நாகர்களுக்கான தனி நாடாக அகண்ட நாகாலாந்து அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடி வரும் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான "நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (இசாக், முய்வா பிரிவு)' பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசுடன் கடந்த திங்கள்கிழமை அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை இரு தரப்பினருமே வெளியிடவில்லை.
விவரங்களை வெளியிடாமல் இருப்பதற்கு உரிய காரணம் இருக்கக் கூடும். இருப்பினும், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அகண்ட நாகாலாந்து என்கிற தனிநாடு கோரிக்கை இந்த அமைதி ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்காது. நாகாலாந்து மக்களுக்கு எந்தெந்த வகையில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படும், இந்திய அரசு எவ்வாறு புதிய சமூக, பொருளாதார ஏற்றங்களை நாகர்களுக்கு அளிக்கும் என்பதாகத்தான் ஒப்பந்தம் அமைந்திருக்கும்.
ஒப்பந்தத்தின் அம்சங்கள் எவை என்று தெரியாத நிலையிலும்கூட, அஸ்ஸôமுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால், நாகாலாந்து ஒப்பந்தத்தை எதிர்ப்போம் என்று அஸ்ஸôம் முதல்வர் தருண் கோகோய் அறிவித்துள்ளார். மிசோரம் மாநில முன்னாள் முதல்வர் úஸôரம் தங்கா, இந்த ஒப்பந்தத்துக்கான முன்முயற்சிகளை பல்லாண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டவர் என்ற முறையில் வரவேற்றுள்ளார். பிரச்னைகள் தீர்ந்து இனி அமைதி நிலவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அஸ்ஸôம், அருணாசலப் பிரதேசம், மிசோரம், மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் நாகர் பழங்குடியினத்தவர் பரவலாக வாழ்வதால், பல்வேறு நிலைகளில், பல பிரச்னைகளுக்கும் பேசித் தீர்வு காண உதவும் என்பதாலேயே இந்த அமைதி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுவே தீர்வு அல்ல. தீர்வுக்கான ஒரு தொடக்கம் மட்டுமே.
இந்தியாவில் இன்று நிலவும் மதம், நிலப்பரப்பு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது உண்மையே. பிரிட்டிஷ் ஆட்சியின்போது இன்றைய வடகிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த பழங்குடியினர் மத்தியில் கிறிஸ்தவ மிஷன்கள் கல்வி, மருத்துவம் வழங்கின. பழங்குடி இனத்தவரில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியபோது 1918-ஆம் ஆண்டிலேயே நாகர் மன்றம் (நாகா கிளப்) தொடங்கப்பட்டு, நாகர் பழங்குடியினர் வசிக்கும் நிலப்பரப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குள் கொண்டு வராமல் தனியான சட்ட வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று சைமன் கமிஷனிடம் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.
நாகர் மன்றம் பின்னர் நாகா தேசிய கவுன்சிலாக வடிவம் பெற்றபோது, அதன் தலைவராகப் பொறுப்பேற்ற பிúஸô (இவர் விடுதலைப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸýடன் இணைந்து இந்திய தேசிய ராணுவத்துக்காகப் போராடியவர்) இந்தப் போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்தார். 1952-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் பிúஸô நடத்திய பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படவில்லை. இதற்கு மிகப் பெரும் தடையாக இருந்தது தனிநாடு கோரிக்கைதான்.
பின்னர், 1975-இல் இந்திய அரசுக்கும், நாகா தேசிய கவுன்சிலுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டபோது, அதனை நாகர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதி உருவானதுதான் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில். இதுவும்கூட இரண்டு பிரிவாக உடைந்தது. இசாக், முய்வா பிரிவு மட்டுமே தற்போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கப்ளாங் பிரிவு இதில் கையொப்பமிடவில்லை.
இந்திய வீரர்கள் 18 பேரை அண்மையில் கொலை செய்த கப்ளாங் பிரிவினர், மியான்மர் நாட்டு எல்லைக்குள் தப்பியோடி தலைமறைவாயினர். இருப்பினும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதிகளைத் தாக்கி, முக்கிய முகாமை அழித்து பலரைக் கொன்றனர். இந்தத் தாக்குதலின்போது, இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்கவில்லை என்று மியான்மர் மறுக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்த நிலையில், இத்தகைய ஒப்பந்தம் நாகர் அமைப்புகளை இந்திய அரசின் பக்கம் ஈர்க்கவும், தொடர்ந்து தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் கப்ளாங் பிரிவைத் தனிமைப்படுத்தவும் மிகப் பெரிதும் உதவும். தீவிரவாதத்தில் நம்பிக்கை இல்லாத பல அமைப்புகளும் மெல்ல அரசின் பக்கம் சேர்ந்து நிற்கும். இத்தகைய ஆரோக்கியமான சூழல்தான் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வுக்கான பாதையாக அமையும்.
நாகர்களுக்குத் தனி நாடு என்பது இனி சாத்தியமில்லாதது. இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியது. ஒன்றுபட்ட மாநிலம் கோருவது மட்டுமே சாத்தியமானதாக இருப்பதால், அஸ்ஸôம், அருணாசலப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளை மாற்றியமைத்து, நாகாலாந்துடன் இணைப்பது குறித்து பேசுவதற்கு கோரிக்கை எழ வாய்ப்பு உள்ளது. இதற்கான வாய்ப்புகளும்கூட மிகக் குறைவே. அஸ்ஸôமுக்கு பாதிப்பு என்றால் எதிர்ப்போம் என்று அந்த மாநில முதல்வர் இப்போதே குரல் கொடுத்துள்ளார்.
ஆகவே, நாகர்கள் வடகிழக்கு மாநிலங்களில் எங்கே வாழ்ந்தபோதும் அவர்களுக்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான அனைத்து வழிமுறைகளையும், சலுகைகளையும் சட்டப்படியும், இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்காமலும் கேட்டுப் பெறுவது மட்டுமே சரியான ஜனநாயக ரீதியிலான போராட்டமாக இருக்கும். வன்முறையாலும், தனி நாடு கோரிக்கையாலும் எதையும் சாதிக்க முடியாது. அதனால், நாகர்களுக்குப் பயனும் கிடைக்காது. இதை நாகர்கள் உணரத் தொடங்கியதன் அடையாளம்தான் இந்த ஒப்பந்தம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.