இரு நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த "சான்சத் ஆதர்ஷ் கிராமத் திட்டம்' பிற மாநிலங்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. இந்தத் திட்டத்தின் நோக்கம் தமிழ்நாட்டில் ஏற்கெனவே தன்னிறைவு பெற்ற கிராமத் திட்டங்களில் இடம் பெற்றதுதான். இருப்பினும், இத்திட்டத்திற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிடலாம் என்பது புதிது.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது சொந்தக் கிராமம் அல்லது மனைவியின் கிராமத்தைத் தவிர்த்து வேறு ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அதை தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இதேபோன்று மாநில அரசுகள் ஊக்கப்படுத்தினால் இத்திட்டத்தை விரைவுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
கிராமத்தின் "தேவை கருதிய வளர்ச்சி'யாக இத்திட்டம் இருக்க வேண்டும், அவர்கள் மீது திணிப்பதாக அமையக்கூடாது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளது மிகவும் சரியான பார்வை. ஏனெனில், கிராமத்தின் தேவையைத் தீர்மானிப்பதில் ஏற்படும் தவறுகள்தான் இன்னமும் பல கிராமங்கள் தன்னிறைவு பெறாமல் இருக்கக் காரணம். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் விருப்பம் மட்டுமே நிறைவேறுவதுதான் இன்றைய கிராமங்கள் எதிர்கொள்ளும் அவலம்.
தமிழ்நாட்டில் எல்லாக் கிராமங்களுக்கும் சாலை வசதி உள்ளது. பல கிராமங்களில் "நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மக்கள் பங்கேற்புடன், திட்டச் செலவில் பாதியை ஏற்கச் செய்து தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்களுக்கு சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆனால், வயல்களின் ஊடாகச் செல்லும் இந்தச் சாலைகளின் மண் தன்மை என்ன, இங்கு தார்ச்சாலை அமைக்கலாமா அல்லது வெறும் மொறம்பு அல்லது ஜல்லி நிரப்புவது போதுமா போன்ற ஆய்வுகள் இல்லை.
அரசியல்வாதி தனது கமிஷன் உயர வேண்டும் என்பதற்காக தார்ச் சாலையை வலியுறுத்துவார். அதிகாரியும் ஒப்புக்கொள்வார். ஒரு மழைக்குக்கூடத் தாங்காமல் தார்ச் சாலை பாளம் பாளமாகப் பெயர்ந்தும், அழுந்தியும் போகும். அதைச் செப்பனிடுவதாக மேலும் ஒரு திட்டம் போடுவார்கள். இதுபோல, கிராமத் திட்டம் என்ற பெயரில் பல திட்டங்களுக்கு நிதி செலவிடப்படுகிறது. பயன் சொல்லும்படியாக இல்லை.
நகரத்தின் தொழில்நுட்பத்தை கிராமம் பெறுவதற்கும், கிராமத்தை சிறு நகரமாக்கும் முயற்சிக்கும் வேறுபாடு இருக்கிறது. குடிநீர் வசதி, மின் வசதி, சாலை மற்றும் போக்குவரத்து வசதி, பள்ளிக்கூடம் இவை இருந்துவிட்டால் அது தன்னிறைவு பெற்ற கிராமம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், இவை நகர வசதிகளின் நீட்டிப்பு, அவ்வளவே. இவையே தன்னிறைவை அளித்துவிடுவதில்லை.
கிராமவாசிகள் சிறுசிறு தேவைகளுக்காக நகரங்களுக்குச் செல்லாமலும், ஒவ்வொருவரும் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கான பொருளாதார வசதியுடனும் இருக்கும்போதுதான் அதைத் தன்னிறைவு பெற்ற கிராமமாகக் கருத முடியும். அதற்குத் தகுதியுடையவர்களாக அந்தக் கிராம மக்களை மாற்றுவதும் அதற்கான தொழில்நுட்பத்தையும், கடனுதவியையும், வழிகாட்டுதலையும் கொண்டு சேர்ப்பதுதான் அரசு செய்ய வேண்டியது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதன் பிறகு அந்த மக்களைத் தங்களுக்கான தேவையைத் தீர்மானிக்கச் செய்வதிலும்தான் இந்தத் திட்டத்தின் வெற்றி இருக்கிறது.
குறிப்பிட்ட கிராமத்தில் என்ன விளைகிறது, வேறு என்ன விளைவிக்க முடியும் என்கிற ஆலோசனை; அந்தக் கிராமத்தின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் வழிமுறைகளை சொல்லித் தருதல்; கறவை மாடுகள் வளர்ப்பதால் கிராமத்தின் பால் தேவையை நிறைவு செய்வதுடன் அதனை மதிப்பூட்டிய பொருளாக மாற்றும் குடிசைத் தொழில்களை உருவாக்குதல்; ரசாயனத் தீவனம் இல்லாத ஆடு கோழி வளர்ப்பு; சாதாரண காய்ச்சல், வயிற்றுப்போக்குக்கு முதலுதவி மற்றும் அடிப்படை மாத்திரைகள் பற்றிய விழிப்புணர்வை அந்தக் கிராமத்தில் பலருக்கும் உருவாக்குதல்; வங்கிச் சேமிப்பு,
மகளிர் குழுக்கள் மூலம் தங்கள் கிராமத்துக்கான பொது விநியோகப் பொருள்களை வாங்கிப் பகிர்தல் என பலவற்றையும் கிராம மக்களே தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அனைவரும் பொருளாதாரத்தில் மேம்படும்போதுதான், அந்தக் கிராமத்தை தன்னிறைவு பெற்றதாகச் சொல்ல முடியும்.
ஒரு கிராமத்து பெண் அல்லது ஆண், நகரத்தில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு சிற்றுந்தில் அல்லது நகரப் பேருந்தில் ஏறி வீடு செல்லும் நிலைமை இருக்கும்வரை, ஒரு கிராமம் தன்னிறைவு பெறாது. தன்னிறைவு அடைந்த கிராமம் என்பதுதான் அண்ணல் காந்தியடிகள் கண்ட "கிராம ஸ்வராஜ்' கனவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.