எப்படி நம்புவது?

ஓரு விசாரணை தொடர்பாக, ஒரு துறையிடம் சில கோப்புகளை சிபிஐ கேட்கும்போது, அவை தரப்படவில்லை என்றாலோ, அவை காணாமல் போய்விட்டன என்று சொல்லப்பட்டாலோ, சிபிஐ நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
Updated on
2 min read

ஓரு விசாரணை தொடர்பாக, ஒரு துறையிடம் சில கோப்புகளை சிபிஐ கேட்கும்போது, அவை தரப்படவில்லை என்றாலோ, அவை காணாமல் போய்விட்டன என்று சொல்லப்பட்டாலோ, சிபிஐ நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் அந்தத் துறையினர் அளித்த பதிலை முன்வைப்பதைத் தவிர சிபிஐ எதையும் செய்ய இயலாது. தொடர்புடைய துறை, காவல்நிலையத்திலோ அல்லது சிபிஐ-யிடமோ முறையிடாதவரையில் இவ்வாறு கோப்புகளைத் தேடும் நடவடிக்கையில் சிபிஐ தன்னிச்சையாக இறங்க முடியாது. தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் முடியாது.

நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான விசாரணையில் சிபிஐ கேட்ட சில கோப்புகள் காணாமல் போனது குறித்து மீண்டும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், ""உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் கோப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இது குறித்த விவர அறிக்கையை சிபிஐ-யின் ஆய்வுக்கும் புலன் விசாரணைக்கும் அரசு வழங்கும்'' என்று கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாகவே கோப்புகள் தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு, காணவில்லை என்று இப்போதுதான் வெளிப்படையாகப் பேசப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக இந்த விசாரணையை முடுக்கிவிடுவதற்கு வசதியாக, காணாமல் போன கோப்புகள் குறித்த விவர அறிக்கையை முன்னதாகவே சிபிஐ-யிடம் மத்திய நிலக்கரி அமைச்சகம் தானாகவே முன்வந்து அளித்திருந்தால், மத்திய அரசை இந்த அளவுக்கு யாரும் குறை சொல்லியிருக்க மாட்டார்கள்.

ஆனால் மத்திய அரசோ, நிலக்கரி அமைச்சகமோ காவல்துறையிலும் புகார் தரவில்லை; சிபிஐ-யிடமும் அறிக்கை தரவில்லை. இனி நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்த பிறகு, தேடப்படும் கோப்புகள் கிடைக்காத நிலையில், சிபிஐ-யிடம் விவர அறிக்கை தரப்படும் எனச் சொல்வது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்துமே தவிர வேறு எந்த பலனையும் தரப்போவதில்லை.

சில தினங்களுக்கு முன்பு, மிகவும் காரசாரமாகவும், தனது இயல்புக்கு மாறாகவும் எதிர்க்கட்சியினரோடு சொல்லாடல் செய்த பிரதமர், ""பிரதமரை திருடன் என்று சொல்வது இங்கேதான் நடந்திருக்கிறது'' என்று வருத்தப்பட்டார். கோப்புகளை காப்பது தன் வேலை அல்ல என்றும்கூட கூறினார்.

அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம். கோப்புகளைக் காத்துக்கொண்டிருப்பது ஒரு பிரதமரின் வேலை அல்ல என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் கோப்புகள் தரப்படவில்லை என்று சிபிஐ சொல்லும்போது, அந்தக் கோப்புகளை தரும்படி செய்வதற்கான நடவடிக்கையில், அது குறித்து அப்போதே வழக்கு பதிவு செய்வதில் பிரதமர் ஆர்வம் காட்டவில்லை என்பதைத்தான் அனைவரும் குறைகூறுகிறார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

""கோப்புகள் எங்கே உள்ளன என்று தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றைக் காணவில்லை என்று சொல்வது உறுப்பினர்களின் அவசர முடிவு'' என்று இன்னமும்கூடப் பிரதமர் சொல்வது நகைப்புக்கு இடமானது. இனிமேலும் இந்த கோப்புகள் திடீரென்று கிடைத்துவிடும் என நம்புவது அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.

அரசு அலுவலகங்களிலும், காப்பீட்டு அலுவலகங்களிலும் அடிக்கடி திடீர் தீவிபத்து ஏற்பட்டு பல கோப்புகள் எரிந்து போவதைப் போல, நிலக்கரி அமைச்சகத்தில் தீ விபத்து நடந்திருந்தால், "கோப்புகள் எரிந்துவிட்டன' என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அத்தகைய சம்பவம் எதுவும் நடக்காத நிலையில், இந்த கோப்புகளுக்கு கால் முளைத்திருக்க முடியாது. தொடர்புடைய அலுவலர்களிடம் உடனடியாக விசாரணை நடத்த ஏதுவாக, இந்த விவகாரத்தை சிபிஐ வசம் விட்டுவிடுவதுதான் குறைந்தபட்ச நேர்மையுள்ள நடவடிக்கையாக இருந்திருக்கும்.

உச்சநீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் வரை கோப்புகளைத் தேடுவதாகக் கூறிக் காலம் தாழ்த்துவதும், "1.50 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அளித்த அரசின் நேர்மையை கேள்விக்கு உள்ளாக்காதீர்கள்' என்பதும் மத்திய அரசு மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தாது.

இதற்கான அதிகாரிகள் யார் யார்? யாருடைய பொறுப்பில் அவை இருந்தன என்பதை இப்போதே தெரிவித்து விசாரணையை முடுக்கிவிடுவதுதான் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை.

கணினியின் தாக்கம் இல்லாத காலத்தின் காகித கோப்புகளுக்கே இந்த நிலைமை என்றால், கணினி மூலமாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள், பதில்களின் கதி என்ன? "ஹார்ட் டிஸ்க் கரப்ட்' ("துணை நினைவகம் பழுது') என்ற ஒரே வரியில் முடித்துவிடப்படுமா?

காகிதம் இல்லா அலுவலகம் என்ற நடைமுறை, நியாயவிலைக் கடையிலிருந்து நாடாளுமன்றம் வரை பரவலாகும் இந்த வேளையில், இத்தகைய கணினி வழியாக நடைபெறும் விவகாரங்கள் எக்காலத்துக்கும் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கான நடைமுறைகள் என்ன இருக்கின்றன?

தற்போது கோப்புகள் காணாமல் போனது குறித்து அவையை முடக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய கடமை ஒன்று உண்டு. அது நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு கோப்புகள் மட்டுமின்றி, அனைத்து துறைகளின் கோப்புகளின் பாதுகாப்பு, கணினிவழி விண்ணப்பங்கள் ஒதுக்கீடு, அரசு பதில்கள் ஆகியன அழியாமல் பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறித்தும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

""சர்வதேச அரங்கில் எனக்கிருக்கும் மரியாதை என்ன தெரியுமா? உலகில் வேறு எந்த ஜனநாயகத்திலாவது எதிர்க்கட்சிகள் ஒரு பிரதமர் தனது அமைச்சர்களை அறிமுகப்படுத்தக்கூட விடாமல் இருந்த சரித்திரம் உண்டா?'' என்றெல்லாம் மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியபோது, அவரது அமைச்சர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அவைக்கே வராமல் இருந்தார்கள் என்றால், என்ன பொருள்? அவர்களுக்கே தங்கள் பிரதமர் அளிக்கும் விளக்கத்தில் நம்பிக்கை இல்லாதபோது, நாடு எப்படி நம்பும்?

காணாமல் போயிருப்பது கோப்புகள் மட்டுமல்ல. அரசின்மீதான நம்பிக்கையும்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com