நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அடிமை இந்தியாவை ஆள்வதற்கு, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் இயற்றிய பல சட்டங்களை நாம் இப்போதும் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறோம். நடைமுறையில் இல்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத அந்தச் சட்டதிட்டங்களைக்காட்டி சில அரசு அலுவலர்களும், காவல் துறையினரும் அப்பாவி மக்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்பதுதான் அதைவிட அவலம்.
"தூய்மையான இந்தியா' என்பது குப்பை கூளங்களற்ற இந்தியா மட்டுமல்ல; ஊழலும் இல்லாத இந்தியாதான். சாமானிய மக்களைப் பாதிக்கும் ஊழல்களின் ஊற்றுக்கண், தேவையற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத சட்டதிட்டங்கள். குறைந்த அளவிலான சட்டதிட்டங்களும், சட்ட மீறல்களுக்கு அதிக அளவிலான தண்டனையும் என்பதுதான் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்தும்.
"சென்டர் பார் சிவில் சொசைட்டி', "விதி லீகல் சென்டர்' ஆகிய பொதுநல அமைப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காலனிய ஆட்சியில் சுதந்திரப் போராட்டம் தொடர்பான 25 சட்டங்கள், தனிமனிதப் பொருளாதாரச் சுதந்திரம் தொடர்பான 17 சட்டங்கள், தனிமனித உரிமைகள் தொடர்பான 19 சட்டங்கள் ஆகியவை தொடர்வதாகக் குறிப்பிடுகிறார்கள். அவசரநிலைச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது, தனியாரது சொத்துகளை அரசு ஏற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட 20 சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை இன்னும் அகற்றப்படாமல் தொடர்கின்றன.
2.43 மி.மீ. முதல் 3.52 மி.மீ. வரையிலான செப்புக் கம்பிகள் வைத்திருந்தால் அது சட்ட விரோதமென்றும், குற்றவியல் தண்டனைப்படி சிறைத் தண்டனைக்குரிய குற்றமென்றும் எப்போதோ பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தை சுதந்திர இந்தியா இன்னும் அகற்றாமல் வைத்திருக்கிறது. இந்த ஆண்டின் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் 287 காலாவதியான சட்டத் திருத்தங்கள் அகற்றப்படும் என்று சட்ட அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மாநிலங்கள் தொடர்பான 22 சட்டங்கள், சட்ட ஆணையத்தால் அகற்றுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட 72 காலாவதியான சட்டங்களில் இடம் பெறுகின்றன. அவற்றைப் பற்றிய கருத்துத் தெரிவிக்கும்படி மாநில அரசுகளிடம் கோரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமாக இருப்பவை 192 சட்டங்கள். இதற்கு முன்பு 1998-இல் வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதே தேவையில்லாத சட்டங்களை அடையாளம் காண்பதற்காக பி.சி. ஜெயின் தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. இப்போது நரேந்திர மோடி அரசு, பிரதமர் அலுவலகத்தில் செயலராக இருக்கும் ஆர். ராமானுஜம் தலைமையில் காலாவதியான சட்டங்களை அடையாளம் கண்டு பட்டியலிடத் தொடங்கியிருக்கிறது.
1998-இல், ஐந்து மாதக் கடும் உழைப்பும், 43 கூட்டங்களுக்கும் பிறகு ஜெயின் ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன்படி 1,382 மத்திய சட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் 700 சட்டங்கள் கையகப்படுத்தும் சட்டங்கள். 114 மாநிலங்களின் உரிமை சார்ந்தவை. 11 நாட்டுடைமைச் சட்டங்கள் வருவதற்கு முற்பட்ட சட்டங்கள் 166. பி.சி. ஜெயின் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து 315 சட்டத் திட்டங்களை அன்றைய வாஜ்பாயி அரசு ரத்து செய்தது.
கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின்போதும், காலாவதியான, தேவையற்ற சட்டங்களை அகற்றுவது பற்றிய சிந்தனை எழுந்தது. எந்தவொரு சட்டத்திற்கும் 25 அல்லது 50 ஆண்டு கால வரையறை விதிப்பது என்றும், அந்தக் காலத்திற்குப் பிறகு, அந்தச் சட்டத்தை மறுபடி பிறப்பிக்க வேண்டும் அல்லது சட்டம் செயலற்றதாகி விடும் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது.
மத்திய அரசின் இணையதளத்தில் 1,145 சட்டங்கள் காணப்படுகின்றன. இதில் திரும்பப் பெறப்பட்ட 21 சட்டங்கள் இப்போதும் அகற்றப்படாமலே இருக்கின்றன. காணப்படும் சட்டங்களில் 174 சட்டங்கள் 1900-க்கு முற்பட்டவை. அவற்றில் சில இந்தியக் குற்றவியல் சட்டம் - 1,860, இந்திய வாக்குமூலச் சட்டம் - 1,872 போன்றவை என்பதால், எல்லாமே தேவையற்ற சட்டங்கள் என்று கருதிவிட முடியாது.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் சட்டங்கள், உத்தரவுகள், ஆணைகள் ஆகியவை மீள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு, அரசு அலுவலகங்களில் லஞ்சம் அறவே இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நாமும் அதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றி அர்த்தமற்ற, தேவையற்ற சட்டதிட்டங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டால் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

