அரசு எதிர்பார்த்ததோ இல்லையோ, குடியரசுத் தலைவரிடமிருந்து இப்படியொரு மறைமுகக் கண்டனம் வரும் என்பதை நாம் எதிர்பார்த்தோம். மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் மாணவர்களிடையே காணொலி முறையில் உரையாற்றியபோது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவசரச் சட்டங்கள் பற்றித் தெரிவித்த கருத்தில் நமக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
கடந்த அரசில், ஆளும் கட்சியின் அவை முன்னவராகச் செயல்பட்டபோது பிரணாப் முகர்ஜி எதிர்கொண்ட அதே சிக்கலைத்தான் இப்போது நரேந்திர மோடி அரசும் எதிர்கொள்கிறது. குடியரசுத் தலைவர் கூறியிருப்பதுபோல, அசாதாரண சூழலில் பயன்படுத்துவதற்காக அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வாய்ப்பைத் தேவையே இல்லாமல் பிறப்பிப்பது நாடாளுமன்றத்தையே கேலி செய்வதாக அமைந்துவிடும். கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் 61 முறை அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன என்றால், இந்த ஆட்சியில் கடந்த ஏழு மாதங்களில் ஒன்பது அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் போனால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டிப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசு சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசியல் சட்டம் இடமளிக்கிறது. இதுவரை நான்கே முறைதான் இப்படி சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
"அவை கூடி விவாதித்து, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதத்தில் நியாயமிருந்தால் போதிய திருத்தங்களை உள்படுத்தி சட்டங்களை நிறைவேற்றுவது என்பதுதான் மக்களாட்சியில் நாடாளுமன்றத்தின் கடமை. சட்டங்களை இயற்றும் விவகாரத்தில் ஆளும்
கட்சியைப் போலவே, எதிர்க்கட்சிகளுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அவசரச் சட்டங்களை இயற்றும் பிரச்னையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும்' என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தி இருப்பது அனுபவப்பூர்வமான உண்மை.
ஆளும் கட்சி அவசரச் சட்டங்களைக் கொண்டு வருவதை எச்சரிக்கும் அதேநேரத்தில், எதிர்க்கட்சியினரின் நடவடிக்கையையும் குடியரசுத் தலைவர் விமர்சிக்கத் தவறவில்லை. "நாடாளுமன்றத்தின் அலுவல்களில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி, அவை செயல்படாமல் தடுப்பது அதிருப்தி அளிக்கிறது. உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை விவாதத்தில் காட்ட வேண்டுமே தவிர, அவை நடவடிக்கைகளை முடக்குவது சரியான அணுகுமுறையல்ல' என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார் பிரணாப் முகர்ஜி.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் முறைப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது விதி. அதுமட்டுமல்ல. அதற்கு நடுவில் அவை கூடிவிட்டால், கூடிய ஆறு வாரங்களில் அவசரச் சட்டத்தை முறைப்படுத்தியாக வேண்டும். அரசியல் சட்டப் பிரிவு 108-இன்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, அந்த மசோதாவை நிறைவேற்ற முடியும்.
நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, அவசரச் சட்டத்தின் மூலம் அந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கான காரணத்தை ஏதாவது ஓர் அவை நிராகரித்திருக்க வேண்டும். அதற்கு அவை செயல்பட்டாக வேண்டும். அவையே நடக்காமல் செய்வதன் மூலம் கூட்டுக் கூட்டம் நடைபெறாமல், அவசரச் சட்டத்தைக் காலாவதியாக்கிவிட முடியும். அதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் திட்டம்.
நரேந்திர மோடி அரசு நிலக்கரிச் சுரங்க ஏலத்திற்கு அவசரச் சட்டம் நிறைவேற்றியது புரிந்துகொள்ள முடிகிறது. உச்சநீதிமன்றக் கெடுவும், மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கவும் அது அவசரத் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால், காப்பீட்டு மசோதாவும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவும், மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவும், குடியுரிமைச் சட்ட மசோதாவும் அவசர அவசரமாக அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை. வலியப் போய் எதிர்க்கட்சிகள் விரித்த வலையில் நரேந்திர மோடி அரசு விழுந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சியுடையது என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காகத்தான் அமைச்சரவையில் நாடாளுமன்றத் துறைக்கென்றே அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் எதிர்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மசோதாக்கள் நிறைவேறுவதை உறுதி செய்வது வழக்கம்.
அவையை முடக்குவது, விவாதங்களே நடைபெறாமல் கூட்டத்தொடர் முடிவுக்கு வருவது போன்றவை வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் தொடங்கியது. அதைத் தொடங்கி வைத்த பெருமையும் காங்கிரûஸத்தான் சாரும். 14-ஆவது மக்களவையில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, எதிர்க்கட்சியான பாஜகவும் அதே நடைமுறையைக் கடைப்பிடித்தது.
கடந்த 15-ஆவது மக்களவையில் கொண்டு வரப்பட்ட 326 மசோதாக்களில் 177 மசோதாக்கள்தான் நிறைவேற்றப்பட்டன. மிக அதிகமான மசோதாக்கள் காலாவதியானது அந்த மக்களவையில்தான். பாஜக அவை நடவடிக்கைகளை முடக்கியதுதான் அதற்குக் காரணம். இப்போது அதே உத்தியை எதிர்க்கட்சிகளும் கடைப்பிடிக்கின்றன.
ஆளுங்கட்சியின் அனுபவமின்மையைச் சொல்வதா, எதிர்க்கட்சிகளின் பொறுப்பின்மையைச் சொல்வதா, இல்லை இந்திய ஜனநாயகத்தின் கஷ்டகாலத்தை நினைத்து நொந்து கொள்வதா என்று தெரியவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.