தணிக்கை அரசியல்!

மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக இருந்த பிரபல நாட்டியத் தாரகை லீலா சாம்சனும் அவரது குழுவிலிருந்த ஒன்பது பேரும் பதவி விலகி இருக்கிறார்கள்.
Updated on
2 min read

மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக இருந்த பிரபல நாட்டியத் தாரகை லீலா சாம்சனும் அவரது குழுவிலிருந்த ஒன்பது பேரும் பதவி விலகி இருக்கிறார்கள். மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகத் திரைப்படத் தயாரிப்பாளரும், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநரான கோவிந்த் நிஹலானியின் சகோதரருமான பஹலாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திரைப்படத் தணிக்கைத் துறையில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், அதன் அன்றாட அலுவல்களில் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் அளவுக்கதிகமான தலையீடுகள் இருப்பதாகவும் லீலா சாம்சன் தனது குழுவினரின் பதவி விலகலுக்குக் காரணம் கூறியிருப்பது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்பதும், தணிக்கைத் துறையின் நடவடிக்கைகளில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது என்பதும் புதிய குற்றச்சாட்டு ஒன்றும் அல்ல.

லீசா சாம்சனும் அவரது குழுவினரும் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் மத்தியத் தணிக்கைக் குழுவில் நியமிக்கப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தணிக்கைக் குழுவில் பதவி வகித்தவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தணிக்கைக் குழுவின் தலைமை அதிகாரியாக இருந்த ராஜேஷ் குமார் ஒரு திரைப்படத்தை விரைந்து தணிக்கை செய்வதற்காகப் பணம் கேட்டார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவத்தின்போது லீசா சாம்சன்தான் தணிக்கைக் குழுவின் தலைவராக இருந்தார். அப்போதெல்லாம் அவரது கண்களுக்குப் புலப்படாத "தணிக்கைக் குழுவில் ஊழல் புரையோடிப் போயிருக்கும்' நிலைமை, இப்போது திடீரென்று புரியத் தொடங்கியது வியப்பாக இருக்கிறது.

திரைப்படத் தணிக்கைத் துறை அதிகாரிகள் படுத்தும் பாட்டால் பல தயாரிப்பாளர்கள் வாய்விட்டு அழுத சம்பவங்கள் ஏராளம்.

அதிகாரிகளை நன்றாகக் கவனித்துக் கொள்ளும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தணிக்கைக்கு உள்படுத்தப்படாமலே சான்றிதழ் வழங்கப்படுவதும், சாதாரண, சாமானிய தயாரிப்பாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும் தணிக்கை அலுவலகங்களில் போய் அமர்ந்து வேடிக்கை பார்த்தாலே தெரியும். ஆனால், மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராக இருந்த லீலா சாம்சனுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது.

தனது பதவிக் காலத்தில் ஒரு நாள் மட்டும்தான் அலுவலகத்திற்கே சென்றிருக்கிறார் லீலா சாம்சன் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, இத்தனை நாள் தலைவராக இருந்த லீலா சாம்சன் இதுபற்றி இதுநாள் வரை ஒரு குறிப்போ, கடிதமோ அமைச்சருக்கு எழுதவில்லை. பாஜக அரசு அமைந்தபோது, மரபுப்படி அவரும் குழுவினரும் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால், விலகவில்லை. அரசும், அவர்களைப் பதவி விலகச் சொல்லி வற்புறுத்தவில்லை. இதுதான் உண்மைநிலை எனும்போது, இப்போது லீலா சாம்சன் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன?

"தேரா சச்சா செளதா' என்கிற பஞ்சாபிய சீக்கியர் பிரிவின் மதத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர். இவருக்குப் பலவித தெய்வீக சக்திகள் இருப்பதாக அவரது பக்தர்கள் நம்புகிறார்கள். அவரது அந்த சக்திகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான் "மெசஞ்சர் ஆப் காட்' (தேவதூதன்).

அவரது பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தத் திரைப்படத்திற்கு மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுத்தது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "இந்தத் திரைப்படம் ஒருவர் மீது கண்மூடித்தனமான பக்தியையும், மூட நம்பிக்கையையும் பரப்புகிறது' என்பது. அந்தத் திரைப்படம், உயர்நிலை திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் சில நிபந்தனைகளுடன் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது. தங்களால் நிராகரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு உயர்நிலைக் குழு சான்றிதழ் வழங்கிவிட்டதுதான் லீலா சாம்சன் குழுவினரின் கோபத்துக்கும், பதவி விலகலுக்கும் காரணம்.

பாதாள பைரவி, வேதாள உலகம் காலத்திலிருந்து, இதுபோல எத்தனை எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால், ஆடி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், திருமலை தென்குமரி, அன்னை வேளாங்கண்ணி என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்களைத் தணிக்கைக் குழு சான்றிதழ் அளிக்காமல் விட்டிருக்க வேண்டும். லீலா சாம்சனும், குழுவினரும் பதவி விலகியதற்குப் பின்னால் ஏதோ அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தோன்றுகிறதே தவிர, தணிக்ûக் குழுவின் நடவடிக்கைகளை சீர்படுத்தும் நோக்கமோ, தவறுகளைத் தட்டிக் கேட்கும் எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில், தணிக்கைக் குழுவின் செயல்பாடு பற்றிய மறுபரிசீலனைக்கான கட்டம் வந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. எந்தவிதமான தணிக்கைக்கும் உள்படாமல் தொலைக்காட்சி சேனல்களும், இணையதளமும், அச்சு ஊடகங்களும் செயல்படும்போது திரைப்படங்கள் மட்டும் இன்னும் தணிக்கைக்கு உள்படுத்தப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. விரசமும், ஆபாசமும், கவர்ச்சியும் திரைப்படங்களின் வெற்றிக்கு உதவாது என்பதை ரசிகர்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்கள்.

"விரல் நுனியில் தகவல்' என்கிற காலத்தில் திரைப்படத் தணிக்கை என்பது அதிகாரிகள் பணம் சம்பாதிக்கவும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களைத் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கவும்தான் உதவுமே தவிர, எதையும் தடுக்கவோ, மறைக்கவோ உதவாது. திரைப்படங்களை இன்னும் ஏன் தணிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதுதான் லீசா சாம்சன் குழுவினரும் எழுப்பியிருக்க வேண்டிய நியாயமான கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com