சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களும், சுதந்திர இந்தியாவின் நிர்மாணத்திற்காக உழைத்த தலைவர்களும் சமீபகாலமாக தேவையற்ற முறையில் விமர்சிக்கப்படுவதும், சர்ச்சைக்கு உள்படுத்தப்படுவதும் வேதனையளிக்கிறது. பிரதமர் நேருவால் சர்தார் வல்லபபாய் படேலின் முக்கியத்துவம் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதில் தொடங்கியது இந்த சர்ச்சை.
17 ஆண்டுகள் பண்டித நேரு பிரதமராக மக்கள் செல்வாக்குடன் பதவியில் தொடர்ந்ததால்தான் இந்தியாவில் ஒற்றுமை காப்பாற்றப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. ஒருவேளை, சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராகி இருந்து, அடுத்த இரண்டாண்டுகளில் அவர் மறைந்திருந்தால், இந்தியாவும் பாகிஸ்தானைப்போல அரசியல் நிலையற்றதன்மைக்குத் தள்ளப்பட்டு, சின்னாபின்னமாகியிருக்கக் கூடும்.
அதேநேரத்தில், நாம் இன்னென்றையும் மறந்துவிடக் கூடாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மூன்று பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளைத் தவிர, ஏனைய மாநில காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்தும் சர்தார் வல்லபபாய் படேல்தான் பிரதமராக வேண்டும் என்று விரும்பின. அந்த மூன்று மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் இரண்டு பாபு ராஜேந்திர பிரசாத் பிரதமராக வேண்டும் என்றும், ஒரு மாநில காங்கிரஸ் கமிட்டி, ஜவாஹர்லால் நேரு பிரதமராக வேண்டும் என்றும் கோரின.
இளைஞர் ஒருவர் பிரதமரானால்தான் நிர்வாகம் ஒருவரது தலைமையின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்படும் என்றும் அதன் மூலம் மட்டுமே ஒன்றுபட்ட இந்தியாவின் ஒற்றுமை காப்பாற்றப்பட முடியும் என்றும் அண்ணல் காந்தி தீர்க்க தரிசனத்துடன் சிந்தித்தார். அதன் விளைவாகத்தான் பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமராக வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அவரது கட்டளைக்கு சர்தார் வல்லபபாய் படேல் மறுப்பேதும் கூறாமல் துணைப் பிரதமராகச் செயலாற்ற சம்மதித்தார்.
சர்தார் படேல் இறந்தபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்த சேமிப்பு வெறும் 237 ரூபாய் மட்டும்தான். அவரது மகனோ, மகளோ எந்தவிதமான அரசுப் பதவியோ, உதவியோ, கட்சியில் பொறுப்போ பெறவில்லை என்பது மட்டுமல்ல, சர்தார் படேலின் மகள் ஆமதாபாதில் வறுமையுடன் போராடி இறந்தார். காந்திஜியின் வாரிசுகளைப் போலவே அவர்களையும் காங்கிரஸ் கட்சியோ, பிரதமர் நேருவோ சட்டை செய்யவில்லை.
சாதாரணமாக தலைவர்களின் பிறந்த தினம்தான் கொண்டாடப்படுமே தவிர, மறைவு நாளைக் கடைப்பிடிப்பது வழக்கமில்லை. தேசப்பிதா மகாத்மா காந்தி மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.
அக்டோபர் 31 சர்தார் படேலின் பிறந்த நாள். இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, சர்தார் படேலின் பிறந்த நாள் பெயருக்கு நாடாளுமன்றச் சடங்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்ததே தவிர, இந்திரா நினைவு நாளுக்குத்தான் காங்கிரஸ் அரசால் முன்னுரிமை தரப்பட்டது. அந்த முரண் பிரதமர் நரேந்திர மோடியால் திருத்தப்பட்டிருக்கிறது, அவ்வளவே.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, பாரதத்தின் இன்றைய பிரதமருக்கு அழைப்புக்கூட அனுப்பாமல் காங்கிரஸ் கட்சி விழா எடுத்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு காங்கிரஸூக்கு மட்டுமே சொந்தம் என்கிற கருத்தை பண்டித நேருவேகூட ஏற்றுக்கொள்ளமாட்டார். நேருவின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாத நரேந்திர மோடியை அழைக்காததில் தவறில்லை என்கிற சோனியா காந்தியின் வாதம் ஏற்புடையதல்ல. பிரதமரை பிரதமராகப் பார்க்க வேண்டுமே தவிர, தனி நபராகப் பார்ப்பது முறையல்ல.
ஜவாஹர்லால் நேரு வாழ்ந்த காலத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள், அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சோஷலிஸ்ட் கட்சியினர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, அச்சுத் பட்வர்த்தன், ஆச்சாரிய கிருபளானி, மது லிமாயி ஆகியோரின் வழியில் வந்தவர்கள்தான் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் ஆகியோர். நேருவின் கடுமையான விமர்சகர்களான அவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டு, பிரதமரை அழைக்காமல் விட்டிருப்பது தரக்குறைவான அணுகுமுறை.
சர்தார் படேலானாலும், ஜவாஹர்லால் நேருவானாலும், லால் பகதூர் சாஸ்திரியானாலும், இந்திரா காந்தியானாலும் அவரவர் வழியில் தேசத்தின் நிர்மாணத்திற்கு பங்களிப்பு நல்கியவர்கள். அது பா.ஜ.க.வானாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, கீழ்த்தரமான அரசியலுக்கு அந்தத் தலைவர்களைப் பயன்படுத்தி, அவர்களது மேன்மையைத் தரம் தாழ்த்தாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால், சரித்திரம் நம்மை மன்னிக்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

