சட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை என்ன செய்வது? எத்தனை ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டினாலும் மீளாது என்றால் வேறு என்னதான் செய்வது? இந்தக் கேள்வி எல்லாக் காலங்களிலும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் சிக்கலான நிலைமையை உருவாக்கி வந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, புது தில்லியில் இந்திய பொருளாதார மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசியபோது குறிப்பிட்டதைப்போல, "நட்டத்தில் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுத்துவிடுவோம்' என்பதும் முழுத் தீர்வு ஆகாது. நட்டத்தில் இயங்கிய பொதுத் துறை நிறுவனங்கள் பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறியிருக்கின்றனவே தவிர, மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை.
நட்டத்தில் நடைபெறுவதாகக் கூறி தனியார்மயமாக்கப்பட்ட சில நிறுவனங்கள் லாபகரமாக இயக்கப்படுவதற்குக் காரணம், அவை பொறுப்புடனும் வியாபார நோக்கத்துடனும் அரசால் நடத்தப்படாததுதான். தேவையில்லாமல் அளவுக்கு அதிகமான தொழிலாளர்களை நியமித்ததும், உயரதிகாரிகளும் அரசியல் தலை
யீட்டால் நியமிக்கப்பட்ட இயக்குநர்களும் கண்மூடித்தனமான ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டதும்தான் அந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதற்கான காரணங்கள்.
பொதுத் துறை நிறுவனத்தை ஏற்க விழையும் எந்தவொரு தனியார் நிறுவனமும் முன்வைக்கும் முதல் நிபந்தனை, "தொழிலாளர் எண்ணிக்கையை நாங்கள் குறிப்பிடும் அளவுக்குக் குறைத்துவிட்டு, எங்களிடம் கொடுங்கள்' என்பதே. ஏனென்றால், பொதுத் துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கக் காரணம் சந்தை அல்ல, திறமையற்ற பணியாளர்கள் என்பதே தனியார் நிறுவனத்தின் கோட்பாடு. ஆகவே, தனியாரிடம் ஒப்படைப்பதும் அத்தனை சுலபமல்ல.
"எத்தனைக் காலத்துக்கு, விழலுக்கு இறைத்த நீராக, மக்கள் பணத்தைக் கோடி கோடியாகக் கொட்டிக் கொண்டிருப்பது' என்று அமைச்சர் கேட்கும் கேள்வி நியாயமானது. இந்தக் கேள்வியை பாஜக, காங்கிரஸ் என்று கட்சி பேதம் பார்த்து ஒதுக்கிவிட முடியாது.
பொதுத் துறை நிறுவனங்கள் நட்டமடைய இரண்டே காரணங்கள்தான். முதலாவது, உழைப்பில் அலட்சியம்; இரண்டாவது, அரசியல் தலையீடு. இந்த இரண்டும் எந்த ஒரு நிறுவனத்தையும் நட்டத்தில் தள்ளிவிடும். உழைப்பைத் தர மறுப்பவரைத் தட்டிக் கேட்க முடியாதபடியும், தனியாருக்கு இணையாக சந்தைப் போட்டியில் இறங்குவதையும் அரசியல் தலையீடு தடுக்கிறது.
இதற்கு ஓர் உதாரணம் ஆவின் நிறுவனம். தனியார் நிறுவனங்கள் அரை லிட்டர் பாலை ரூ.21-க்கு விற்றுக் கொண்டிருந்தபோது, ஆவின் நிறுவனம் அதைவிட ரூ.3 ரூபாய் விலை குறைவாகத்தான் விற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும், ஆவின் பால் விலை உயர்வை மட்டுமே அரசியல் கட்சிகள் எதிர்த்தன. இப்போது, தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தியுள்ளன. இப்போதும் ஆவின் பால்தான் விலை குறைவு. இருந்தும், ஆவின் பால் விலையைக் குறைக்கத்தான் அரசியல் கட்சிகள் போராடுகின்றனவே தவிர, ஆவின் நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த அந்தக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
சந்தை மிக லாபகரமாக இருந்தும், நட்டத்தில் இயங்குகிறது போக்குவரத்துத் துறை. ஒரே வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் அடையும் லாபம், போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் அரசியல் தலையீடு, ஊழல், தொழிலாளர்கள் உழைப்பில் அலட்சியம். பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம், போக்குவரத்துக் கழகங்களின் நட்டத்தை ஈடு செய்ய ஆண்டுதோறும் தரப்படுகிறது.
சந்தையில் போட்டியிடவும் முடிவதில்லை; ஆதரவான சந்தை வாய்ப்பால் பயன்படவும் வழியில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், பொதுத் துறை நிறுவனங்களில் அரசியல் தலையீடும், அதனால் திறமையற்ற ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுவதும்தான்.
நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தாலும், அதில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும், அவரவர் சம்பள விகிதத்துக்கு ஏற்ப, நிரந்தரப் பங்குதாரர்களாக மாற்றிவிடுவதே தொழிலாளர்களுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும். பணியாற்றுவோரும் உழைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு நிறுவனத்தின் தவறான முடிவுகளையும், சந்தையைப் பயன்படுத்தத் தவறும் தருணங்களையும் அவர்கள் சுட்டிக் காட்டுவதோடு, அரசியல் தலையீடுகளையும் எதிர்ப்பார்கள்.
மகாத்மா காந்தி சொன்ன, "செய் அல்லது செத்துமடி' தத்துவத்தின் மறு ஆக்கம்தான் இன்றைய பொருளாதார மேலாண்மைத் தத்துவம்:
எழுமின் அல்லது விழுமின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.