தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை என்றும், ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது என்றும் சொல்லப்படும் வேளையில், நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆறுதலாக இருக்கிறது.
கடந்த கல்வியாண்டில் (2014-15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்தனர். நிகழ் கல்வியாண்டில் 11,40,636 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களில் ஆறாம் வகுப்பில் 6,462 பேரும், 9-ஆம் வகுப்பில் 7,482 பேரும், 11-ஆம் வகுப்பில் 23,395 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
இந்தச் சேர்க்கை விவரத்தைப் பார்த்தாலே மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிக அதிகமாக உயர்ந்திருப்பதையும், நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் கணிசமாக உயர்ந்துள்ளதையும் காணலாம். ஆனால், தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விவரம் பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தும் அளவுக்குக்கூட இல்லை என்கிற மோசமான நிலை காணப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஏன் 23,395 பேர் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர் என்பதற்கு கல்வி அதிகாரிகள் இரண்டு காரணங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.2%; அரசுப் பள்ளிகளில் மட்டுமே விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்குகிறார்கள், இலவசப் பேருந்து பயண அட்டை கிடைக்கிறது என்று கூறியுள்ள காரணங்கள் சரியானதல்ல.
உண்மையான காரணம் அதுவல்ல. இந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படித்திருந்தாலும்கூட, இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால் அதே தனியார் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்பது முதல் காரணம். தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் கல்லூரிகளைக் காட்டிலும் கூடுதலாக (ஆண்டுக்கு சராசரியாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை) இருக்கிறது என்பதும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைப் பற்றி எந்தவித அச்சமும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்துகிறார்கள் என்பதும் மற்றொரு காரணம். மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களாலும்தான் அரசு மேல்நிலைப் பள்ளிகள் பெற்றோரையும், மாணவர்களையும் கவர்கின்றன.
பள்ளிக் கல்வித் துறை இன்னும் நுட்பமாக இந்தப் புள்ளிவிவரத்தை ஆய்வு செய்தால் வேறொன்றும் புலப்படும். இந்த மாணவர் சேர்க்கை அதிகரிப்பு நடைபெற்றுள்ள பள்ளிகள் யாவும், அந்தந்த ஊர்களில் நல்ல பள்ளி என்று பெயர்பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளாக இருக்கும். அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் பணிபுரியக் கூடிய பள்ளிகளாக இருக்கும்.
சமச்சீர் கல்வி; தமிழ் வழியில் படித்து எளிதில் தேர்ச்சி பெற முடியும்; கட்டணம் இல்லை; குறிப்பிட்ட அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள்; தங்கள் குழந்தை வேறு தவறான பாதைக்கு செல்லும் வாய்ப்புகள் இல்லாததாக பள்ளியின் கட்டமைப்பு, சூழல் உள்ளது என்பன போன்ற பல்வேறு சமூக - பொருளாதாரக் காரணங்கள்தான் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் மிக அதிகமான மாணவர் சேர்க்கை நடந்திருப்பதற்குக் காரணம். இலவசக் கணினி, இலவசப் பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி, ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் ஆகியவை அல்ல காரணம்.
இப்போது கல்வித் துறையின் கடமை, இவ்வாறு பெற்றோரும் மாணவர்களும் தேர்வு செய்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் எவை என்று கண்டறிவதும், அந்தப் பள்ளிகளில் மேலும் அதிகமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும் மட்டுமல்லாமல், கூடுதல் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை நியமித்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, மக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதுதான். இதே காரணிகளை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பொருத்திப் பார்த்து, குறைகளைக் களைவதும் மாணவர் சேர்க்கையைப் பரவலாக உயர்த்தவும் உதவும்.
நிகழாண்டு கலந்தாய்வில் பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்துள்ளதால், மதிப்பெண் சார்ந்த தேர்வுக்குத் தயார்படுத்தும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீதான மோகமும் அடுத்த ஆண்டு குறையத் தொடங்கும். அப்போது மேலும் பல ஆயிரம் மாணவர்கள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வரத் தொடங்குவார்கள். ஆகவே, 100% தேர்ச்சி காட்டியுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை (தற்போது 1,164 பள்ளிகள்) மேலும் இரு மடங்காக உயர்த்த வேண்டும். மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும்.
இத்தகைய நம்பகத்தன்மை அரசுத் தொடக்கப் பள்ளிகளின் மீது ஏற்படவில்லை. ஆதலால், சேர்க்கையும் அதிகரிக்கவில்லை. தொடக்கப் பள்ளியைப் பொருத்தவரை, எழுத்தைக் கூட்டிப் படித்தல், சிறு கணக்குகளைப் போடுதல் ஆகியவற்றால்தான் தங்கள் குழந்தைகளின் அறிவுத் திறனைப் பெற்றோர் அளவிடுகிறார்கள். இந்த எளிய கற்பித்தலையும் செய்யத் தவறும் அர்ப்பணிப்பற்ற ஆசிரியர்களால்தான் அரசு தொடக்கப் பள்ளிகளில் தரமும் நன்பகத்தன்மையும் குறைந்து வருகின்றன.
தொடக்கப் பள்ளிகளை உள்ளாட்சி அமைப்புகளிடமே முன்புபோல ஒப்படைத்துவிடும்போது, அதன் ஆசிரியர்கள் அதே ஊராட்சியில் வசிக்கும் நிலை உருவாகும். அப்போதுதான் கிராம மக்களுக்கும் அந்தப் பள்ளி, ஆசிரியர் மீது நம்பகத்தன்மை ஏற்படும். தரமும் தகுதியும் இல்லாத ஆசிரியர்களை உள்ளூர் மக்களே அடையாளம் கண்டுகொள்வார்கள். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை மட்டுமே அரசு தன் பொறுப்பில் மேலதிகமான கவனத்துடன் சிறப்பாக நடத்த முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

