கத்தால் பெண்களின் வளையல்களை அவன் கழன்று விழவைத்து விட்டானாம்!).
ஒரு பெண் சொல்வதுபோல அமைந்துள்ள அந்த பாட்டில், ‘இருந்தவளை, போனவளை, என்னை, அவளை எல்லாம் ஏக்கத்தில் ஆழ்த்தி மாத்தத்தன் வந்து வளைபறித்துப் போய் விட்டான்’ என்கிறாள் அந்தப் பெண்.
கம்பரின் அந்தப் பாடல் இதோ.
‘இருந்தவளை போனவளை என்னை அவளை / பொருந்தவளை பறித்துப் போனான் - பெருந்தவளை / பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில் / மாத்தத்தன் வீதியினில் வந்து’
கம்பரின் இந்தப் பாடலில் வளை, வளை என்று வார்த்தைகள் வந்து வந்து வட்டமிடுவது கவியரசர் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
அதனால் புதிய பூமி (1968) திரைப்படத்தில் வளை வளை என்று முடியும் சொற்களை வைத்து அவர் ஒரு பாடல் எழுதினார்.
‘சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம்தொட்டு, என்னவளை காதல் சொன்னவளை நான் ஏற்றுக்கொண்டேன் வளையிட்டு’ என்ற பாடல் அது.
அந்தப் பாடல் முழுக்க ‘வளை வளை’ என்று நம் உள்ளங்களை வளையாய் வளைத்திருப்பார் கவியரசர்.
*
கவியரசர் கண்ணதாசன் ஒரு ராயல் கவிஞர். ராஜரீகமாகத்தான் அவருக்கு எப்போதும் பாடல் எழுத வரும். சமூகப் படங்களில் பாடல் எழுதினால்கூட, தமிழர்களின் பழங்கால வீர வரலாற்றை கவியரசரின் விரல்கள் தொடாமல் விடாது.
பாசமலர் என்ற படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சமூகப் படம். அது சரித்திரக் காலத்தைச் சித்தரிக்கும் படம் அல்ல.
அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே’ என்ற புகழ்பெற்ற பாடலில், ‘யானைப்படை கொண்டு சேனைப் பல வென்று ஆளப்பிறந்தாயடா, புவி ஆளப் பிறந்தாயடா’ என்று எழுதியிருப்பார் கவியரசர்.
அதுபோல வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவரது மகனைத் தாலாட்டுவதைப் போல ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். ‘வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய’ என்ற பாடல் அது. அந்தப் பாடலில் கவியரசர் எழுதிய ஒரு வரி.
‘வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே, பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு. வரும் பகைவர்களை வென்றுவிடும் படையை காட்டு’
நாம் முன்பே குறிப்பிட்டதுபோல சமூகத் திரைப்படங்களில் கூட, தமிழர்களின் வீரம் செறிந்த வரலாற்றை கவியரசரின் விரல்கள் தொடாமல் விட்டதில்லை.
அந்த வகையில் ராயல் கவிஞர் என்று அழைக்கத் தக்கவர் கவியரசர் கண்ணதாசன்.
*
திரைப்படப் பாடல்களில் பின்நவீனத்துவம் எனப்படும் போஸ்ட் மாடர்னிசம் உள்பட பல புதுமைகளைத் தெறிக்கவிட்டவர் கவியரசர் கண்ணதாசன்.
வழக்கமாக ஆற்றைத் தேடி நாம்தான் குளிக்கப்போவோம் இல்லையா?. திடீரென ஓர் ஆறு நம்மைத் தேடி வந்து ‘குளிக்க வா’ என்று கூப்பிட்டால் எப்படி இருக்கும்?
இப்படிகூட கற்பனை செய்து பார்த்திருக்கிறார் கவியரசர்.
மனோரஞ்சிரதம்‘ என்ற திரைப்படத்தில், ‘ஒரு பார்வை நூறு கவிதை’ என ஒரு பாடல் தொடங்கும்.
அந்தப் பாடலில், ‘தேனாறு ஒன்று, ஓடோடி வந்து, நீராட வா என்றதோ?’ என்று எழுதியிருப்பார் கவியரசர்.
அந்தமான் காதலி திரைப்படத்தில், ‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன். திருக்கோயிலே ஓடிவா’ என்று கவியரசர் எழுதியதும் ஒரு புதுமையே.
வழக்கமாக கோயிலைத் தேடித்தான் சிலை செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இங்கோ சிலையைத் தேடி கோயில் வர வேண்டும் என்று பதுமையாகச் சிந்தித்திருக்கிறார் கவியரசர்.
தெய்வத்தாய் படத்தில் இடம்பெற்ற ‘பேசுவது கிளியா? பெண்ணரசி மொழியா?’ என்ற இணை குரல் பாடலில், கதாநாயகி, ‘நெஞ்சத் தட்டிலே என்னைக் கொட்டினேன்’ என்பாள்.
இப்படி பல நூறு புதுமைகளைத் திரைப்பாடல்களில் புகுத்தியவர் கண்ணதாசன்.
கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டில் மேலும் மேலும் அவரை நினைவுகூர்வோம்.
Summary
Kannadasan is a royal poet: His modern specific songs in cinema
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


ரூ. 125 சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 11






