மக்களுக்கு ஜனநாயகத்தில் இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பது என்பதிலும், வருங்கால இந்தியா வெளிப்படைத் தன்மையுள்ள நிர்வாகத்துடன் செயல்படக் கூடாது என்பதிலும் நமது அரசியல் கட்சிகள் உறுதியாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஜனநாயகம் பற்றியும், மக்களாட்சியின் மகத்துவம் பற்றியும் அவர்கள் வாய்கிழியப் பேசுவது எல்லாம் உதட்டளவு ஈடுபாட்டுடன்தான் என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மிகுந்த போராட்டத்துக்குப் பிறகும், அரசியல் நிர்பந்தத்தினாலும்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அப்படி இயற்றப்பட்ட சட்டத்தை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்துவிட முந்தைய மன்மோகன் சிங் அரசு முயற்சித்தது. ஒரு கட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மன்மோகன் சிங் அரசு எடுத்த முயற்சிகள், ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக முடக்கப்பட்டன.
தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெற்று, நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு தகவல் பெறும் உரிமைச் சட்டம் மேலும் பலப்படுத்தப்படும், அரசு நிர்வாகத்தில் அதிகமான வெளிப்படைத்தன்மை காணப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இப்போது பொய்த்து வருகிறது. ஆட்சியில் அமர்ந்து, அதிகாரத்தின் ருசியைப் பார்க்கத் தொடங்கிவிட்டவுடன், அரசியல் கட்சிகளின் கண்ணோட்டமும், செயல்பாடும் மாறிவிடுகிறது என்பதுதான் யதார்த்த நடைமுறையாக இருந்து வருகிறது.
அரசு நிர்வாகம் வெளிப்படையாக நடப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இன்றியமையாதது நமது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள். "இலக்கு அல்ல முக்கியம். அந்த இலக்கை எட்டுவதற்கு கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள்தான் முக்கியம்' என்கிற அண்ணல் காந்தியடிகளின் கோட்பாடுகளுக்கு நேரெதிரானதாக, அவரை தேசப்பிதாவாகக் கொண்டாடும் இந்திய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.
அரசியல் கட்சிகளின் கொள்கைகள், செயல் திட்டங்கள் போன்றவை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை என்பது மட்டுமல்ல, அது பற்றித் தெரிந்து கொள்ள விழைவதும் அனாவசியம். ஆனால், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை, சொத்து மதிப்பு போன்றவை பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு அவர்களாகவே தெரிவிக்காவிட்டாலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள விழைந்தால் அந்தத் தகவல்களைத் தெரிவிப்பதுதானே, மக்களாட்சியின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. அரசிடமிருந்து அலுவலகத்துக்கான நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறும் அரசியல் கட்சிகள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரப்படக் கூடாது என்பதுதான் பொது நல வழக்கின் அடிப்படை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய தகவல் ஆணையம் ஒருமனதாக முடிவெடுத்திருந்தது.
எலியும் பூனையுமாக இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையில் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் எதுவுமே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு அந்தக் கருத்தை உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. சம்பள உயர்வு, படிகள் அதிகரிப்பு, தங்களுக்குத் தாங்களே ஓய்வூதியம் தீர்மானித்துக் கொள்வது போன்றவற்றில் காட்டும் ஒற்றுமையை, இந்தப் பிரச்னையிலும் அரசியல் கட்சிகள் காட்டுகின்றன.
வேட்பாளர்கள் தேர்தல் பணிக்காகச் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டும் தொகைக்கும், நிஜமாக வசூலித்திருக்கிற, கட்சித் தலைமையால் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிற தொகைக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டு என்பது ஊரறிந்த ரகசியம். ஆளும் கட்சியாக இருந்தால், ஊழல் பணம் நன்கொடைப் பணமாகக் கணக்குக் காட்டப்படும். ஆங்காங்கே தேர்தல் நிதி வசூலிப்பதே, ஊழல் வருமானத்தை நன்கொடை என்கிற பெயரில் கணக்கில் கொண்டு வருவதற்குத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சந்தைப் பொருளாதாரமும், உலகமயமாக்கலும் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே ஏதாவது சில நிறுவனங்களின் தயவில்தான் தேர்தலுக்கான நிதியைத் திரட்டுகின்றன. பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் நினைத்தால், 543 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் இரண்டு முக்கியமான வேட்பாளர்களையும் நிதியுதவி என்கிற பெயரில் அடிமைப்படுத்திவிட முடியும். எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், பெரும்பாலான உறுப்பினர்கள் அந்த நிறுவனத்தின் கைப்பாவையாகச் செயல்படும் ஆபத்துகூட உருவாகலாம்.
இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், நமது அரசியல் கட்சிகளின் வரவு - செலவுக் கணக்குகள் அரசின் தணிக்கைக்கு உள்படுத்தப்படாவிட்டாலும், குறைந்தபட்சம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் செயல்பாடு மட்டுமல்ல, மத்தியப் புலனாய்வுத் துறை, நீதித் துறை ஆகியவையும் கூட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டாக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.