குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் நடத்திவரும் இடஒதுக்கீடு போராட்டத்தையும், இரு நாள்கள் நடந்த வன்முறைகளையும் இந்தியா முழுவதும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. படேல் சமூகம் செல்வாக்குள்ள முன்னேறிய சமூகம். வைரம், ஜவுளி, வேளாண்மை, பால் உற்பத்தி என்று வர்த்தகத்தில் கோலோச்சுகிற சமூகம்.
படேல் சமூகத்தினர் 1.40 லட்சம் பேர் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். தென்னாப்பிரிக்கா, கனடா, சிங்கப்பூர் என படேல் சமூகத்தினர் இல்லாத நாடே கிடையாது. அப்படியிருந்தும் பொருளாதார ரீதியாக வசதி படைத்த இவர்கள் இடஒதுக்கீட்டைப் பிரச்னையாக்கி ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி.
இரண்டாவது கேள்வி, படேல் சமுதாயத்தைச் சேர்ந்த ஆனந்திபென் படேல் மாநில முதல்வராக இருக்கும்போது, அவரது அமைச்சரவையில் படேல் சமுதாயத்தினர் ஏழு பேர் இடம் பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வின் 121 எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அந்தச் சமூகத்தினர் என்கிறபோது, எதற்காக இத்தனை வன்முறையுடன், வன்மத்துடன் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் உள்ள அரசியல்தான் என்ன?
1990-இல் மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியபோது, இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய படேல் சமூகம், இப்போது ஏன் திடீரென்று தங்களைப் பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்கக் கோருகிறது? இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவும், முதல்வர் ஆனந்திபென் படேலை பலவீனப்படுத்தவும் பா.ஜ.க.வினர் சிலரே போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்களா அல்லது காங்கிரஸின் மறைமுக ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை.
அடுத்ததாக, ஹார்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் திடீரென அரசியல் களத்தில் குதித்திருப்பதன் நோக்கம் நேர்மையானதா? இவரை யாரேனும் பின்னின்று வழிநடத்துகிறார்களா? சமூக வலைதளங்களின் உதவியுடன் ஒரு பேரணியை நடத்த இவர் விடுத்த அழைப்புக்கு 5 லட்சம் பேர் திரளுகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் இருப்பது அரசியலா அல்லது நீறு பூத்த நெருப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்துவந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையா?
படேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்ட சமூகமாகக் கருத முடியாது என்பது மட்டுமல்ல, அந்த மாநிலம் இடஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஏற்கெனவே வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு அளவை 69 விழுக்காடாக மாற்றியபோதிலும், இப்போதும் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, யாரும் பாதிக்கப்படாமல் இடங்களை அதிகரித்து வழங்குகிறோம் என்று நீதிமன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும் பதில் மனு தாக்கல் செய்யும் நிலை இருக்கிறது. அதனால், படேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்து அவர்கள் கேட்கும் இடஒதுக்கீட்டை குஜராத் மாநில அரசு அளிக்க முடியாது.
இந்தப் பிரச்னை ஏதோ குஜராத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இந்தப் பிரச்னை நீறு பூத்த நெருப்பாக இடஒதுக்கீடு பெறாத சமூகத்தினர் இடையே நிலவி வருகிறது. தமிழகத்தில் சில சிறுபான்மை ஜாதிப் பிரிவுகளைத் தவிர, ஏனைய ஜாதியினர் அனைவரும் படிப்படியாகப் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அரசியல் காரணங்களுக்காக அறிவிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொண்டதன் விளைவுதான் உண்மையான பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தங்களை "மிகவும்' பிற்படுத்தப்பட்ட பிரிவினராக அறிவித்து தனி ஒதுக்கீடு கோரிப் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஹார்திக் படேல் தனது ஊடக உரையில், இட ஒதுக்கீடு பெறும் சமூகத்தினர் தங்களைவிட தகுதி குறைந்திருந்தும்கூட கல்வி, வேலைவாய்ப்புகளில் இடம் பெறுவதும், படேல் சமூகத்தினர் தகுதி இருந்தும் தவிர்க்கப்படுவதும்தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார். "அவர்களுக்கு கொடுக்காதீர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. எங்களுக்கும் அதேபோன்று கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். தருவது சாத்தியமில்லை என்றால், இடஒதுக்கீட்டையே ரத்து செய்துவிடுங்கள்' என்றும் கூறியிருக்கிறார். இதுதான் இந்தப் பிரச்னையின் அடிநாதம்.
விடுதலை பெற்று 69-ஆவது ஆண்டு விழா கொண்டாடிய நிலையிலும்கூட, இடஒதுக்கீட்டை மறுஆய்வுக்கு உள்படுத்தாமல் அப்படியே தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதால் ஏற்பட்டிருக்கும் சமூக மனக்கசப்பின் வெளிப்பாடுதான் இது போன்ற போராட்டங்கள். இடஒதுக்கீட்டால் பயன் அடைந்த குடும்பங்களே மீண்டும் மீண்டும் பயனடைந்து வருகின்றன. "கிரீமி லேயர்' முறையை அமல்படுத்தவோ, இடஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பு விதிக்கவோ அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. இடஒதுக்கீட்டுக்கு ஜாதியையோ, மதத்தையோ அடிப்படையாகக் கொள்ளாமல் "வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறை' என்கிற எம்.ஜி.ஆர். பார்முலாவை ஏற்றுக் கொள்ளவும் யாரும் தயாராக இல்லை.
இடஒதுக்கீடு முறைப்படுத்தப்படாவிட்டால், எல்லா மாநிலங்களிலும் இது நடக்கும். 1990-லும் சரி, 2015-லும் சரி, ஒரு வலிமையான பிரதமரின் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும்போது ஏதாவதொரு விதத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்னையின் அடிப்படையில் போராட்டம் எழுகிறதே, இது விதியா இல்லை சதியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

